Friday, March 9, 2018

அத்தி

அத்தி

தாவர இயல் பெயர்: FICUS GLOMERATA , ROXB ; MORACEAE
இதன் மறு பெயர்கள்: அதவு, வெருகு, அசமருதம்
வளரும் இடங்கள்: இது எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை மிக அரிதான மரம். எனினும் இது எந்த சூழ்நிலையிலும் வளரக் கூடியது தான். மண்ணில் சிறிது ஈரத் தன்மை இருந்தாலே போதும். அதிலும் குறிப்பாக தென்னிந்திய மண்ணிற்கு இந்தத் தாவரம் நன்றாக வளரும் இயல்பு உடையது.
பயன் தரும் பகுதிகள்: இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை என அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.
பொதுவான தகவல்கள் : அத்தி (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். எனினும் அத்திப் பழத்தை சாப்பிடக் கூடாது என்றெல்லாம் இல்லை. பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது. திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர் முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தல மரமாக விளங்குவது அத்தியாகும்.
அத்தி மரத்தின் இலை, பால், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கது. உலற வைத்துப் பொடித்த இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பொடியாக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
அத்திமரத்தின் விரிவான மருத்துவப் பயன்கள்:-
* தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
* தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்திப் பட்டையை ஊற வைத்த நீரால் ஆறாத புண்ணைக் கழுவி வர, புண்கள் ஆறும்.
* அத்திப் பாலுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் கொடுக்க சிறுநீரில் இரத்தம் போவது நிற்கும். இரத்த பேதி மாறும். வயிற்றுக் கோளாறுகள் கூட நீங்கும்.
* அத்தி விதைத்தூளில் நீர் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
* உலர் அத்திக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட நோயுற்ற கல்லீரல் சீரடையும்.
* அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால் இரத்த மூலம் மற்றும் வயிற்றுப் போக்கு தீரும்.
* அத்திப் பழம் அஜீரணத்தை குணப்படுத்தும்.
* அத்திக்காயை அரைத்து, அரிசி கழுவிய நீருடன் பருகச் செய்தால் வெறிநாய் நஞ்சு நீங்கும்.
* அத்தித் தளிர் விதையை உண்டு வந்தால் விந்து கட்டுப்படும். அத்துடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் நீங்கும்.
* அத்திக்காயை சமைத்து சாப்பிட்டால் பிரமேகம், வாதநோய்கள், சூலை தீரும்.
* வெந்தயக் கீரையுடன் அத்திப் பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் விரைவில் கட்டிகள் உடைந்துவிடும்.
* உடம்பில் வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் அத்திப்பாலை தடவி வர வீக்கம், மூட்டு வலி மாறும்.
* அத்திப் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும்.
* அத்திக்காயை உண்ண உதட்டில் வெடிப்புகள் இருந்தால் தீரும்.
* அத்திப்பாலை மூட்டு வலிகளுக்கு பற்றிட வலி குறையும்.
பின்குறிப்பு : சிறுநீர் கல் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தவிர்க்கவும். எந்தவகையிலும் அத்தியை பயன்படுத்தக் கூடாது.

No comments: