Monday, January 27, 2020

சாணக்கியர் உரைத்த வெற்றிக்கான தந்திர குறுக்கு பாதைகள் பற்றி தெரியுமா?


மௌரிய பேரரசின் ஒரு முக்கிய பங்காற்றியவர் சாணக்கியர். இன்றைய அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றியவர். நீதி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போன்ற சிறந்த படைப்புகளை இந்த உலகதிற்கு அளித்த தத்துவ ஞானி. இவரது படைப்புகள் 1915இல் தான் கண்டுபிடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சாணக்கியரின் தந்திரம் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை போன்ற அறிவுடையோர் தத்துவங்களை ஏற்பதால் நாமும் நம் வாழ்வில் ஏற்றம் பெறலாம். இந்த உலகம் ஜெய்த்தவர்களை தான் திரும்பி பார்க்கும். தோற்றவர்களை ஏளனம் மட்டுமே செய்யும். தட்டி கொடுக்க ஒரு கை நமக்கு இருந்தால் போதும் எட்டி பிடிக்க ஒரு வானம் பத்தாது. உன்னால் முடியும் என்ற சொல்லை கேட்டாலே போதும் ஒரு புதிய உத்வேகம் வந்து விடும் மனதிற்குள். அது தான் மாயை. சிறிய தீப்பொறி போதும் காட்டையே சாம்பாலக்க. அது போல தான் சிறிய வழிகாட்டுதல் போதும் அனைத்தையும் நம் வசப்படுத்தி விடலாம். - Advertisement - வாழ்க்கையில் ஜெய்க்க நேர்மை தேவை தான். ஆனால் தந்திர வழிகளும் தேவைப்படுகிறது. யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும் ஒரு மகத்தான மந்திரமே. இந்த தந்திரத்தை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று இப்பதிவில் காண்போம் வாருங்கள். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை மற்றவர்கள் காணும் விதத்திலும் நீங்கள் காணும் விதத்திலும் வித்தியாசம் இருக்குமாறு மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். யாரையும் பின் தொடராதீர்கள். போட்டி என்று வந்துவிட்டால் எப்போதும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைக்காமல் உங்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். யாரையும் 100% திருப்தி படுத்திவிட முடியாது. இலக்கை அடையும் போது அங்கு கருணைக்கு வேலை இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களை சுலபமாக இவ்வுலகம் தோற்கடித்துவிடும். செல்வம் இல்லாதவர்களை உலகம் துச்சமாக நினைக்கும், அலட்சியபடுத்தும், தூக்கி எரிந்து விடும். செல்வம் பெற்ற ஒருவன் என்ன கூறினாலும் அதை நிஜம் என்று உலகம் நம்பும். செல்வம் படைத்தவன் மென்மேலும் செல்வத்தை சேர்த்து கொண்டே போக முடியும். இல்லாதவன் தன்னை காத்து கொள்ளவே பெருமளவு போராடுவான். எனவே செல்வம் இல்லையென்றாலும் அதை வெளியில் கட்டி கொள்ளாமல் தந்திரமாக இருந்து சாதிக்க வேண்டும். வெற்றி பெற்ற யாவரும் ஒரு காலத்தில் பல அவமானங்களை சந்தித்தவர்களே என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சரியான பாதையா? என்று நிச்சயம் ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து அதன் பின் அதை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும் பயணத்தில் கண்ணை மூடி கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் அல்லாமல் 360 டிகிரி கோணத்தில் சுற்றியும் உங்களது பார்வை இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்களுடைய இலக்கிற்கான குறிப்புகள் தென்படுகிறதோ அவற்றையெல்லாம் சேகரித்து கொள்ள வேண்டும். மனதை ஒருமுகபடுத்தி எந்த குழப்பமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று உரைக்கின்றார். நீங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் அதை எண்ணி கவலைபடக்கூடாது. கவலைப்படுவதால் எதுவும் மாறிவிட போவதில்லை. அறிவுடையோர் நிச்சயம் இதை செய்யமாட்டார்கள். முயற்சியை காட்டிலும் விடாமுயற்சியே வெற்றியை தேடி தரும். தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருங்கள். கவலைபட்டு உடலையும், மனதையும் பலவீனமாக்கினால் வெற்றியை ஈட்ட முடியாது. உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யும் அந்த செயலினால் விளைய இருக்கும் விளைவுகள் என்னென்ன? நீங்கள் செய்ய இருக்கும் அந்த செயல் எந்த அளவிற்கு பயனுடையது? இதை பற்றிய தெளிவான அலசல் செய்து கொள்ளுங்கள். பிறரை ஏமாற்றுபவர்கள் உங்களையும் ஏமாற்ற தயங்க மாட்டார்கள். அத்தகையவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது தான் அறிவு. நமக்கு தெரிந்தே சில தவறுகள் நாம் செய்து விடுவோம். அதற்கு காரணம் விரைவாக யோசிக்கும் ஆற்றல் இல்லாமையே. விரைவாக சிந்திக்க வேண்டும். அறிவாக செயலாற்ற வேண்டும். யோசிப்பதில் நேரத்தை செலவிடுபவர்களால் எதையும் சரியாக செய்ய முடியாது. அந்த தகுதியை நீங்கள் தான் வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பின்னர் பின்வாங்க கூடாது. அதனால் விளையும் பிரச்சனைகளை கையாள்வதில் உறுதி கொள்ள வேண்டும். பின் வாங்குபர்களால் வெற்றி பெற முடியாது என்கிறார் சாணக்கியர். உங்களின் பலவீனம் உங்களை தவிர வேறு ஒரு நபருக்கு தெரியவே கூடாது. ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும். நேர்மறை விமர்சனங்களால் தலைக்கனம் கொண்டும், எதிர்மறை விமர்சனங்களால் துவண்டும் போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும். உங்களுக்கு கீழ் உள்ளவர்களை எடை போடுவதில் தவறு செய்து விடாதீர்கள். கீழே தானே இருக்கிறார்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அது வெற்றியின் தூரத்தை அதிகரிக்கும் ஒரு முட்டாள் தனமான செயல் என்று சாணக்கியர் உரைக்கிறார்.