Monday, July 23, 2018

பகவத் கீதையும் ஜாதியும்

பகவத் கீதையும் ஜாதியும் (ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடலிலிருந்து சிறு பகுதி) ஸாண்டி நிக்ஸன்: பகவத் கீதை இந்த ஜாதி அமைப்பைப் பற்றிக் கூறுகிறதே. ஸ்ரீல பிரபுபாதர்: கீதை ஜாதி அமைப்பைப் பற்றிக் கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஸாண்டி நிக்ஸன்: ஆம், நான்கு வர்ணங்களைப் பற்றியும் தீண்டத்தகாதவர்களைப் பற்றியும் கூறுகிறதே. ஸ்ரீல பிரபுபாதர்: சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ, செயல்களுக்கும் தன்மைக்கும் ஏற்ப நால்வகை பிரிவுகள் மனிதரில் உள்ளன என்றுதான் பகவத் கீதை (4.13) குறிப்பிடுகிறது. இது ஜாதி அமைப்பு என்று உங்களுக்கு கூறியது யார்? இது ஜாதி அமைப்பு அல்ல. உதாரணத்திற்கு பொறியியல் வல்லுநர்களும் மருத்துவர்களும் சமுதாயத்தில் உள்ளனர். அவர்களை நீங்கள், அவர் பொறியாளர் ஜாதி, அவர் மருத்துவர் ஜாதி.” என்று கூறவியலுமா? ஒருவர் தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தால், நாம் அவரை மருத்துவராக ஏற்கிறோம். ஒருவர் தகுதிவாய்ந்த பொறியாளராக இருந்தால், அவரை பொறியாளராக ஏற்கிறோம். அதுபோலவே, பகவத் கீதையில், உயர்ந்த அறிவுடையவர்களின் பிரிவு, ஆளுநர்களின் பிரிவு, உற்பத்தியாளர்களின் பிரிவு, சாதாரண தொழிலாளர்களின் பிரிவு என நால்வகை பிரிவுகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவை ஏற்கனவே சமுதாயத்தில் உள்ளன. இவர் இன்னஇன்ன பிரிவைச் சார்ந்தவர்.” என்பதைக் கண்டறிவது எவ்வாறு எனும் முறையைத்தான் பகவத் கீதை விளக்குகிறது. பிறப்பின் அடிப்படையில் ஒருவன் இன்ன ஜாதியைச் சேர்ந்தவன் என்று கீதை குறிப்பிடவில்லை. நீங்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இந்த பிரிவுகள் இயற்கையாகவே சமுதாயத்தில் உள்ளன. மனிதரில் ஒருவகையினர் மிகுந்த புத்திசாலிகளாக உள்ளனர். அனைவரும் சமமான அறிவை கொண்டுள்ளனரா என்ன? மிகுந்த புத்திசாலி களான மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். அந்த பிரிவினரின் அறிகுறிகள் என்ன? என்பதை கீதை விவரிக்கின்றது. ஒருவனிடம் அந்த அறிகுறிகள் காணப்படும்போது, அவன் முதல்தர மனிதன் எனப்படுகிறான். நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம். முதல்தர மனிதர்களற்ற சமுதாயத்தினால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே, முதல்தர மனிதர்கள் சமுதாயத்தில் இருக்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். உதாரணமாக, புத்திசாலி மாணவன் மருத்துவர் எனும் தகுதியைப் பெற மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற வேண்டுமல்லவா? அதுபோலவே கிருஷ்ண பக்தி இயக்கத்தில் புத்திசாலியான மனிதர்களுக்கு மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துவது எவ்வாறு? உண்மை பேசுதல், உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், சாஸ்திரங்களைக் கற்றல், கற்றதை வாழ்வில் கடைப்பிடித்தல், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தல் உள்ளிட்ட அனுஷ்டானங்கள் வழங்கப்படுகின்றன. முதல்தர மனிதர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இவர்களெல்லாம் (அருகிலிருந்த சீடர்களைச் சுட்டிக்காட்டியபடி) தங்களது திறமையை நல்ல முறையில் பயன்படுத்த பயிற்சி எடுத்து வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற புத்திசாலி மனிதனே சமுதாயத்திற்கான தேவை. எனவே, பயிற்சி மிகவும் அவசியமாகிறது. நாங்கள் ஜாதி அமைப்பை அறிமுகப்படுத்தவில்லை. அந்த ஜாதி அமைப்பில் பிராமண குடும்பத்தில் பிறந்த அயோக்கியனும் பிராமணனாகிறான். நாங்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. பிராமணனாவதற்கு தரமான பயிற்சியை மேற்கொண்டவனையே நாங்கள் பிராமணராக ஏற்கிறோம். அவர் இந்தியாவில் பிறந்தவரா, ஐரோப்பாவில் பிறந்தவரா, அமெரிக்காவில் பிறந்தவரா என்பனவற்றை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம். இதுவே பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜாதி அமைப்பின்படி, பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன் மூன்றாம்தர மனிதனுக்குரிய தீய பழக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவன் பிறப்பின் அடிப்படையில் பிராமணனாக ஏற்கப்படுகிறான். ஆயினும், ஒருவன் மிகுந்த புத்திசாலியாக, முதல்தர மனிதனுக்குரிய பழக்கங்களுடன் பயிற்சிகளைப் பெற தகுதியானவனாக இருந்தாலும், அவன் சூத்திர குடும்பத்தில் பிறந்துள்ள காரணத்தினால் சூத்திரனாக ஏற்கப்படுகிறான்.” நாங்கள் இந்த அபத்தங்களை நிறுத்துவதற்கு விரும்புகிறோம். அவன் இந்தியனா ஐரோப்பியனா, பிறப்பினால் உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்பதையெல்லாம் நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை. அவை ஒரு பொருட்டே அல்ல. புத்திசாலி மனிதர்களைத் தேர்ந்தெடுத்து எல்லா வகையிலும் அவர்கள் முதல்தர மனிதராக விளங்குவதற்கான பயிற்சியை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தவே முயற்சி செய்கிறோம்.

No comments: