கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, November 1, 2019
துளசிதாசர்
மகாபாரதத்துடன் தொடர்புடைய ஊர் அஸ்தினாபுரம்.
இப்போதைய டில்லி. இங்கு பக்திமிக்க குடும்ப பின்னணியில், ஆத்மாராம் என்னும் அந்தணர் வசித்தார். இவர் டில்லிபாதுஷா அக்பர் அவையில் அமைச்சர். இவரது புதல்வரே துளசிதாசர். ஆத்மாராம் தன் மகனை கல்வியில் சிறந்தவராக வளர்த்தார். அடிக்கடி அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசியல் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். மம்தாபாய் என்பவரை மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். மகனை அரண்மனைப்பணியில் ஈடுபடுத்திய பிறகு, ஓய்வு பெற்றார்.
துளசிதாரும் மன்னர் பாராட்டும்விதத்தில் பணியைத் திறம்படச் செய்து வந்தார். அதே சமயத்தில், அவர் சிற்றின்ப
பிரியராகவும் இருந்து வந்தார். தாசிப்பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் வீடே கதி என்று கிடந்தார். எனவே பணியிலும், வீட்டு நிர்வாகத்திலும் குளறுபடி ஏற்பட்டது.
மம்தாபாய்க்கு தன் கணவரைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லை. ஆனால், துளசிதாசரின் அம்மாவுக்கோ கோபம் கொப்பளித்தது. பிள்ளையைக் கண்டித்தார். ஆத்மாராம் மகனுக்கு புத்திமதி கூறியதோடு, ஒருபோதும் தாசியரைத் தீண்டுவதில்லை என்ற சத்தியத்தையும் பெற்றுக் கொண்டார்.
பிறகு அவர்கள் தங்கள் சொந்தஊரான ராஜாப்பூருக்கு சென்று விட்டனர். அரண்மனைப் பணிகளை அறவே மறந்துவிட்ட துளசிதாசரைக் காண, அக்பரே ராஜாப்பூர் வந்துவிட்டார்.
ஒரு மாளிகையில் இருந்து கொண்டு துளசிதாசருக்கு ஆள் அனுப்பினார். துளசிதாசரும் மன்னரைக் காணச் சென்றார். மன்னர் அவரை அழைத்துக் கொண்டு டில்லி கிளம்பினார். ஆனால், மனைவி மம்தாவைப் பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை. அவரைக் காண்பதற்காக ராஜாப்பூர் கிளம்பிவிட்டார்.
வீட்டுக்குள் நுழையும் போதே "மம்தா மம்தா!' என்று கத்திக் கொண்டே நுழைந்தார். அப்போது, மம்தாபாய் தன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு சென்று மனைவியைப் பார்த்து விட துடித்தார். யமுனாநதியைக் கடந்து தான் மம்தாவின் தாய்வீட்டுக்குச் செல்லமுடியும். இரவுப் பொழுதில் ஆற்றைக் கடக்க பரிசல் இல்லை. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. யமுனையில் கட்டை போல ஒரு பிணம் மிதந்து வந்து கொண்டிருந்தது. அதில் ஏறிக் கொண்டு அக்கரை சேர்ந்தார். வீடு பூட்டியிருந்தது. ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு மேலே ஏறினார். ஏறிய பிறகு பற்றி ஏறியது பாம்பு எனத் தெரிந்தது.
கணவரைக் கண்ட மம்தா, ""சுவாமி! நிலையற்ற சுகத்துக்காக பிணத்தை ஓடமாக்கி, பாம்பை கயிறென எண்ணி வந்துள்ளீர்கள். இந்த உடலை விரும்புவதை விட, பிறவிக்கடலைத் தாண்டச் செய்யும் ஓடமாக கடவுளைச் சரணாகதி அடைந்து வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள் ,'' என்று எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட, துளசிதாசருக்கு ஞானக்கண் திறந்தது. மனைவியை குருநாதராக எண்ணினார்.
இடைவிடாமல் ராமநாமத்தில் ஆழ்ந்தார். பரமஞானியாக மாறினார். மனம் திருந்திய பிள்ளையைக் கண்ட பெற்றோர்
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிலகாலம் கழித்து, பெற்றோர் இறந்து விட்டனர்.
ஊன் உறக்கத்தை மறந்த துளசிதாசர், ராமநாமத்தை இடைவிடாமல் ஜெபித்து வந்தார். ராமாயண உபன்யாசம் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
ஒருமுறை பூதம் ஒன்று துளசிதாசரின் திருவடி பட்டு பாவம் நீங்கப்பெற்றது. தான் பெற்ற நன்மைக்காக அவரின் முன் தோன்றி, ""சுவாமி! அடியேனுக்கு உதவி செய்ததற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ராமாயண உபன்யாசத்தில் அந்தணர் வடிவில் எழுந்தருளும் ஆஞ்சநேயரைச் சந்தித்தால் நிச்சயம் உங்களுக்கு ராமதரிசனம் கிடைக்கும்'' என்றது. துளசிதாசரும் ராமாயண உபன்யாசத்தில் அந்தணர் வடிவில் அமர்ந்திருந்த ஆஞ்சநேயரைக் கண்டு வணங்கினார். ""சுவாமி, அடியேனும் உம்மைப்போல ராமபிரானைத் தரிசிக்கவேண்டும்'' என்று வேண்டிக் கொண்டார்.
துளசிதாசரும், மம்தாபாயும் இல்லத்தில் பஜனை நடத்திவந்தனர். ஆஞ்சநேயரிடம் வேண்டியபடி, ராமபிரானும் ஒருநாள் பட்டாபிஷேக கோலத்தில் துளசிதாசருக்கு காட்சியளித்தார். ""துளசிதாசா! ஆஞ்சநேயனே உனக்கு உபதேசம்செய்துஅருள்புரிவான். என் அவதாரக் காவியத்தை "ராமசரிதமானஸ்' என்னும் பெயரில் எழுதுவாயாக!' என்று வரம் அளித்து மறைந்தார். அதன்படி, ராமபிரானின் மகிமையை மக்களிடம் பரப்பும் தெய்வீக பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
ஆஞ்சநேயரின் உபதேசமகிமையால் துளசிதாசர் ராமாயணத்தை இந்தியில் எழுதி அழியாப் புகழ் பெற்றார். மாமன்னர் அக்பர் அவருக்கு பொன்னும் பொருளும் காணிக்கையாக தந்து மகிழ்ந்தார். ஒருதடவை துளசிதாசர் ராமநாமத்தை ஜெபித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது பெண் ஒருத்தி, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினாள். கண்விழித்த அவர், ""தீர்க்க சுமங்கலியாக வாழ்க!'' என்று வாழ்த்தினார். அவ்வார்த்தைகளைக் கேட்ட அப்பெண் அழுது அரற்றினாள். ""ஐயனே! என் கணவர் இப்போது தான் இறந்து போய்விட்டார். அவருடன், நானும் செல்லப் போகிறேன். அதற்கு முன் உங்களைத் தரிசித்தால் என் பாவம் தீரும் என்று இங்கு வந்தேன்!'' என்று சொல்லி அழுதாள்.
துளசிதாசரின் வாயிலிருந்து வந்த தெய்வீக வார்த்தைகள் பொய்க்கவில்லை. அவள் வீட்டுக்கு திரும்பினாள். என்ன ஆச்சரியம்!அவளது கணவன் உயிர் பெற்று அமர்ந்திருந்தான். இந்நிகழ்ச்சியால் ராமநாம மகிமையும், துளசிதாசரின் புகழும் நாடெங்கும் பரவியது. தன் நூலான "ராமசரிதமானஸ்' காவியத்தை அக்பரின் அவையில் அரங்கேற்றம் செய்தார். அதிலுள்ள கீர்த்தனைகளை வியந்து கேட்டார் மன்னர். துளசிதாசரும், மம்தாபாயும் ராமநாம பஜனையின் மணிமகுடமாக திகழ்கின்றனர்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...