அரசு
தாவர இயல் பெயர்: Ficus Religiosa
இதன் மறு பெயர்கள்: போதி மரம், பிப்பலிகை, பிப்பலம்,அசுரவத்தம், அஸ்வத்தம், கணவம், காகோனி, சராசனம், சலதளம், சித்திர ரேகை, திருமரம்
வளரும் இடங்கள்: இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகம் இதனைக் காணலாம்.
பயன் தரும் பகுதிகள்: அரச இல்லை, வேர், பட்டை, பழம் போன்ற அனைத்துமே பயனுள்ளவை தான்.
பொதுவான தகவல்கள் : அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சதம மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் இருக்கும். இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது.
அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது. அதனால் தான் நாம் இதனை அதிகம் யாகத்தில் பயன்படுத்தி வருகிறோம்.
அரச மரத்தின் மருத்துவப் பயன்கள்:
* அரச இலைச் சாறு மலச்சிக்கலை தீர்க்கும். உடல் சூட்டை தணிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்மந்தமான கோளாறுகளை நீக்கும். ஆண், பெண் இரு பாலருக்கும் தாம்பத்ய உணர்வு மேம்பட உதவும்.
* அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கரந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
* அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
* அரச மரப்பட்டையை கஷாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் பூச்சிகள், குடல் புழுக்கள் அழியும்.
* அரச இலைப் பொடி, ஆண்களின் நீர்த்த விந்தணுவை கெட்டியாக மாற்றவல்லது.
* அரசம் விதையை பாலில் அரைத்து உண்ண பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்கும்.
* அரசக் கட்டை கஷாயத்தில் தேன் கலந்து உட்கொள்ளச் செய்தால் வாத நோய் நீங்கும்.
* அரசு இலையை ரணங்கள் மீது கட்டினால் விரைவில் ஆறும்.
* மருதம்பட்டை, அத்திப்பட்டை, அரசப்பட்டை இவற்றின் துகளை புண்கள் அல்லது இரணங்களின் மேல் தூவினால் விரைவில் புண்கள் ஆறும்.
* அரச மரத்தின் கட்டையை கஷாயமாக பருகச் செய்தால் மேக நோய் கூட நீங்கும்.
* அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
* அரசுப் பழம், வேர், பட்டை, விழுது எனும் இவற்றுடன் காய்ச்சிய பாலைச் சர்க்கரையும் தேனும் கலந்து பருகச் செய்தால் ஆண்மை மிகும்.
* அரச மரத்தின் மேல் முளைத்த பதனிகையை (காளான் போன்ற சிறு செடி) பாலில் போட்டுக் காய்ச்சி உட்கொள்ளச் செய்தால் கரு நிலைக்கும்.
* உலர்ந்த அரசம் பட்டையை எரித்து, நீரில் கலக்கித் தெளிய வைத்து, மேலே தெளிந்த நீரை வடிகட்டிப் பருகச் செய்தால் கொடிய வாந்தி நீங்கும்.
* அரச பட்டை கஷாயத்தை பருகச் செய்தால் கனேரியா என்னும் பால் வினை நோய் நீங்கும்.
* அரசுத் துளிரைப் பாலில் இட்டுக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துப் பருகச் செய்தால் குளுமை தரும். உடலை செழிப்புறச் செய்யும்.
* அரசன் பட்டைச் சாற்றில் வாய் கொப்பளித்தால் வாயினுள் தோன்றக் கூடிய எந்த வகைப் புண்களையும் குணப்படுத்தும். விக்கல் அடங்கும். கபத்தையும் பித்தத்தையும் குணப்படுத்தும்.
* கலப்பட குங்குமம் இடுவதால் நெற்றியில் தோல் நீல நிறமாக மாறுவதுடன் அந்த இடத்தில் அரிப்பும் ஏற்படும். இதற்கு அரச மரத்தின் பட்டையை நீரில் கரைத்து. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பற்றிட்டு வந்தால், பாதிப்பினால் ஏற்பட்ட நீல நிறம் மாறி, பழைய ஒரிஜனல் நிறம் கிடைக்கும்.
* அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க சுரம் குணமாகும்.
* அரச மரத்தின் கனிகள் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும். மலத்தை வெளியேற்றும்.
* அரசப் பட்டையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்துக் குடித்து வர இருமல் தணியும்.
* பசியின்மை, மலச்சிக்கல், நாள் பட்ட புண்கள், சொறி, சிரங்கு, மேக நோய்கள் என அனைத்திற்கும் நல் மருந்து அரசு.
* அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவிவலி, தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.
No comments:
Post a Comment