Sunday, April 26, 2020

பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கெட்டு ஸ்ரீ சரஸ்வதி அம்மனின் பிரதிமை...



சரஸ் என்றால் பொய்கை என்று அர்த்தம் #வதி என்றால் வசிப்பவள். மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள். சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள். சரஸ்வதி சரஸ் என்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு என்று பொருள். வதி என்றால் வாழ்பவள் அல்லது இருப்பிடமாக கொண்டவர் என்று பொருள். சரஸ்வதி என்பதன் இன்னொரு அர்த்தம் ஈரத்தன்மை கொண்டவர் என்பதாகும். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சரஸ்வதி தேவியைப் பற்றியும், சரஸ்வதிக்கு பிடித்த வெள்ளை நிறம் பற்றியும் அவர் கம்பருக்கு உதவி செய்த கதையையும் படிக்கலாம்.

பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது."பூ"என்றால் பூர்த்தி."ஜா"என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக இருக்க வேண்டுமென்ற பொறாமை,உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டி படைக்கின்றான்.இதையே சைவ சித்தாத்தத்தில் கர்மா,மாயை என்கிறார்கள். இதை அகற்றி ,ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை.சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால்,அவளது விழாவை மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது .

சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை. வானவில்லின் 7வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு. கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளைஆடை அணிந்திருக்கிறாள்.

வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து,கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.

வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். தன் வாழ்நாளுக்குள்,
ஒருவன் எல்லாக் கலைகளையும் கற்று விட முடியாது.இதைத் தான் கற்றது கைம்மண்ணளவு, உலகளவு என்பர். படிப்பு தவிர பாடல், நாடகம், இசை போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்கு சிறப்புற கிடைக்க அருள்பாவிக்கிறாள்.

கம்பருக்கு அருளிய சரஸ்வதி
அதோடு கம்பரின் பாடலைக் கேட்டு அதை நிரூபிக்கும் வகையில் அன்னை சரஸ்வதி தேவியே வயதான மூதாட்டியாக வந்து அருள்பாலித்திருக்கிறார்.
கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும் சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. இது ஒட்டக்கூத்தருக்கு தெரியவருகிறது. எனவே இருவரையும் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

சோழ மன்னன் நடத்திய விருந்தில் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். கம்பர் அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு மன்னன் மகள் அமராவதி மீது ஏற்பட்டுள்ள காதல் கம்பருக்கு லேசாக தெரியும். விருந்தில் பரிமாற அமராவதி உணவு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அப்போது அம்பிகாபதிக்கு பாடல் உதிக்கிறது.
' இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசைய... என்று பாடினார்.
அதாவது, சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே என்று கூறினான்.
இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் சோழ மன்னனை பார்க்க... சோழ மன்னனுக்கு கோபம் வந்தது. உடனே கம்பர் சரஸ்வதி தேவியை தியானித்து அம்பிகாபதியின் பாடலை தொடர்ந்து பாடினார்
"கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள்
தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்" என முடித்தார்.

இந்த பாடலுக்கு விளக்கம் கேட்டார் சோழ மன்னன். அதற்கு கம்பரோ, வீதியில் வயோதிக மாது ஒருத்தி வெயிலில் உஷ்ணத்தால் இட்ட அடிநோக எடுத்த அடிகொப்பளிக்க கொட்டிக் கிழங்கு விற்றுக் கொண்டு வீதிவழியாக வருகின்றார் என கூறினார்.
உடனே அரசன் காவலாளியை அழைத்து தெருவில் போய் உண்மை நிலையை அறிந்து வர கூறினார். என்ன ஆச்சரியம் நாமகள் வயோதிகப் பெண்ணாகி கொட்டிக் கிழங்கு விற்று வருகிறாள். அந்த வயோதிகப் பெண்ணை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினர். ஒட்டக்கூத்தரின் கனவு பொய்த்து கம்பரின் மகன் அம்பிகாபதி சரஸ்வதியின் அருளால் காப்பற்றப்படுகிறாள்.
கம்பரின் வார்த்தையை காப்பாற்றவே சரஸ்வதி தேவி வயதான பெண்மணி போல வந்து காப்பாற்றினார். அழகான தமிழுக்கு அன்னை சரஸ்வதி தேவியே அடிபணிவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.



No comments: