Thursday, September 6, 2018

ஊர்காவற்றுறை ஹாமன்கில் கோட்டை

வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹாமன்கில் கோட்டையும் முக்கியமானது. இக்கோட்டையானது பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக ஊர்காவற்றுறை காரைநகரினைப் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டதாகும். ஐரோப்பியரது ஆதிக்கத்தின் சின்னமாகக் காணப்படுகின்ற இக்கோட்டையானது ஊர்காவற்றுறையின் அமைவிடம் காரணமாக அமைக்கப்பட்டதனைக் காணலாம். இக்கோட்டையானது முதன் முதலில் அமிநால் - டெமன்சில் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17ஆம் நூறற்hண்டில் கட்டப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. புராதான காலம் தொட்டே இலங்கையின் வடபுலத்தில் சிறப்பிடம் பெற்ற துறைமுகமாக ஊர்காவற்றுறை விளங்கியமையைக் காணலாம். சிறப்பாக கி.பி 10ஆம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த சோழ அரசன் தன் படைகளை ஊர்காவற்றுறையூடாக நகர்த்தியிருந்தமையும் அவனது கல்வெட்டு ஒன்று இக்கோட்டையிலிருந்து மீட்கப்பட்டமையும் இப்பிரதேசத்தினுடைய வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தி அவற்றுக்கு சான்று பகிர்ந்து நிற்கின்றன. இப்பிரதேசததினது முக்கியத்துவம் உணரப்பட்டே 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இங்கு கோட்டை அமைக்கப்பட்டது. இக்கடற்கோட்டையில் இங்கு சோழர் காலத்திற்குரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டமையானது சோழர் ஆதிக்கம் இங்கு நிலவியமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும். இந்தியாவுக்குமிடையே செல்லும் கப்பல்களை அவதானிப்பதே முக்கிய நோக்காகக் காணப்பட்டது. சோழர்கள் ஊர்காவற்றுறை காரைதீவுக் கடற்பரப்பைத் தங்கள் முக்கிய கடற்படைத் தளமாகக் கொண்டிருந்ததைப்போல் போர்த்துக்கேயர்களும் இக்கடற்பரப்பை முக்கிய காவற்தளமாகக் கொண்டிருந்தனர். பன்றியின் கால் வடிவத்திலே இக்கோட்டை அமைந்துள்ளமையால் ஹாமான்கீல் என ஒல்லாந்தர்கள் தமது மொழியிலே அழைத்தனர். இப்பெயரே இன்றும் நிலைத்துள்ளது. மேலும் இக்கோட்டையானது மிகப்பழமை வாய்ந்த வியாவில் ஐயனார் கோவில், களபூமி பாலாவோடை அம்மன் கோவில், மணற்காடு மாரியம்மன் கோவில் ஆகியவற்றை உடைத்த கற்களைக் கொண்டே கட்டப்பட்டதாக யாழ்ப்பாண வைபவகௌமுகியும், காரைநகர் மான்மியமும் குறிப்பிடுகின்றன. ஈழத்தின் வரலாற்று பகிர்வு##

No comments: