Thursday, May 23, 2019

ஆண் குழந்தை வளர்ப்பு..



நாம எல்லாருமே பெண் குழந்தைகளத் தான்
ஒழுங்கா வளர்க்கணம்னு சொல்றமே தவிர
ஆண் குழந்தைகளையும் அப்படி வளர்க்கணம்னு சொல்றதும் இல்ல.. நெனைக்கறதும் இல்ல..

அதனால தான் இப்ப ஆம்பள பசங்க ஒழுங்கு
இல்லாம தப்பு பண்றாங்க..

இத படிங்க பெற்றோர்களே.. இனியாவது
ஆண் பிள்ளைகளையும் கவனிச்சு நல்ல
வழிக்கு கொண்டு வாங்க..🙂

ஆண் குழந்தைகள்தான் சிறப்பானவர்கள் என்ற கருத்தாக்கம் எப்படி வந்தது? ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்தது. பெற்றோர்கள் தங்கள் முதுமைக்கான பாதுகாப்பாக ஆண் குழந்தையை நினைத்தார்கள். அதனால் ஆண் குழந்தைகளுக்குப் பல சலுகைகளைக் கொடுத்தனர். தவறு செய்தாலும் கண்டிப்பதில்லை. ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்தவில்லை.

ஆனால், குழந்தை வளர்ப்பு முறையில் ஆண், பெண் என எந்தப் பேதமும் கிடையாது. ஆண் குழந்தைக்கும் நல்ல வளர்ப்பு (Good parenting) தேவைப்படுகிறது.

பொள்ளாச்சிப் பாலியல் சம்பவம் போன்ற நிகழ்வுகள், ஆண் குழந்தை வளர்ப்பில் நாம் முறையான கவனம் செலுத்தவில்லை என்பதையே காட்டுகின்றன. இன்றைய ஆண்குழந்தைகள் காட்டுச்செடிபோல அவர்களாகவே வளர்ந்துகொள்கிறார்கள். ஒழுக்கம் என்பது 15 வயதில் சொல்லிக்கொடுப்பது அல்ல, குழந்தைப் பருவத்திலேயே சொல்லித்தரப்படுவது.

குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் இருவரின் தேவையும் இருக்கிறது என்பதால்தான் காதல் என்ற உணர்வும் திருமணம் என்ற பந்தமும் அவசியமாக இருக்கின்றன. காரணம், குழந்தைகள் மற்றவர்களைச் சார்ந்தே வளர்கின்றன.

குழந்தையைப் பேணி வளர்ப்பதுதான் குழந்தை வளர்ப்பில் அம்மாவின் பங்கு; உலக விஷயங்களைச் சொல்லித்தர வேண்டியது அப்பாவின் பங்கு. தன்னை உதாரணமாகத் தன் மகன் பின்பற்றுவான் என்பதை அறிந்து மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பிற பெண்களிடம் எப்படிப் பழக வேண்டும், என்ன ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கிறோம் என்பது போன்ற விஷயங்களில் தந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

`என்னுடைய வார்ப்புதான் (Template) என் குழந்தை’ என்ற பொறுப்புணர்ச்சி அப்பாவிற்கு இருக்க வேண்டும்.

வளரிளம் பருவத்தில் ஆண் குழந்தைக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற பாலியல் ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும். அந்தச் சமயத்தில் தசைகள் அடர்த்தியாவது, ரத்த அணுக்கள் அதிகரிப்பது போன்ற உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். அதேபோன்று மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பல மாற்றங்கள் உருவாகும். அதிகமாக பாலியல் வேட்கை தூண்டப்படும். 24 மணி நேரமும் அதைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் தன்மைகூட ஏற்படும். அது ஓர் ஆண் குழந்தையின் ஒழுக்கக்கேடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அது டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் தன்மை.

அதனால், வளரிளம் பருவத்தில் அன்பு மட்டும் போதாது; அதிகமான கண்டிப்பும் இருக்க வேண்டும். ஆண் குழந்தைகளின் எல்லைகளைத் தீர்மானிக்கும் ஆளுமை மிகுந்த தலைவரும் அந்தச் சமயத்தில் தேவைப்படுகிறார். அதனால்தான், குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் அப்பா குழந்தையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அதன் வாழ்க்கை தடம்புரண்டு போக வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக ஆண் குழந்தைகள் பருவமடைந்ததும் வெறுமனே பாலியல் நாட்டத்தில் அவர்கள் மூழ்கிவிடாமல், பல்வேறு கவனச்சிதறல்களை நாம் உருவாக்க வேண்டும். அந்த நேரங்களில் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகள், திறன் வளர்ப்புகள், சமூகச் சேவை என மற்ற விஷயங்களில் ஈடுபடுத்தினால் பாலியல் ரீதியான இச்சைகளிலிருந்து அவர்களைத் திசை திருப்ப முடியும்.

இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல், அந்த நேரத்தில் ஆண் குழந்தைக்கென்று ஒரு தனி அறையைக் கொடுத்து அவர்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் முழுநேரமும் கலவியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு தன்னையும் தன் உடலையும் வருத்தி, பெற்றோருக்கும் கஷ்டம் கொடுத்துவிடுவார்கள்.

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண் குழந்தைக்குத் தனியறை அல்லது தனியாக பூட்டிக்கொண்டு இருக்கும் சுதந்திரம், உடல் உழைப்பைச் செலுத்தாமல் சொகுசாக வாழ்வதற்கான வழிவகைகளைச் செய்துகொடுப்பதுதான் ஒரு பெற்றோர் அவனுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும்.

ஆற்றலை ஒட்டுமொத்தமாகச் செலவழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
பெற்றோரின் கவனமும் முழுக்க முழுக்க அந்தக் குழந்தையின் மீது இருக்க வேண்டும்.

நம் குழந்தைதானே என்று அம்மாவும் அவர்களின் முன்பாக நின்று ஆடை மாற்றுவது, ஆடை மாற்றுவதற்கு தனக்கு உதவி செய்யுமாறு கூறுவது எல்லாம் மிகவும் தவறான விஷயம்.

பெரும்பாலான அப்பாக்கள் செய்கிற பெரிய தவறு... ஆண் குழந்தைகளைச் சுதந்திரமாக விட்டுவிடுவது; அல்லது அதிக கெடுபிடியுடன் நடந்துகொள்வது. இரண்டுமே தவறு. இந்த வயது இப்படித்தான் இருக்கும். நாம்தான் சற்று பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வோடு அப்பாக்கள் நடந்துகொள்ள வேண்டும்.

வளரிளம் பருவத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை 5 அல்லது 10 ஆண்டுகள் தானாகச் சிரமப்பட்டு இறுதியில்தான் முழு ஆணாக மாறும் என்பதால், அந்தப் பத்து வருடத்தை மிகவும் பொறுமையாக அந்தக் குழந்தையுடன் கடந்து வர வேண்டியதுதான் அந்தக் குழந்தைக்குப் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய நற்செயல்..