Monday, November 4, 2019

பெரியவா திருவடியே சரணம். ஒங்க ஆசீர்வாதத்தால சௌக்கியமா இருக்கேன் பெரியவா’’ என்றான் சங்கரன்.


ஒருமுறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான்.

அவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், ‘‘நீ குளித்தலை சங்கரன்தானே? சௌக்யமா இருக்கியா?’’ என்று விசாரித்தார்.

‘‘ஒங்க ஆசீர்வாதத்தால சௌக்கியமா இருக்கேன் பெரியவா’’ என்றான் சங்கரன்.

‘அது சரி. நோக்கு இப்போ என்ன வயசாறது?’’ இது ஸ்வாமிகள்.

‘‘முப்பது பெரியவா’’ என்றான் சங்கரன்.

உடனே பெரியவா, ‘‘கல்யாணம் பண்ணிக்காம இப்படியே பிரம்மச்சாரியா காலத்த ஓட்டிடலாம்னு தீர்மானிச்சுட்டியாக்கும்?’’ என்று சிரித்தார்.

‘ஆமாம் பெரியவா’’ என்றான் சங்கரன்.

‘சரி... சரி. இப்போ நீ இங்கே வந்துருக்கிறதுலே ஏதாவது விசேஷம் உண்டோ? விஷயம் இல்லாம நீ வர மாட்டியே’’ சொல்லிவிட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், ‘‘ஆமாம் பெரியவா. எனக்கு ஏற்பட்டிருக்கிற ஒரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்’’ என்றான்.

ஸ்வாமிகள், ‘‘அப்டியா, சொல்லு... சொல்லு. நோக்கு அப்டி என்ன பெரிய்ய சந்தேகம்?’’ என்று கேட்டார்.

‘‘மந்த்ர ஜபம் சம்பந்தமான ஒரு சந்தேகம் பெரியவா...’’ என்று சொன்னான் சங்கரன்.

உடனே ஸ்வாமிகள் அவசரமாக, ‘‘மந்த்ர ஜபம் சம்பந்தமானதுன்னா... நீ ஏதாவது மந்த்ர ஜபம் பண்றயா, என்ன?’’ என்று கேட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!’’ இது சங்கரன்.

‘‘ஓஹோ... உபதேசம் ஆயிருக்கோ?’’

‘‘ஆயிருக்கு பெரியவா.’’

‘‘பெரியவா (உபதேசம் பண்ணியவர்) யாரோ?’’

‘மைசூர் யக்ஞநாராயண கனபாடிகள்’’ சங்கரன்.

‘‘பேஷ்! ரொம்ப வாசிச்சவா. என்ன மந்த்ரமோ?’’ என்று கேட்டார் ஸ்வாமிகள்.

சங்கரன் வாயைத் திறப்பதற்குள் ஸ்வாமிகள், ‘‘இரு... இரு. நீ மந்த்ரத்தைச் சொல்லிடப்படாது. அது ரகசியமா ஒங்கிட்டதான் இருக்கணும். எந்த தேவதா பரமான மந்த்ரம்னு மட்டும் சொல்லு’’ என்று உத்தரவிட்டார்.

உடனே சங்கரன், ‘‘ஹநுமத் உபாசனா பரமான மூல மந்த்ரம் பெரியவா’’ என்றான்.

‘சரி. இந்த மூலமந்த்ர ஜபத்திலே நோக்கு நிவர்த்தி பண்ணிக்க வேண்டிய சந்தேகம் என்ன?’’

‘‘இல்லே பெரியவா... இந்த மந்த்ரம்
உபதேசமான இருபத்து மூணாவது வயசிலேருந்து கடுமையா விதிப்படி ஜபிச்சுண்டு வரேன். ஏழு வருஷமா ஜபிக்கிறேன் பெரியவா... ஆனா, ஒண்ணுமே தெரியல்லே’’ என்றான்.

‘‘ஒண்ணுமே தெரியலேன்னா?’’ என்று வியப்புடன் கேட்டார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், ‘‘இல்லே பெரியவா. அந்த மந்த்ரம் ‘நேக்கு ஸித்தி ஆயிடுத்தா இல்லியா’ங்கறது தெரியலியே பெரியவா’’ என்றான் குரலில் வருத்தத்துடன்.

ஸ்வாமிகள் சற்றும் தாமதிக்காமல், ‘‘இப்ப அதைத் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறே நீ? அது போகட்டும். நீ ஜபத்தை ஆத்மார்த்தத்துக்காகப் பண்றயா? இல்லே... ஏதாவது காம்யார்த்தமா (காரணத்தை உத்தேசித்து) பண்றயா?’’ என்று வினவினார்.

உடனே சங்கரன், ‘‘ஆத்மார்த்தத்துக்காகத்தான் பண்றேன் பெரியவா. இருந்தாலும், மந்த்ர ஸித்தி ஆகி, அந்த தேவதையின் கிருபை கிடைச்சுடுத்தானு எப்படித் தெரிஞ்சுக்கறதுனு புரியலே. நீங்கதான் அதைச் சொல்லணும்னு பிரார்த்திக்கிறேன்’’ என்று விநயத்துடன் கண்களில் நீர் மல்கச் சொன்னான்.

உடனே ஸ்வாமிகள், ‘‘மந்த்ர ஸித்தி
ஆயிடுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ ஸித்தாந்தமாத்தான் தெரிஞ்சுக்க முடியும். ஒரு சந்தர்ப்பத்துலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தானா இது தெரியும் சங்கரா’’ என்று வாத்சல்யத்துடன் சொன்னார்.

சங்கரன் சமாதானம் அடையவில்லை. ‘‘இல்லே பெரியவா... நேக்கு அநுபவ சித்தாந்தமெல்லாம் இதுவரை ஏற்படலே. ஒண்ணும் புரியவுமில்லை. ஜபத்தை
மாத்திரம் விடாமல் குரு சொன்னபடி ஏழு வருஷமா பண்ணிண்டு வரேன். ஸித்தி ஆயிடுத்தா இல்லியானு தெரிஞ்சுக்க முடியலே. மனசு சில நேரம் ரொம்ப ஆயாசப்படறது பெரியவா... இதை நேரடியா தெரிஞ்சுக்க ஏதாவது வழி இருந்தா சொல்லணும்’’ என்று இரு கை கூப்பி, கீழே விழுந்து நமஸ்கரித்தான் சங்கரன்.

ஆச்சார்யாள் சற்று நேரம் மௌனமாக இருந்தார். சங்கரனின் குழப்பம் அவருக்குப் புரிந்தது. அவனுக்கு இதை எடுத்துக் கூறிப் புரியவைக்க வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டார். சங்கரனை கீழே உட்காரச் சொன்னார். ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்.

‘பல வருஷங்களுக்கு முன்னால சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்திலே ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள்னு ஒரு பெரிய மகான் பீடாதிபதியா இருந்தார். ஒரு நாள், அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மடத்து சிஷ்யன் ஒருவன் ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தான். வந்தவன் வெறுமனே வரவில்லை. இப்போ எங்கிட்டே நீ கேட்ட இதே கேள்வியைச் சுமந்துண்டு வந்திருந்தான்.

‘‘ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணிட்டு, கையில் கொண்டு வந்திருந்த கொய்யாப்
பழங்களை ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தான்.

‘வா... சௌக்யமா? என்ன வேணும்?’ என்று அன்போடு விசாரித்தார் ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள். சிஷ்யன் பவ்யமா சொன்னான், ‘ஸ்வாமி, எனக்கு ஒரு மந்த்ரம் உபதேசமாகி ஜபிச்சுண்டு வர்றேன். பல வருஷமா ஜபிக்கிறேன். அந்த மந்த்ரம் எனக்கு ஸித்தியாகி விட்டதான்னு தெரிஞ்சுக்க முடியல. எப்படித் தெரிஞ்சுக்கிறது ஸ்வாமி?’

உடனே ஸ்வாமிகள், ‘நீ பாட்டுக்கு ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா. ஸித்தி பலனை அந்த தேவதையே தானாக அநுக்ரஹிக்கும்!’ என்று சமாதானம் சொன்னார்.

ஸ்வாமிகளோட இந்த பதில் சிஷ்யனுக்குத் திருப்தி தரலே. எனவே, அவன் ஸ்வாமிகளை விடவில்லை. ‘இல்லே ஸ்வாமி, மந்த்ரம் நேக்கு ஸித்தியாயிடுத்தாங்கிறதை நானே உணர்ந்து தெரிஞ்சுக்கணும். அதற்கு ஒரு வழி சொல்லணும், பிரார்த்திக்கிறேன்’ என்றான்.

அவனுடைய மனோநிலையைப் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள். அவனை அருகில் அழைத்தார்.

‘கவலைப்படாதே கொழந்தே. அதுக்கும் ஒரு வழி இருக்கு’ என்றார் ஸ்வாமிகள்
உற்சாகத்தோடு.

‘மந்த்ர ஸித்தியை தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கா? உடனே அதை அனுக்ரஹிக்கணும் ஸ்வாமி’ என்று அவசரப்பட்டான் சிஷ்யன்.

உடனே ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் சிரிச்சுண்டே சொன்னார், ‘தினமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையைப் போட்டுண்டு, அதுக்கு மேலே நிறைய நெல்லைப் பரப்பிவிடு. அதுக்கும் மேலே ஒரு வஸ்திரத்தைப் போட்டுட்டு, உட்கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பி. பிரதி தினமும் இப்படிப் பண்ணிண்டு வா. என்னிக்கு நீ ஜபம் பண்றச்சே பலகை மேலே பரப்பி இருக்கிற நெல்மணிகள் தானாவே பொரியறதோ அன்னிக்கு ஒனக்கு ஒன் மந்த்ரம் ஸித்தியாயிட்டதா அர்த்தம்... என்ன புரியறதா?’

சிஷ்யனுக்குப் புரிந்தாலும், ‘இது சாத்தியமான காரியமா? ஸ்வாமிகள் நம்மைத் திருப்திப்படுத்த இப்படிச் சொல்கிறாரா?’ என்று குழம்பியவன், யாருமே எதிர்பாராத ஒரு கேள்வியை ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டுவிட்டான்.

‘குருநாதர் என்னை ரொம்ப மன்னிக்கணும். தெரிஞ்சுக்கணும்னு ஆசையோடுதான் இதைப் பிரார்த்திக்கிறேன்.

குரு ஸ்தானத்திலே இருக்கறவாளை பரீட்சை பண்றதா நெனச்சுக்கப்படாது! கண்ணால பாக்கணும்னு ஓர் ஆசைதான்... வேற ஒண்ணுமில்லே. ஸ்வாமிகள் இப்படி பலகை மேலே நெல்லைப் பரப்பி அதுக்கு மேலே வஸ்திரத்தைப் போட்டு ஒக்கார்ந்து ஜபம் பண்ணி... நெல்... பொரி...’ என்று முடிப்பதற்குள்...

‘நீங்க அப்படி உட்கார்ந்து ஜபம் பண்ணி இதுவரைக்கும் எப்பவாவது நெல் பொரிஞ்சிருக்கானு தெரிஞ்சிக்க ஆசைப்படறே. அவ்வளவுதானே?’ என்று சிரித்த ஸ்வாமிகள், உடனே அங்கேயே ஒரு பலகையைக் கொண்டுவரச் சொல்லி கிழக்கு முகமாகப் போடச் சொன்னார். அதன் மேல் நிறைய நெல்லைப் பரப்பச் சொன்னார். தனது வஸ்திரத்தை அதன் மேல் போட்டு, பத்மாஸனத்தில் அமர்ந்து கண்களை மூடினார். அங்கு ஏகக் கூட்டம் கூடிவிட்டது.

சில விநாடிகள்தான். திடீரென்று பலகையின்மேல் பொரபொரவென்று நெல் பொரிகிற சத்தம். லேசாகப் புகையும் வெளிப்பட்டது. ஸ்வாமிகள் எழுந்தார். நெல் மேல் போட்டிருந்த வஸ்திரத்தை எடுத்தார். பலகையின் மேல் வெள்ளை வெளேரென நெற்பொரிகள். கூட்டம் பிரமிப்புடன்
வியந்தது!

ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கேள்வி கேட்ட சிஷ்யனைப் பார்த்தார். கேவிக்கேவி அழுதபடியே நின்றிருந்தான் அவன். ஒருவருக்கும் பேச நா எழவில்லை!’’ மகா ஸ்வாமிகள் இந்தச் சம்பவத்தைச் சொல்லி முடித்தார். சங்கரன் கண்களிலும் நீர். பிரமித்துப் போய் நின்றிருந்தான்.

சற்றுப் பொறுத்து சங்கரன், ‘‘பெரியவா... நீங்க...’’ என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க...

இடைமறித்த மகா ஸ்வாமிகள், ‘‘என்ன சங்கரா... ‘பெரியவா... நீங்க அந்த மாதிரி பலகைலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி பொரிச்சுக் காட்றேளா?’னு கேக்கப் போறியா?’’ என்று இடிஇடியென்று சிரித்தார்.

சங்கரன் சாஷ்டாங்கமாக மகா ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, ‘‘போதும் பெரியவா... மந்திர ஸித்தியோட மகிமையை இந்த அளவுக்கு நீங்க விளக்கிச் சொல்லி நான் புரிஞ்சுண்டதே போதும். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் புறப்படறேன்’’ என்று தெளிவடைந்தவனாக ஆச்சார்யாளிடம் விடைபெற்றான்.