ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது பிராமணர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன் நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி இருப்பது தென்பட்டது. பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும், அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.
அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார். அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.
சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர், தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.
வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment