Monday, July 9, 2018

கர்ப்பிணிகளை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் 6 அறிகுறிகள்!

ஆனந்தம், வலி, பயம், கழிவிரக்கம்... எனக் கலவையான உணர்வுகளை ஏற்படுத்துவது கர்ப்ப காலம். அந்த நேரத்தில் முக்கியமான ஆறு அறிகுறிகளை கர்ப்பிணிகள் தவிர்க்கவே கூடாது ஓர் உயிர் எப்படி உருவாகிறது, அது எப்படித் தாயின் வயிற்றில் வளர்கிறது என்பதையெல்லாம் நமக்கு அறிவியல் எவ்வளவோ சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் பிரசவம், நம்மை வியப்பிலாழ்த்தும் அற்புதமான ஒன்று. அதனால்தான் நாம் தாய்மையைப் போற்றுகிறோம். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் பெண்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. ஆனால், பெண்கள் அவற்றை இன்பமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்; ஏற்றுக்கொள்கிறார்கள். வயிறு லேசாக வலித்தால், அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு, `என் குழந்தை... என்னை உதைக்கிறது’ என்று சொல்லி, ஆனந்தப்படுபவள்தான் தாய். `ஆனந்தம், வலி, பயம், கழிவிரக்கம்... எனக் கலவையான உணர்வுகளை ஏற்படுத்துவது கர்ப்பகாலம். அந்த நேரத்தில் முக்கியமான ஆறு அறிகுறிகளை கர்ப்பிணிகள் தவிர்க்கவே கூடாது’ என்கிற மகப்பேறு மருத்துவர் கீதா, அவை என்னென்ன என்பதையும் விளக்குகிறார்... ``பிரசவத்துக்கு முன்பாக கர்ப்பப்பை சுருங்கி, கர்ப்பப்பை வாயில் பிளவு ஏற்படுவதை `கான்ட்ராக்‌ஷன்’ (Contraction) என்று மருத்துவத்தில் சொல்வோம். பிரசவம் நெருங்கும் நாள்களில் எப்போதாவது இப்படி நடப்பது இயல்புதான். பிரசவத் தேதிக்குச் சில வாரங்களுக்கு முன்பாக இந்தப் பிரச்னை ஏற்பட்டால், முதுகுப் பகுதியில் அதிக வலி ஏற்படும். இது இயல்பானது அல்ல. ஒரு மணி நேரத்தில் ஆறு முறைக்கும் மேலாக வலி ஏற்பட்டால், குழந்தை முன்கூட்டியே பிறக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த அறிகுறியைத் தவிர்க்கக் கூடாது. உடனடியாக மகப்பேறு மருத்துவர் கீதாமருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். * கர்ப்ப காலத்தில் சிறிதளவு ரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது. ஆனால், அதைவிட அதிகமாக இருந்தால் அது கட்டாயம் கவனிக்கப்படவேண்டிய அறிகுறி. கர்ப்பப்பையில் `நஞ்சுக்கொடி' (Placenta) இயல்புக்கு மாறாக, கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் அமைந்திருந்தால், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இது தாய், குழந்தை இருவருக்குமே ஆபத்தை உண்டாக்கலாம். எனவே, உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது. * கர்ப்பப்பையில் இருக்கும் பனிக்குட நீர் குழந்தை ஆரோக்கியமாக வளருவதற்கு அவசியமான ஒன்று. குழந்தை பிறப்பதற்கு சற்று முன்னால் அல்லது ஒரு நாளைக்கு முன்னதாகப் பனிக்குடம் உடையும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ பனிக்குட நீர் வெளியேறினால், அது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடியும். இதனால், கர்ப்பிணிகளுக்கு மோசமான நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு, குறைப் பிரசவம் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். சில நேரங்களில் குழந்தை இறந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, பனிக்குட நீர் தேவையில்லாமல் வெளியேறுவது தெரிந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். * பெரும்பாலான கர்ப்பிணிகளுக்குக் கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் ஏற்படுகிறது. அப்படிக் சர்க்கரைநோய் இருப்பது கண்டறியப்பட்டால், முறையான சோதனையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட வேண்டும். உடலிலிருக்கும் சர்க்கரையின் அளவுக்கு ஏற்ப மாத்திரைகள் உட்கொள்வது, இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். அப்படிச் செய்யவில்லை என்றால், சர்க்கரைநோய் இருக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. ஒருவேளை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பைவிடக் குறைவாக இருந்தால், அதற்கும் வீட்டிலேயே, நாமாக மருந்துகளை உட்கொள்வது சரியல்ல. மருத்துவரைச் சந்தித்து முறையான சிகிச்சைதான் பெற வேண்டும்.

No comments: