Monday, March 30, 2020

அபிஜித் நக்ஷத்திரம் அறிவோமா?


பல்வேறு சூட்சமங்களை உள்ளடக்கிய உன்னதமான கலை தான் ஜோதிடம்.எந்த மனிதராலும் ஆரூட சூட்சமங்களை அவர்தம் ஆயுளுக்குள் அறிந்து விட முடியாது.அதனாலேயே ஜோதிடத்தை சிலர் பழிக்கிறார்கள். ஆயினும் இது அழிவற்ற சாஸ்திரம் என்பது உறுதி.

சரி... இன்று நாம் அதிகம் கேள்வி படாத ஒரு நக்ஷத்திரம் குறித்து காண்போமா??அந்த நக்ஷத்திரத்தின் பெயர் அபிஜித் என்பதாகும்.இந்த நக்ஷத்திரத்திற்கு துருவ நக்ஷத்திரம், அகத்தியர் நக்ஷத்திரம் மற்றும் திரிசங்கு நக்ஷத்திரம் என்றும் பெயருண்டு.இதை அறிவியல் மற்றும் ஆன்மீக பூர்வமாக அணுக முயற்சி செய்துள்ளேன்.பார்ப்போம் வாருங்கள்.

புராண வரலாறு.

பெரும்பாலும் இந்த கதையை சொல்ல பலருக்கு தயக்கம் உண்டு.இருப்பினும் கதையில் உள்ள நேர்மறை விஷயங்களை உள்வாங்கி கொள்வோம் நீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சும் அன்னப்பறவை போல.

சந்திரனின் சல்லாபத்தால் குரு பகவானின் மனைவியான தாரையை கவர்ந்து சில காலம் வாழ்ந்து அந்த தாரைக்கு அபிஜித் என்று ஒரு நக்ஷத்திரம் ஒதுக்கினார் என்றும் பிறகு சிவ பெருமான் கோபத்திற்கும் தக்ஷணனின் சாபத்திற்கும் ஆளாகினார் என்றும் தாரை மூலம் புதனிற்கு தகப்பன் ஆனார் என்பதும் புராண வழி செய்தி.தரமிழந்து தாரம் மறந்து தாரையை கவர்ந்ததால் வளர்ந்து தேய்ந்து சந்திரன் அல்லல் படுகிறார் என்று தோன்றுகிறது. இதுவே சந்திரன் கெட்டது பெண்ணாலே என்னும் சொல்லாடலின் சூட்சமம். தாரை குரு பகவானிடமே மன்னிப்பு கேட்டு சென்ற பிறகு அபிஜித் தனது நக்ஷத்திர அந்தஸ்தை இழந்தது என்று உரைப்போரும் உண்டு.

இந்த கதை சொல்லும் சேதி யாதெனில் மனைவியர் இருக்க பிறன் மனை நோக்கிய சந்திரன் செய்ததும் தவறு.குரு பிரஹஸ்பதி லௌகீக வாழ்வில் நாட்டமில்லாமல் சந்நியாசி போல் இருந்தமையும் தவறு. திருமண வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதை போல கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக இந்த கதை நமக்கு கூறப்படுகிறது.

அபிஜித் நக்ஷத்திரம்.

அறிவியல் பூர்வமாக பார்த்தோமேயானால்
வான்வெளியில் லைரா(lyra) என்னும் நக்ஷத்திர கூட்டத்தில் வேகா என்னும் நக்ஷத்திரம் தான் அபிஜித் என அறியப்படுகிறது.இது நக்ஷத்திர மண்டலங்களில் ஐந்தாவது அதிக ஒளி பொருந்திய நக்ஷத்திரமாக கருத படுகிறது. மகர ராசி மண்டலத்தில் வெறும் நான்கு பாகைகளுக்குள் அடங்கி விடுகிறது.நான்கு வீதிகள் ஒன்றினையும் இணைப்பு போல இந்த நக்ஷத்திரம் அமைந்துள்ளது.

மகர ராசியின் உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள நக்ஷத்திரம் இதுவாகும்.வேத ஜோதிட துவக்க காலகட்டத்தில் தசா புத்தி கணிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியதால் இந்த நக்ஷத்திரம் மேலே கூறிய உத்திராடம் திருவோணம் நக்ஷத்திரங்களில் உள்ளடக்கப்பட்டது.

அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் யார்?

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படலாம்.நாம் அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளோமா என்று.தோராயமாக கூற வேண்டும் என்றால் உத்திராடம் நான்காம் பாதம் மற்றும் திருவோணம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்களாக இருந்து உத்திராடம் நக்ஷத்திரத்தில் பிறப்பு தசையான சூரிய தசை அதிக பட்சம் பதினொன்று மாதங்கள் இருந்தாலோ திருவோணம் நக்ஷத்திரத்தில் பிறந்து பிறப்பு தசையான சந்திர தசை குறைந்த பட்சம் எட்டரை ஆண்டுகள் இருந்தாலோ அவர்கள் அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளார்கள் என்று பொருள்.

அபிஜித் நக்ஷத்திரத்தின் சிறப்பம்சங்கள்.

அபிஜித் நக்ஷத்திரத்தின் பொருள் வெல்ல முடியாதவன் என்பதாகும்.மஹா பாரதத்தில் துரியோதனன் குருஷேத்ர போரை அபிஜித் நக்ஷத்திரத்தில் துவங்கவே விரும்பினான்.அதை உணர்ந்து கொண்ட கிருஷ்ண பரமாத்மா அபிஜித் நக்ஷத்திரத்தை வான்வெளியில் கௌரவர்கள் கண்ணில் படாமல் மறைத்து போரை திருவோண நக்ஷத்திரத்தில் கௌரவர்களை துவங்கும் படி சூழ்நிலையை ஏற்படுத்தினார்.ஏனெனில் ஒருவேளை துரியோதனன் அபிஜித் நக்ஷத்திரத்தில் போரை துவக்கி இருந்தால் நிச்சயமாக அவனே போரை வென்று இருப்பான்.அதை கிருஷ்ணரும் உணர்ந்து இருந்தார்.இந்த நக்ஷத்திரத்தை விஷ்ணுவே ஆளுமை செய்கிறார்.

மேலும் படைப்பு கடவுளான பிரம்மதேவன் இந்த நக்ஷத்திரத்தில் அவதரித்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாத்ரு காரகனியாகிய சந்திரனும் ,பித்ரு காரகனாகிய சூரியனும் ஒருங்கே ஆட்சி செய்யும் நக்ஷத்திரம் இதுவென்று கூறப்படுகிறது. ஆயினும் சூரியனே இந்த நக்ஷத்திரத்தின் நாதன் என்று அறியப்படுகிறது.

மேலும் ஐப்பசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் கேட்டை நக்ஷத்திரத்தில் குந்தி தேவி தர்மனை தர்ம தேவனை நாதனாய் நினைத்து பெற்றெடுத்தாள் என்று கூறுகிறது பாரதம்.அதனாலேயே பன்னிரண்டு மணிக்கு முன்பு மற்றும் பின்பு வரும் பன்னிரண்டு நிமிடங்களும் அபிஜித் முகூர்த்தம் என்று அறியப்படுகிறது. அந்த முகூர்த்தம் விசேஷமானதாக கருத படுகிறது.

அபிஜித் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்.

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் மிக்கவர்களாகவும்,படிப்பளிகளாகவும் படைப்பாளிகளாகவும், பேரும் புகழும் அடையும் அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள்.பொருளாதார முன்னேற்றம் என்பது 27 வயதிற்கு பின்பாகவே அமையும்.அதாவது குரு தசையின் இரண்டாம் பகுதியில் இருந்து முன்னேற்றங்கள் துவங்கும்.

உயர் பதவி என்பது தானாகவே அமையும்.ஆயினும் சனி சந்திரனோடு கூடினால் கடுமையாக தொழிலில் பிரச்சனைகளை தருவார்.ஆயினும் தூர தேசத்தில் பொருளீட்டும் சூழல் உருவாகும்.எத்துணை குழந்தைகள் இருந்தாலும் மூத்த பிள்ளைகள் மீதே பாசம் அதிகம் இருக்கும்.

பெண்கள் இந்த நக்ஷத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் ஆளுமைமிக்க பதவியில் இருப்பார்கள்.ஆயினும் முடி முதல் அடி வரை என அனைத்து பணிகளையும் கூச்சமில்லாமல் செய்வார்கள்.துரதிர்ஷ்டவசமாக சில தொல்லைகளுக்கு ஆளாகி ஆண்களை வெறுப்பார்கள்.. இருப்பினும் அது சரிப்படுத்தப்பட்டு இருபத்தியேழு வயதிற்கு மேல் திருமண யோகம் ஏற்பட்டு நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.

குழந்தைகளுக்கு தொல்லைகள் வராத வண்ணம் இருக்க பெருமாள் சந்நிதியில் குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுத்து வாங்குவது அவர்களுக்கு ஏற்படும் கண்டதை குறைக்கும்.

அபிஜித் நக்ஷத்திரம் குறித்து அறிந்தவற்றை கூறி உள்ளோம்.அடுத்து உப கிரகங்களான மாந்தி,குளிகன் குறித்து காண்போம்.

......நன்றி.......

No comments: