Monday, September 16, 2019

திருமாங்கல்ய_தாரணம்| #மாங்கல்யம்_தந்துனானே #மம_ஜீவன_ஹேதுனா….!!! #கெட்டிமேளம்_கெட்டிமேளம் என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர்.

#

சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர்.

அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர்.

வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து இருக்கும் உறவினர் நண்பர்களிடம் “சார் , கொஞ்சம் வியூ கொடுங்க” என்று கோருகின்றனர்.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை மணப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார் மணமகன்!

மேல தாள ஓசை ஒருபுறம், உறவினர் நண்பர்களின் உரையாடல்கள்…

இப்படிப் பரபரப்புக்கு நடுவிலே கவனிக்கப் படாமல் போவது இந்திய சமுதாயத்தின் மிகச் சிறந்த நாகரிக சிந்தனையான இந்த செய்யுள்,

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

புரோகிதரும் இந்த மந்திரத்தின் அர்த்தததையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லிக் கொடுப்பதில்லை.

எல்லோரும் ஹாப்பியா ஒருத்தரை ஒருத்தர் கங்கிராஜுலேசன் பண்ணிண்டு இருக்கா, நாம ஏன் அர்த்தம் பொருள் எல்லாம் சொல்லி டிஸ்டர்ப் பண்ணனும், நாமளும் ஜோதியிலே கலப்போம் என்கிற ரீதியில் எத்தனையோ சடங்குகளில் ஒன்றாக இந்த மந்திரத்தையும் சொல்கிறார்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.

இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.

இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.

இந்திய சமுதாயத்தில் ஒரு மனிதனுக்கு இன்றியமை யாததாக உள்ளது எது என்றால் அது அவன் மனைவியே!

மற்ற ஆட்சி, அதிகாரம், செல்வங்கள் , நில புலம், காடு , கழனி, வாய்க்கால் வரப்பு, தோட்டம் தொரவு…

உள்ளிட்ட எல்லாவற்றியும் இழந்து அவன் நடுத் தெருவிற்கு வந்தாலும் அவனை அன்பு செய்து அர்ப்பணித்த மனைவி அவன் அருகில் இருந்தால் அவன் கடைத்தேறி விடுவான்.

சோழ நாட்டின் மிகப் பெரிய பணக்கார வணிகக் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவன் கோவலன்.

ஆசையின் பாதையில் மயங்கி விட்டதால் சொத்து பணம், தொழில், புகழ், நண்பர், உறவினர் அனைவரையும் இழந்து விட்டான்.

அந்தோ என்னும் கையறு நிலைக்கு வந்து விட்டான். யாருமே அவனுக்கு உதவி இல்லை.

யாருமே அவனை நம்பவில்லை. அவனுக்கு கடன் கொடுத்தால் , உதவி செய்தால் … அந்தப் பணத்தையும் மாதவி போன்றவரிடம் கொடுத்து விடுவான் என்று பலரும் எண்ணி இருக்கக் கூடும்.

அதனால் நல்லவர்கள் கூட அவனை விட்டு விலகி விட்டனர்.

யாரையும் நெருங்கி உதவி கேட்கும் மன நிலையிலும் அவன் இல்லை.

உதவி கேட்கும் தகுதியைக் கூட தான் இழந்து விட்டதாக கருதி விட்டான்.

வாழ்க்கையே அவனுக்கு முடிந்து விட்டது. தொழில், பணம் , உற்றார் , நண்பர் அனைவரையும் இழந்து விட்டான். நம்பிக்கையை இழந்து விட்டான்.

உணமையிலே கோவலனின் நிலை பரிதாபமானது.

ஆனால் அந்த நிலையிலும் அவனைக் கை விடவில்லை ஒருத்தி , அவனது கடந்த காலச் செயல்களால் அதிகம் பாதிக்கப் பட்டவள்.

அவளைப் பார்த்து அவன் காதல் மொழி பேசவில்லை, அவளை உதறிச் சென்று வேறு பெண்ணிடம் காதல் செய்தவன், அவளை தனிமையில் வாட விட்டவன், அப்படிப் பட்ட கோவலன், எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்த போது, அவனிடம் முழு அன்பைப் பொழிந்து, அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பிக்கை வூட்டி, அவனுக்கு பொருளீட்ட தன்னுடைய சிலம்பையும் கொடுத்து அவன் வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியை அளித்திருக்கிறாள். உயிர் இருந்தும் உயிரற்ற நடை பிணமாக இருந்த கோவலனுக்கு உயிர் அளித்த உத்தமி கண்ணகி. கற்ப்புக்கரசி கண்ணகியே கோவலனின் தெய்வம். //

பார்வதி, சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி …. இவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு வாழும் தெய்வங்களாக உள்ள அன்பு மனைவியறாலே இந்திய சமுதாயம் வாழுகிறது!

திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை

கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்)

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு)

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .

இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.

இந்த மந்திரத்தை கணவன், திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன் தன் மனைவியிடம் சொல்வது இன்னும் சிறப்பாகும்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய, தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது, கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !