Sunday, July 22, 2018

ஹரே கிருஷ்ண மகாமந்திரம்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற உச்சரிப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் உன்னத அதிர்வானது, நம்முடைய உன்னத உணர்வுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு மேலான முறையாகும். உயிர் ஆத்மாக்களாக இருப்பதால், நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஆத்மாக்களாவோம். ஆனால் நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து பெளதிக தொடர்பின் காரணத்தினால் நமது உணர்வானது பெளதிக சூழலில் மாசு அடைந்துள்ளது. தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பெளதிக சூழலே மாயை என்று அழைக்கப்படுகிறது. இல்லாத ஒரு பொருள் மாயை என்பதாகும். இந்த மாயை என்பது என்ன? இந்த பெளதிக உடலில் நாம் அனைவரும் எஜமானராக இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் உண்மையில் மாயையின் கடுமையான சட்டத்தின் பிடியில் நாம் இருக்கிறோம். ஒரு சேவகன் செயற்கையாக எஜமானரைப் போல் நடிப்பது மாயை. பெளதிக இயற்கையின் வசதிகளை சுயநலத்துக்கு உபயோகிப்பதற்காக நாம் முயன்று கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் மேன்மேலும் மாயையின் சிக்கலான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆகவே இயற்கையை வெல்வதற்கு கடின உழைப்பில் நாம் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோதிலும் நாம் எப்பொழுதும் அதை நம்பியே இருக்கிறோம். நமது நிரந்தர கிருஷ்ண உணர்விற்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் பெளதிக இயற்கைக்கு எதிரான இந்த மாயையான போராட்டம் உடனடியாக நிறுத்தப்பட முடியும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற இந்த மகா மந்திரம் உண்மையான தூய உணர்வுக்கு புத்துயிர் அளிப்பதற்கான உன்னத முறையாகும். இந்த உன்னத அதிர்வை உச்சரிப்பதன் மூலம் நமது இதயத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்து விடலாம். அழுக்கின் அடிப்படை பொய் தன்னுணர்வே. ‘நான் காரணகர்த்தா’ என எண்ணுவது. கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையான ஒன்றை மனதில் திணப்பது அல்ல. இந்த உணர்வானது உயிர் வாழிகளின் இயற்கையான சக்தியாகும். இந்த திவ்யமான அதிர்வை கேட்கும் போது உணர்வானது புத்துயிர் பெறுகிறது. மிக சுலபமான இந்த யோக முறை இந்த யுகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. விடுதலைக்கான மிகச் சிறந்த உச்சரிப்பான இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதம் மூல ஆன்மீக தளத்திலிருந்து வரும் உன்னத இன்பவெள்லத்தை உணரலாம. பெளதிக சம்பந்தமான வாழ்வில் மிருகம் போன்ற புலன் நுகர்ச்சியாலேயே நாம் காலம் தள்ளுகிறோம். புலன் நுகர்வு நிலையிலிருந்து சிறிது விலகி முன்னேறியவர்கள் ஜடக் கட்டுகளிலிருந்து விடுபட மனக்கற்பனையில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு சிறிது முன்னேற்றமடைய போதிய அறிவு உள்ள ஒருவர் காரணங்களுக்கெல்லாம் காரணமான உன்னதமானவரை கண்டுகொள்ளும்போது மனக்கற்பனை நிலைகளிலிருந்து முன்னேறுகிறார். உண்மையில் ஒருவர் ஆன்மிக அறிவின் தளத்தில் இருக்கும் போது புலன், மனம் மற்றும் புத்தி ஆகிய நிலைகளைக் கடக்கிறார். ஹரே கிருஷ்ண மகா மந்திர உச்சாடனம் ஆன்மிக தளத்திலிருந்து உண்டாவதாகும். இவ்வாறாக இந்த சப்த அதிர்வானது அனைத்து சூழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது. அதாவது சிற்றின்பம், மனம் மற்றும் அறிவுபூர்வமான அனைத்து கீழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது. ஆகவே மகாமந்திரத்தின் மொழியை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, எவ்வித மனக்கற்பனையோ, அறிவுப்பூர்வமான சரிகட்டும் முறையோ தேவை இல்லை. இது தானாக ஆன்மிக தளத்திலிருந்து உண்டாவதாகும். இவ்வாறாக இந்த சப்த அதிர்வானது அனைத்து சூழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது – அதாவது சிற்றின்பம், மனம் மற்றும் அறிவுபூர்வமான அனைத்து கீழ்நிலை உணர்வுகளையும் கடக்கிறது. ஆகவே மகாமந்திரத்தின் மொழியை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, எவ்வித மனக்கற்பனையோ, அறிவுபூர்வமான சரிகட்டும் முறையோ தேவை இல்லை. இது தானாக ஆன்மிக தளத்திலிருந்து வருவதாகும். எவ்வித முன் தகுதியுமின்றி இந்த உன்னத சப்த அதிர்வில் எவரும் பங்கேற்கலாம். ஆனால் இதில் சற்று முன்னேறிய நிலையில் உள்ள ஒருவர் ஆன்மிகத்தை உணர்ந்து கொண்டு பாவகாரியங்கள் செய்யக்கூடாது. ஆன்மிகத்தில் எட்டுவகையான பேரின்ப நிலைகள் உள்ளன. அவைகள் பேச முடியாத நிலை, வியர்த்து போகும் நிலை, ரோமக்கால்கள் உடலில் சிலிர்த்தெழும் நிலை, வாய் உளறுதல், நடுக்கம், உடல் மெலிதல், பேரின்பத்தில் அழுதல், உணர்வற்ற நிலை, ஆரம்பத்தில் இத்தகைய அனைத்து உன்னத நிலைகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிறிது நேரம் மந்திரத்தை உச்சரித்தவுடன் ஒருவர் உடனடியாக ஆன்மிக தளத்தை அடைகிறார். கீர்த்தனத்தின் போது நடனம் ஆடவேண்டும் என்ற வேகத்தின் மூலம் ஒருவர் முதல் அறிகுறியை காண்பிக்கிறார். இதை நடைமுறையில் நாங்கள் பார்க்கிறோம். இத்தகைய நடனத்தில் ஒரு குழந்தைகூட பங்கேற்பதை காணலாம். பெளதிக வாழ்க்கையில் மிகவும் சிக்கியுள்ள ஒருவருக்கு வேண்டுமானால் இவ்விஷயத்திற்கு வர சிறிது காலமாகலாம். ஆனால் அப்படிப்பட்ட மனிதர் கூட மகாமந்திரத்தை உச்சரித்தவுடன் மிக சீக்கிரமாக ஆன்மிக தளத்திற்கு உயர்த்தப்படுகிறார். கடவுளின் தூய பக்தர் அன்போடு இதை பாடும் போது கேட்பவர்கள் மிகச் சிறந்த பயனை அடைகிறார்கள். இவ்வாறாக இக்கீர்த்தனையானது கடவுளின் தூய பக்தரின் உதட்டிலிருந்து பாட கேட்கப்பட வேண்டும். ஏனென்றால் இதற்உ பலன் உடனடியாக கிடைக்கிறது. முடிந்தவரையில் பக்தர் அல்லாதவர் ஒருவர் பாடுவதைக் கேட்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாம்பின் உதடுபட்ட பால் விஷமாகிறது. ஹரா என்ற வார்த்தை கடவுளின் சக்தியை குறிக்கிறது. கிருஷ்ணா, ராமா போன்ற வார்த்தைகள் கடவுளையே குறிக்கிறது. கிருஷ்ணா, ராமா என்பதற்கு மிக உன்னத ஆனந்தம் என்று பொருள், மேலும் ஹரா என்பது ஹரே என்று விளி வேற்றுமையால் மாறுகிறது. கடவுளின் மிக உன்னத ஆனந்த சக்தியானது அவரை அடைவதற்கு நமக்கு உதவுகிறது. மாயை என்று அழைக்கப்படும் பெளதிக சக்தி கூட கடவுளின் சக்திகளில் ஒன்றே. உயிர்வாழிகளாகிய நாமும் கடவுளின் விளிம்பிலான சக்தியாவோம். உயிர் வாழிகள் பெளதிக சக்தியை விட உயர்ந்தவர்களாக விவரிப்படுகிறார்கள். உயர்ந்த சக்தி கீழான சக்தியோடு தொடர்பு கொள்ளும் போது பொருத்தம் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகிறது. ஆனால் உயர்ந்த விளிம்பிலான சக்தியானது ஹரா என்னும் உயர்ந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும்போது சக நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. ஹரா, கிருஷ்ணா மற்றும் ராமா ஆகிய மூன்று வார்த்தைகளும் மகாமந்திரத்தில் ஆன்மிக விதைகளாகும். மகா மந்திரத்தை உச்சரிப்பது கட்டுண்ட ஆத்மாக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதற்காக கடவுளிடமும், அவரின் சக்தியிடமும் விடுக்கும் ஒரு ஆன்மிக அழைப்பாகும். மந்திர உச்சாடனம் உண்மையில் ஒரு குழந்தை தாயை நினைத்து அழும் ஒரு இயற்கையான அழைப்பை போன்றதாகும். தாய் ஹரா, தந்தையான கடவுளின் அருளை பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார். மேலும் இந்த ஹரே கிருஷ்ண மாகாமந்திரத்தை உச்சரிக்கும் பக்தர்களுக்கு கடவுள் தன்மைத்தானே வெளிப்படுத்துகிறார். சண்டையும், கபடமும் நிரைந்த இந்த கலுயுகத்தில் ஆன்மிக உணர்வு பெற ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் போல சக்தி வாய்ந்ததாக வேறு எந்த சாதனமும் கிடையாது. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே (தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் எழுதிய கிருஷ்ண உணர்வு மிக உன்னத யோகம் புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை இது)

No comments: