Tuesday, September 17, 2019

புரட்டாசி பிறந்தது,புண்ணியம் பூக்குது!



மாதம் முழுமையும் மாக விஷ்ணுவை வணங்கி நீண்ட ஆயுள்.நீங்கா செல்வம்,சிறந்தகல்வியை பெறவும், முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி விரதம்,அனந்த சப்தமி விரதம்(சூரியன்),கோஷ்பாத திரிதியை விரதம்,பார்வதிபரமேஸ்வரர் விரதமான கஜகவுரி விரதம்,கேதாரகவுரி விரதம்,துளசிகவுரி விரதம்,ஸ்ரீஉமாவிரதமும், தேய்பிறை அஷ்டமி சம்பகாஷ்டமி விரதம்,இப்படி பல தெய்வ வழிபாடுகள் நிறைந்தது புரட்டாசி புண்ணியமாதமாகும

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்