Monday, January 27, 2020

இறைவன் நினைத்தால்...



ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் வறுமை நிலையில் வாடிக்கொண்டு வேலைவாய்ப்பின்றி சுற்றிக் கொண்டிருந்தான்.

மாலைப் பொழுதில் அவ்வூரிலுள்ள விநாயகர் ஆலயத்தில் அமர்ந்து அங்கிருக்கும் தேங்காய் வாழைப்பழம் சுண்டல் என பக்தர்கள் இறைவனுக்கு படைத்த பொருள்களை உண்டு வாழ்ந்து வந்தான்.

அதேபோல் ஒரு நாள் மாலைப் பொழுதில் தன் துயரநிலையை எண்ணி விநாயகரிடம் முறையிட்டு வேண்டிக் கொண்டான்.

அதே நேரத்தில் ஒரு பக்தர் ஒருவர் விநாயகருக்கு படையல் செய்து நூற்றி ஒரு ரூபாய் காணிக்கையாக வைத்து விட்டு சென்று விட்டார்.

இதை பார்க்க அந்த இளைஞன் அப்பனே விநாயகா எனக்கு ஏதாவது ஒரு சுய தொழில் தொடங்க வழி செய். இந்த நூற்றிஒரு ரூபாயை நான் உன்னிடம் கடனாக பெற்றுக்கொண்டு ஒரு சிறிய தொழில் தொடங்குகின்றேன் அதில் வரும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை உனக்கு அளிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டு அந்த பணத்தை எடுத்துக் கொண்டான்.

இறைவனிடத்தில் பெறப்பட்ட அந்தப் பணத்தைக் கொண்டு சிறிய அளவில் பால் வியாபாரத்தை ஆரம்பித்தான்.

விநாயகர் அருளால் பெறப்பட்ட பணம் அல்லவா அது. அவனது தொழில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது நல்ல ஒரு லாபத்தையும் கொடுத்து கொண்டிருந்தது.

முதல் மூன்று மாதம் அதில் வரும் லாபத்தை மூன்றில் ஒரு பங்கை கோயிலின் உண்டியலில் செலுத்தி வந்தான்.

கொஞ்சம் கையில் பணம் புழங்கவே அந்த இளைஞனுக்கு திருமண ஆசை வந்தது. விநாயகரிடம் சென்று முறையிட்டான் அப்பனே விநாயகா எனக்கு திருமணம் செய்ய ஆசை உள்ளது ஆகவே உனக்கு அளிக்கும் பங்கை சேர்த்து என்னுடைய திருமண செலவுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்றான்.

இளைஞனுக்கும் திருமணம் நடந்தது. வாழ்க்கை சூழலில் தனக்கு வாழ்வளித்த விநாயகப்பெருமானை முற்றிலும் மறக்க ஆரம்பித்தான்.

இருந்தாலும் கருணைக்கடல் அல்லவா விநாயக பெருமான். அந்த இளைஞனின் வாழ்க்கை சூழலுக்கேற்ப. பால் கறக்க ஒரு மாடு என்ற வகையில் அமைத்துக் கொடுத்து அதை ஒரு பெரும் பசுமாட்டு பண்ணையாக மாற்றி அவன் வாழ்க்கையில் வளம் சேர்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அந்த இளைஞனுக்கு பணம் சேர சேர தீய பழக்கங்களும் நாளடைவில் வந்து சேர்ந்தது.

தான் செய்து வந்த பால் தொழில் கலப்படம் செய்ய ஆரம்பித்தான். அதோடு மட்டுமல்ல அந்தப் பணத்தைக் கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்யக் கற்றுக் கொண்டான் (மது , சூது, மாது) , தன் இல்லத்தரசி கூறும் நல் வழிகளையும் உதாசீனம் செய்தான்.

தான் செய்துவரும் தொழிலில் மூன்றில் ஒரு பங்கை விநாயகருக்கு அளிப்பதாக கூறிய வாக்கையும் தவறிவிட்டான்.

நல்ல வழிகளை மேம்படுத்துவதுதான் இறைவன் செயல். தவறான வழி முறையில் செல்வோரை எப்படி திருத்துவது என்று இறைவனின் கணக்கு ஒன்று உள்ளது.

அந்த இளைஞனுடைய தொழிலின் கலப்படமும், மது சூது மாது என்று அவன் ஊதாரித்தனமாக நடந்து கொண்டதையும் ஊர் அறிய ஆரம்பித்தது.

படிப்படியாக அவனுடைய தொழில் நலிவுற்றது. கடனாளியாக ஆக்கியது இருக்கும் கறவை மாடுகளை எல்லாம் விற்று விதி அவனை பழைய நிலைக்கு ஆளாக்கியது.

மீண்டும் பழைய நிலைக்கு ஆளாகிய அவன் தன் மனைவி மக்களோடு தன்னை தன் வாழ்க்கைக்கு வழி வகுத்துக் கொடுத்த விநாயகர் ஆலயத்திற்கு திரும்பிச் சென்றான்..

விநாயகப் பெருமானிடம் தான் செய்த தவறுகளை மன்னித்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்குமாறு கதறி அழுதான்...

இளகிய மனம் கொண்டவர் அல்லவா ? விநாயகர்....

விநாயகர் காலடியில் கதறி அழுது எழுந்த போது . அந்த இளைஞன் மனைவி மடியில் மீண்டும் ஒரு நூறு ரூபாய் தாள். மூலதனமாக வைத்து பிழைத்துக்கொள். அந்த ஆலயத்தில் இருந்து அசரீரியாக குரல்...

நம்பிக்கையுடன் அந்த இளைஞனின் மனைவி...

இறைவன் அமைத்துக் கொடுத்த வாழ்க்கையை வளமோடும் நலமோடும் நேர் வழி கொண்டு வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்....

அல்லது இறைவன் கணக்கு வேறு வழியாக அமையும்..