Wednesday, May 22, 2019

#கழுத்து_எலும்பு #தேய்மானமும்_இடுப்பு #எலும்பு_தேய்மானமும்.??!



கழுத்து எலும்பு தேய்மானமும் (Cervical Spondalytis), இடுப்பு எலும்பு தேய்மானமும் (Lumbar Spondalytis) நம்முடைய வாழ்வியல் மாற்றத்தால் ஏற்பட்ட நோய்களில் ஒன்றாகும்...

குனிந்து நிமிந்து வேலை பார்த்த நமது பாட்டன்களுக்கு முதுகு தண்டு வடத்தில் எந்த வலியும் (Spondalysis) வரவில்லை, கூனும் விழுகவில்லை...

தலையில் இரண்டு மூன்று தண்ணீர் பானை வைத்து சுமந்த நம் பாட்டிகளுக்கு கழுத்தில் வலி (Cervical Spondalysis) வரவில்லை... ஆனால் இன்று கழுத்து எலும்புகளுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல், தலையில் ஒரு சிறு எடையையும் தூக்காதவர்களுக்கு கழுத்து எலும்பு தேய்மானம் இருப்பதாக சொல்லுகிறார்கள். யார் ஒருவர் கழுத்தை அசையாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே கழுத்து வலி, Spondalysis வருகிறது...

தலையில் அதிக எடையை தூக்கி வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களுக்கு கடைசி வரையில் கழுத்தெலும்பு தேய்மானம் வருவதில்லை (Cervical Spondalysis), நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கடைசி வரையில் இடுப்பெலும்பு தேய்மானம் வருவதில்லை (Lumbar Spondalysis).

எலும்பு தேய்மான பிரச்சினை இருப்பவர்கள் எல்லோரும் என்ன வேலை பார்க்கிறீர்கள், உங்கள் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பது பற்றி ஒரு சுய அலசல் செய்து கொள்ளுங்கள்.

மாட்டு வண்டிகளில் ஒய்யாரமாக உலா வந்தவர்களுக்கு Low Back Pain வந்ததில்லை, ஆனால் இன்று Luxury கார்களில் High Suspension உடன் பயணிக்கும் நமக்கு Low Back Pain…

நமது உடலில் எலும்பு தேய்மானம் என்று ஒன்று வர வேண்டுமானால் அது முதலில் நம் கணுக்காலில் தான் வர வேண்டும்... ஏனென்றால் கணுக்கால்தான் நம் உடல் பாரம் அனைத்தையும் தாங்குகிறது... யாருக்கும் பொதுவாக கணுக்கால் Spondalysis வருவதில்லை, வெறும் தலையின் எடையை மட்டும் தாங்குகிற கழுத்தில் Spondalysis வருகிறதென்றால், அங்கு எப்போது எந்த இயக்கமும் இல்லாமல் இருக்கிறதோ அப்போதுதான் நோய் வருகிறது...

சார் கழுத்து வலி என்று டாக்டரிடம் போனேன் அவர் MRI Scan எடுத்து பார்த்து எலும்பு தேய்ந்துள்ளது என்று சொன்னார்.

நீங்கள் எடுத்த MRI Scan-ஐயோ அல்லது ஒரு X-Ray-வையோ எடுத்துக் கொண்டு போய் மற்றொரு டாக்டரிடம் கொடுத்து எந்த இடத்தில் தேய்மானம் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள், சத்தியமாக எந்த டாக்டரினாலும் சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் 4D, 5D என்று சொல்லிக் கொண்டாலும் நோயாளி சொல்வதை வைத்துதான் மருத்துவமே செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

உங்களுக்கான நோய் ஏன் எதற்கு என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் உங்களால் உணர முடியும்...

❗கழுத்து எலும்பிலும், இடுப்பு எலும்பிலும் ஏற்படும் வலிகளுக்கான காரணங்களையும் அவற்றை வராமல் தடுக்கும் முறைகளை பற்றியும் பார்க்கலாம்…

முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back pain). மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி இரண்டாம் இடத்தில் உள்ளது. மேல் முதுகு வலி இன்று பெரும்பாலும் கழுத்தை பல மணி நேரங்கள் அசையாமல் வைத்துக் கொண்டு வேலை பார்க்கும் சாஃப்ட்வேர் துறையை சார்ந்தவர்களுக்கு நிறையவே வருகிறது…

❓காரணம் என்ன?

காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு
(Inter vertebral Disc) ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.

சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும்.

வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.

கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வதினால் மேல் முதுகு வலியும், அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலியும் ஏற்படும்.

‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’
(Osteomyelitis), ‘ஸ்பாண்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis), காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும்.
வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்பக் காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.

❓வயதானாலும் இந்த வலி தொல்லை கொடுக்கும் காரணம்?

முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டில் ஏற்படும் முதுமைப் பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய பந்தைக் கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்தப் பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும். அதுபோலவே வயதாக ஆக இடைவட்டில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் `குஷன்’ போல இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதிய வயதில் கீழ் முதுகில் வலி வருகிறது.

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்தும் புரோட்டினும் தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (ஆஸ்டியோபோரோசிஸ்) என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

❓சியாட்டிகா என்பது என்ன?

முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு முள்ளெலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல், வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா’(Sciatica) என்று பெயர் வந்தது. சில சமயங்களில் காலுக்கு செல்லும் இரத்தக் குழாய் நரம்புகளில் கொழுப்பு அதிகப்படியாக படிவதினாலும் இந்த வலி ஏற்படுவதுண்டு.

ஆரம்பத்தில் இந்த வலியானது, அவ்வப்போது கீழ் முதுகில் ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி என்று தாங்களாகவே தீர்மானித்துக்கொண்டு, சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். கால் குடைச்சல் தூக்கத்தைக் கெடுக்கும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாகத் தும்மினாலோ சிறுநீர் / மலம் கழிக்க முக்கினாலோ வலி கடுமையாகும்.

❗முதுகு வலியைத் தடுக்க…

அலுவலகத்தில் வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, கீழ் முதுகுக்குச் சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.

கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.

ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். எந்த வேலையையும் தொடர்ந்து மணி கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்தவாறு செய்யாதீர்கள். வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம்.

அமர்ந்திருக்கும்போதுகூடக் கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.

சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.

காற்றடைத்த பானங்கள், குளிர் பானங்கள், மென் பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் பாஸ்பாரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். கால்சியம் சத்தைக் குடல் உறிஞ்சுவதை இது தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இந்தப் பானங்களை அருந்தக் கூடாது.

எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முதுகு வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கக் கூடாது. சரியான மெத்தையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். கால்களைச் சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துப் படுத்துக்கொள்ளலாம். மெத்தை உபயோகப்படுத்தாமல் கடினமான தரையில் பாய் அல்லது போர்வை விரித்து படுப்பது முதுகு தண்டுவடத்தை வலுப்படுத்தும்.

அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்கவேண்டி இருந்தால், எடையைத் தூக்கும் போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை முன்புறம் மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.

முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது. திடீரெனத் திரும்பக் கூடாது.

குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக, நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.

உயரமான காலணிகளை அணியக் கூடாது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முதுகில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, மசாஜ் செய்வது விபரீதங்களை விலைக்கு வாங்குவதற்குச் சமம்.

இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, நிமிர்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும். ஏற்கெனவே, முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பது நல்லது.

முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள்.

😡 உடல்பருமன் ஆவதைத் தவிருங்கள். உடல் பருமனும் தொப்பையும் முதுகு தண்டு வட வலிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்…