Monday, March 30, 2020

தடைப்படுகிறதா இதயத் துடிப்பு?



அறிகுறிகள்
இப் பிரச்சினைக்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை ஆபத்து இல்லாதது. அப்போது கடுமையான சோர்வு தலைகாட்டும். உடல் பலவீனமாக இருக்கும். கிறுகிறுப்பு ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும்போது மருந்து பாவித்தால் அவ்வறிகுறிகள் சீராகிவிடும். அடுத்த கட்டத்தில் சிறிய அளவில் அவ்வப்போது மயக்கம் வரும். மனக்குழப்பமும் ஏற்படலாம். தற்காலிகமாக சுயநினைவை இழக்கலாம். இந்த இரண்டாம் நிலைக்குப் பெரும்பாலும் மருந்து சிகிச்சை பலன் அளிக்கும். இல்லாவிட்டால், ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கருவியைப் பொருத்த வேண்டி இருக்கும்.
மூன்றாம் நிலைதான் ஆபத்தானது. இந்நிலைமையில் இதயம் துடிப்பதைத் திடீரென்று முழுமையாக நிறுத்திவிடும். அப்போது ஆழ்ந்த மயக்கம் வரும். சுயநினைவே இருக்காது. மூச்சுத்திணறல் ஏற்படும். சிலருக்கு இதயத்தின் சில பகுதிகள் தற்காப்புக்காகத் துடிக்கும். அப்போது அவருக்கு மயக்கம் தெளிந்தாலும் அடிப்படைப் பிரச்சினை சரியாகாது. மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படும். பலருக்கு உடனே ‘செயற்கைச் சுவாசம்’ கொடுத்தால்தான் இதயத் துடிப்பு மீளும். அப்போதுகூட இதயம் நிமிடத்துக்கு 30-க்கும் குறைவாகவோ அதிவேகமாகவோ துடிக்கும். இந்த இரண்டு நிலைமைகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அதைத் தவிர்க்க பயனாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எப்படி மாரடைப்பு வந்தவருக்கு முதல் ஒரு மணி நேரம் பொன்னானது, அதுபோன்று இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டவருக்கும் அந்த நேரம் பொன்னானது. அந்த நேரத்துக்குள் சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு.
சிலர் நினைப்பது போன்று மாரடைப்பும் இதயத் துடிப்பு முடக்கமும் ஒன்றல்ல. இதயத் தசைகளுக்கு குருதியை எடுத்துச் செல்லும் தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக்கொள்ளப்படுவதால் தான் மாரடைப்பு ஏற்படும். இதயத் தசைகளுக்கு மின்னோட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது தான் இதயத் துடிப்பு முடக்கம். அதேநேரம் மாரடைப்பு வந்தவருக்கு இதயத் துடிப்பு முடக்கமும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.
சிகிச்சை
இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு மருந்து சிகிச்சையுடன், தற்காலிகமாக ஒரு பேஸ்மேக்கர் கருவியை உடனே பொருத்தி அவரது இதயத் துடிப்பு முறைப்படுத்துகின்றது. பின்னர் நிரந்தரமாகவே ஒரு பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன. இதன் பயனாக இயல்பு வாழ்வுக்கு திரும்பிவிடலாம்.
‘பேஸ்மேக்கர்’ என்றால் என்ன?
இதயத் துடிப்பு குறைந்தவர்களுக்கு இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, மீண்டும் அதைச் சீராகத் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘செயற்கை இதய முடுக்கியே (Artificial Pacemaker) எனப்படுகின்றது. இதயத்தில் மின்கணு செய்யும் வேலையை இது செய்கிறது. இது பார்ப்பதற்கு ஒரு தீப்பெட்டி போலிருக்கும். எடை 30கிராம். இதில் பேட்டரி, ஜெனரேட்டர், சிறிய மின் சுற்று, மின்கம்பிகள் ஆகியவை இருக்கும்.
இதனை பாதிக்கப்பட்டுள்ளவருக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மார்பில் இடது அல்லது வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதவாறு இதைப் புதைத்து, மேற்தோலைத் தையல்போட்டு மூடிவிடுகின்றனர். இதயத்துக்குச் செல்லும் கழுத்துப் பெருஞ்சிரை (Carotid vein) குருதிக் குழாய் வழியாக இதன் மின்கம்பிகள் இதய அறைகளுக்குள் கொண்டுசெல்லப்பட்டு பொருத்தி விடப்படுகின்றன. இது ஒரு கடிகாரத்தைப் போன்று இயங்கிக்கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனை தடவை துடிக்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ப மின்தூண்டல்களை உருவாக்கி இது இதயத்துக்கு அனுப்பும். அதனால் இதயம் தூண்டப்பட்டு துடிப்பு சீராகிவிடும். இதில் உள்ள மின்கலத்தின் ஆயுள்காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இதை மாற்றிக்கொள்வது அவசியமானது.

No comments: