Saturday, September 28, 2019

சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் ஸமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது. இதை நித்தியவழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர்.


மன்னனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே குரு பூஜைக்கும் தட்சணை ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

தட்சணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்; பொன்னை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது.

அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்குப் பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை ஸமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வத்தையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே,தட்சணைநிறைந்த செல்வத்தை அளிக்கிறது.

எப்படிச் சந்தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷிணையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.

தெய்வபூஜைக்கு தட்சணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போதும்தட்சணைகொடுக்கப்படவேண்டும்.

'ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம்’ என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தட்சணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தட்சணை கொடுக்கக்கூடாது?

ஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.

ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கே­லி செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர். சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.

இவர்களனைவரும் இவ்வுலக வாழ்க்கையில் உழலும் சாதாரண மக்களே.தட்சணைஅளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடைய வேண்டுமென்றே பாபா விரும்பினார்.