Sunday, July 8, 2018

சூப்பர் கஷாயம்! சளியை விரட்ட

கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீட்டில், அதுவும் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் இந்த கஷாயம் உடல்வலி, ஜலதோஷம், தொண்டை கரகரப்பு இப்படி எல்லா தொல்லைகளுக்குமே மிகவும் ஏற்ற ஒரு மருந்து. இந்த பிரச்சனைகள் ஆரம்பிக்கும் போதே இந்த கஷாயத்தை போட்டுக் குடித்து விட்டால் பிரச்சனைகள் குறையும். ஜாஸ்தி தொந்தரவு இருந்தால் பின்பு மருத்துவரிடம் சென்று விடுங்கள். அஜாக்கிரதையாக இருக்க கூடாது. இந்த சூப்பர் கஷாயத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாமா…. தேவையான பொருட்கள் :- சுக்கு (அ) இஞ்சி – ஒரு விரல்நீளத் துண்டு தனியா – 2 தேக்கரண்டி மிளகு – ½ தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி துளசி இலைகள் – சிறிதளவு கற்பூரவல்லி (அ) ஓமவல்லி இலைகள் – சிறிதளவு சர்க்கரை (அ) பனங்கல்கண்டு – தேவைக்கேற்ப. செய்முறை :- மிக்சி ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களான இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், துளசி, கற்பூரவல்லி ஆகியவற்றை போட்டு மைய அரைத்து எடுக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். துளசி மற்றும் கற்பூரவல்லி ஆகியவை விருப்பம் தான். இருந்தால் அதாவது கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையெனில் கவலைவேண்டாம். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் சிறிதளவு சுண்டியதும் இறக்கி, சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பருக கொடுக்கலாம். குடித்த சிறிது நேரத்திலேயே புத்துணர்ச்சி கிடைக்கும். என்ன நீங்களும் செய்து பார்ப்பீர்கள் தானே…. டிஸ்கி : கைக்குழந்தைகளுக்கு வெறும் கற்பூரவல்லி இலைகளை மட்டும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சுண்டியதும் இறக்கி தேன் சேர்த்து கொடுக்கலாம். இது சளியை விரட்டும்.

No comments: