Sunday, December 30, 2018

பக்தியின் சக்தி!

'என் சக்திக்கு என்ன பண்ண முடியுமோ, அதை செஞ்சுட்டேன். இதுக்கு மேல எல்லாம் பகவான் செயல்.'
இந்த வார்த்தைகளை பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் உலகில் நடக்கின்றன. அந்த நேரத்தில் ஒருவர் சிக்கும் போது அவரைக் காப்பாற்றும் சக்தியைத் தான் 'எல்லாம் கடந்த சக்தி' என்கிறோம்.
அந்த பிரமாண்ட சக்தியையே 'தெய்வம்' என்கிறோம். பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கு, கடந்த கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை - இப்படி மனிதர்களால் கணிக்க முடியாத பலவற்றை தெய்வமே தீர்மானிக்கிறது.
'இன்னும் ஓரிரு நாளில் இறந்து போவார்' என மருத்துவரால் தீர்மானிக்கப்பட்டவர், சில நாட்களில் எழுந்து உட்கார்ந்து ஆச்சரியப்பட வைப்பார். நேர்மையான ஒருவர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பாதகமான தீர்ப்பு வருவது போல் சூழல் உருவாகும். ஆனால் இறுதித் தீர்ப்பு யாரும் எதிர்பாராமல் நேர்மையானவருக்கு சாதகமாக அமைந்து விடும்.
வாழ்வில் இப்படி ஆச்சரியப்பட வைக்கும் திருப்பம், தீர்ப்புகளை தெய்வங்கள் ஏற்படுத்தும். இத்தகைய அற்புதம் வாழ்வில் ஏற்பட வேண்டும் என்றால் நம்மிடத்தில் பக்தி எண்ணம் வேண்டும்.
ஒரு உதாரணம் பார்க்கலாம். சிவனடியார் நால்வரில் முதல்வர் திருஞானசம்பந்தர். இவர் வாழ்ந்த காலத்தில் சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் இருந்தார். சிவபக்தரான அவருக்கு அங்கம்பூம்பாவை என்ற மகள். அவள் தந்தையைப் போல பக்தி மிக்கவள். எது தடைபட்டாலும் அவளது வழிபாடு தடைபடாது.
ஐந்து வயது குழந்தையின் பக்தியைக் கண்ட பெற்றோருக்கு எத்தனை சந்தோஷம் இருக்கும்! ஆம்... சிவநேசர் தம்பதிக்கு அப்படி ஒரு சந்தோஷம். தினமும் அதிகாலையில் பூக்குடலையை எடுத்துக் கொண்டு நந்தவனத்தில் பூப்பறிப்பாள் பூம்பாவை. 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து நாமம் சொல்லியபடி மாலை தொடுப்பாள். இந்த சமயத்தில் தெய்வக்குழந்தையான ஞானசம்பந்தர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று கொண்டிருந்தார். சம்பந்தரை அவரது தந்தையான சிவபாத இருதயர், தனது தோள்களில் சுமந்தபடி செல்வார்.
சம்பந்தரின் பக்தியைக் கேள்விப்பட்ட சிவநேசர், தன் மகள் பூம்பாவையை அவருக்கே மணம் முடிக்க விரும்பினார். ஆனால் விதி வேறு விதமாகத் தீர்மானித்தது.
ஒரு நாள் பூம்பாவை பாம்பு தீண்டி இறந்தாள். அப்போது அவளுக்கு ஏழு வயது. ஆசை மகளை அக்னிக்கு இரையாக்கி விட்டு எலும்பையும் சாம்பலையும் ஒரு மண் கலயத்தில் வைத்து பாதுகாத்தார் சிவநேசர். ஏன் தெரியுமா? சம்பந்தருக்கு உரியவள் பூம்பாவை என்பதால்; அவர் வரும் போது அஸ்தியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சிவநேசரின் எண்ணம்.
ஐந்தாண்டு கழித்து சம்பந்தர் மயிலாப்பூருக்கு வந்தார். நடந்த அனைத்தையும் சோகம் மேலிட ஒப்பித்தார் சிவநேசர்.
'' சிவநேசரே... அஸ்தியை எடுத்து வாருங்கள்'' என்றார் சம்பந்தர். 'எலும்பையும் சாம்பலையும் என்ன செய்யப் போகிறார் சம்பந்தர்' என்று அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர். மயிலை கபாலீஸ்வரர் மீது பதிகம் பாடினார் சம்பந்தர். அடுத்த விநாடியே மூடியிருந்த மண்கலயம் 'படார்' என வெடித்து, எலும்பும் சாம்பலும் இணைந்து பூம்பாவை பருவமங்கையாக வெளியே வந்தாள்.
சம்பந்தரின் பாதம் பணிந்த சிவநேசர், 'கபாலீஸ்வரா... என்னே உன் கருணை' என்று கண்ணீர் சிந்தினார். இது தான் பக்தியின் சக்தி! பக்தி கொண்ட எவர் ஒருவர் பிரார்த்தனை செய்தாலும் தெய்வம் கைவிடுவதில்லை.
இந்த உண்மையை நாம் நம்ப வேண்டும். கடவுள் என்றும் இருக்கிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் தெய்வங்களை அனுபவித்தார்கள். நாம் கொண்டாடுகிறோம்; ஆனால் அனுபவிக்கிறோமா என்பது தெரியவில்லை. கொண்டாடுவதற்கு பணம் வேண்டும். அனுபவிப்பதற்கு மனம் வேண்டும்.
சிறுவாச்சூர் மதுரகாளிக்கு மாவிளக்கு இட்டு மண்டியிட்டால், மனசங்கடங்களை அகற்றி விடுவாள்.
சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் தெளித்தால் தீராத நோயும் ஓடி விடும். பேச முடியாத, பேசுவதற்குத் திணறும் குழந்தைகள் சீர்காழிக்கு அருகே திருக்கோலக்காவில் அருளும் ஓசைநாயகி, தாளபுரீஸ்வரரை வழிபட்டால் பேசும் ஆற்றல் கிடைக்கும்.
திருக்கருகாவூர் கர்ப்ப ரட்சாம்பிகையை வழிபட 'கருத்தரிக்கிற வாய்ப்பே இல்லை' என மருத்துவரால் கைவிடப்பட்டவர்களும் தாய்மைப் பேறு அடைவர். பிரசவம் சுகமாக அமைய விரும்பினால் கர்ப்பிணிகள் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமியை வணங்கினால் போதும்.
இப்படி ஒன்றா... இரண்டா... ஆயிரமாயிரம் கோயில்கள் நம் பாரத தேசத்தில்!
உண்மையான பக்தரை தெய்வம் என்றுமே கைவிடாது..