Tuesday, April 7, 2020

புதனுக்கு அஸ்தங்க தோஷம் உண்டா? இல்லையா?

ஸ்ரீராமஜெயம்



பொதுவாக ராகு, கேதுவை தவிர சூரியனை ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் முன் ,பின் நெருங்கும் மற்ற கிரகங்கள் அஸ்தமனம் அடையும்.

அஸ்தமனம் அடையும் கிரகங்கள் தன் சுய பலத்தை சூரியனிடம் இழக்கும்.

பலமிழந்த கிரகங்களின் பலனை சூரியனே அதனுடைய தசா புக்தியில் செய்யும்.

உதாரணமாக சுக்கிரன் ,சூரியனுடன் 10 டிகிரிக்குள் இணையும் பொழுது அஸ்தமனம் ஆகும்.

திருமண வயதை ஒத்த ,ஒருவருக்கு சுக்கிர புத்தி நடைபெறும்பொழுது சாதாரண ஜாதகத்தில் திருமணம் பொதுவாக நடைபெறும் .அதாவது காதல் ,திருமணம் ,காமம் ஆகியவற்றை அனுபவிக்கக்கூடிய காலம் சுக்கிரபுத்தி காலமாகும்.

சுக்ரன் அஸ்தமனம் அடைந்திருப்பதால், சுக்கிரன் தரும் பலன்களை அடுத்து வரக்கூடிய சூரியனே செய்யும் என்பதால் சுக்கிரபுத்தி திருமணத்தை கொடுக்கும் என்று கணித்தால் தவறாகிவிடும்.

சூரியன் ,புதன் ,சுக்கிரன் இந்த மூன்று மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்களாகும்.

சுக்கிரனின் அஸ்தமனம் ,மூலநூல்களில் வலுவாக சொல்லப்பட்டுள்ளது .மேலே சொன்ன 10 டிகிரி வித்தியாசத்திற்குள் சுக்ரன் இருந்தால் நிச்சயமாக அஸ்தமனம் உண்டு .அதில் மாற்றமில்லை.

புதனுக்கு அந்தளவு வலுவாக சூரியனுடன் இணையும் பொழுது அஸ்தமனம் பெறும் என்று சொல்லப்படவில்லை.

வழக்கமாக சூரியனுக்கு 14 டிகிரிக்குள் இருக்கும் புதன் அஸ்தமன தோஷம் பெறும் .ஆனால் மிக நெருக்கமான நிலையில் 4 டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே புதனின் காரகங்கள் சார்ந்த விஷயங்களில் ஏதாவது பிரச்சினையைக் கொடுக்கும்.

புதன் ஒரு ஜாதகத்தில் கல்வியை கொடுக்கும் கிரகம் என்பதால் மிக நெருக்கமான நிலையில் 4 டிகிரிக்குள் இணைந்து ஆரம்பக் கல்வி எனப்படும் இரண்டாம் இடமும், உயர்கல்வி எனப்படும் 4ஆம் இடமும் , ஆராய்ச்சிக் கல்வி எனப்படும் ஒன்பதாம் இடமும்,அதன் அதிபதியும் கெட்டு இருந்து, புதன் 6, 8 ,12ஆம் இடங்களில் மறைந்து பாவ கிரக சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் மட்டுமே படிப்பில் தடை கொடுக்கும்.

படிக்கும் வயதில் நடக்கும் திசையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுப தொடர்பு ஏற்படும்போது கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக தப்பித்து விடும்.

ஒரு சிலருக்கு இதையும் மீறி படிப்பை கொடுத்தாலும் ,புதனின் மற்ற காரகத்துவங்களில் கைவைத்து விடும்.

துல்லியமாக கணக்கிட்டு அறிவது நல்லது.

14 டிகிரிக்குள் 4 டிகிரிக்குள் நெருக்கமாக இணைவில் இருக்கும்பொழுது மட்டுமே இந்த பலன். 4 டிகிரிக்கு மேல் விலகும் பொழுது புதாதித்ய யோகம் என்ற அமைப்பில் சிலருக்கு நல்ல படிப்பினையும் கொடுத்துவிடும்.

இங்கு பேருக்கு மட்டுமே புதன் அஸ்தங்கம் என்ற அமைப்பில் இருக்கும் .

அதாவது எழுத்தில் உண்டு. நடைமுறையில் இல்லை என்ற அமைப்பில் இருக்கும்.

அதுபோல் புதன் சூரியனை நோக்கி
14 டிகிரிக்குள் செல்கிறதா? சூரியனை தாண்டி விலகிச் செல்கிறாரா? என்பதையும் ஆராய்ந்து கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஓம் நமசிவாய

No comments: