Sunday, September 1, 2019

விநாயகர்_சதுர்த்தி




பூஜை செய்ய உகந்த நேரம்

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை, மற்றும் 09:30 முதல் 10:30 மணி வரையிலும்

பகல் : 12.00 முதல் 02.00 மணி வரை

மாலை : 06.00 முதல் 9.00 மணி வரை

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன்?

நாம் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மாலைகளால் மாலை சூட்டி வழிபடுகின்றோம். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.

விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர்தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்தவொரு செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கின்றோம்.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

அருகம்புல் கொண்டு அவரை தரிசிப்பது ஏன் என்று தெரியுமா?

அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் கோபத்தில் விழுங்கிவிட்டார். அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அங்கு வெப்பமடையச் செய்தான்.

விநாயகரால் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது.

அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இதன் காரணமாகவே விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியத்துவம் பெறுகின்றது.

பலன்கள் :

அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும்.

சுக்ல பட்ச சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?

விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்" மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.

மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.

மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்;. அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.

கொழுக்கட்டையின் கூர்மையான முன்பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு கணபதியின் அருளைப் பெறுவோம்...!

(இங்கு காணப்படும் விநாயகருக்குள் 108 வகையான விநாயகரை கண்டு மகிழுங்கள்...!)