Tuesday, November 12, 2019

நம்பிக்கை... விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.



'நதியின் கரைக்கு அருகில் ஆசிரமம் வைத்து, தனது சிஷ்யர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார் ஒரு குரு. ஆசிரமத்திற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் நதியைத் தாண்டிய கிராமத்திலிருந்து படகின் வழியாக வர வேண்டியிருந்தது.

ஒரு சிறுமி தினமும் தனது வீட்டிலிருந்து ஆசிரமத்திற்கு, இந்தப் படகின் மூலமாகவே பால் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பாலைக் கொடுத்துவிட்டு, குருவின் போதனைகளை ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொண்டு செல்வாள்.

ஒரு முறை, 'இன்ப துன்பம் நிறைந்த இந்த வாழ்வு என்ற கடலைக் கடப்பதற்கு, இறைவனின் நாமம் ஒன்றே போதும்..!' என்று குரு போதித்த போது... சிறுமி அகமகிழ்ந்து போனாள். காரணம் இவள் எப்போதும் 'கிருஷ்ணா, கிருஷ்ணா...!' என்று, நாம ஸ்மரணம் செய்து கொண்டே இருப்பவள்.

படகு வருவதற்கு தாமதமாவதால்... இவள் ஆசிரமத்திற்கு பால் கொண்டு வருவதும் தாமதம் ஆகிக் கொண்டு போனது. கோபம் கொண்ட குரு, 'இனி, இதுபோல தாமதம் ஆனால்... உன்னிடம் பால் வாங்குவதை நிறுத்தி விடுவேன்...!' என்று எச்சரித்தார். சிறுமியோ, ' படகுக்காரர்தான் தாமதப்படுத்துகிறார்..' என்று பதிலளித்தாலும், குரு அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

பால் கொண்டு வருவது தடைபடுமே என்பதைவிட, குருவின் போதனைகள் தடை படுமே என்பதுதான் சிறுமியின் கவலையாக இருந்தது. அவளது கவலைக்கு ஏற்ப, அடுத்த நாள் காலையில் படகுக்காரர் வருகையும் தாமதமானது. குருவின் நிந்தனைக்கு ஆளாவோமோ என்ற பயத்தில் இருந்த சிறுமிக்கு... குருவின் போதனை ஞாபகத்திற்கு வந்தது.

'இறைவனின் நாமம் கடலையே கடக்க உதவும் என்றால்... எனது கிருஷ்ண நாமம் ஏன் இந்த ஆற்றைக் கடக்க உதவாது...?' என்ற எண்ணம் உதித்தது. மறு கணமே... கண்களை மூடிய படி 'கிருஷ்ண பகவானை' மனதில் நிறுத்தி... அவனது நாமத்தை ஸ்மரித்தபடியே... நதியில் நடக்கலானாள். கரைதட்டியபின்தான் கண்களை விழித்துப் பார்த்தாள். அவள் நதியைக் கடந்துவிட்டிருந்தாள்.

அன்று சீக்கிரமாகவே பால் கொண்டு வந்து விட்டதால், குரு, 'என்ன... படகுக்காரன் சீக்கிரமாக வந்துவிட்டானா...?' என்று கேட்டார். 'இல்லை சுவாமி ! தாமதமானதால், நீங்கள் கற்றுக் கொடுத்த யுக்தியைக் கொண்டே... ஆற்றைக் கடந்து வந்து விட்டேன்...' என்றாள் சிறுமி.

ஆச்சரியமடைந்த குருவிடம், சிறுமி 'அந்த பெரிய கடலைக் கடப்பதற்கு இறைவனின் நாமம் ஒன்றே போதும் எனும்போது... இந்த சிறிய ஆற்றைக் கடக்க எனது 'ஸ்ரீ கிருஷ்ண நாமமே' போதும் என்று... அதை ஸ்மரித்துக் கொண்டே... நடந்து வந்து விட்டேன்...' என்றாள்.

ஆச்சரியத்தின் எல்லையிலும்...நம்பமுடியாத நிலையிலும் இருந்த குரு, 'எங்கே, என்னுடன் வந்து நடந்து காட்டு பார்க்கலாம்...' என்றதும், மிக மகிழ்ச்சியுடன் குருவை அழைத்துக் கொண்டு, ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் கரையருகே சென்று நின்றாள்.

கண்களை மூடிய படி... பகவான் நாமத்தை ஸ்மரித்த படியே... நதியில் நடக்க ஆரம்பித்தாள் சிறுமி. எங்கும் கண்டிராத அற்புதம் தன் கண்முன் நிகழ்வதைக் கண்ட குரு... ஆச்சரியத்தில் மூழ்கி நிற்க... கூடவே குரு, தன்னோடு வரவில்லை என்பதை உணர்ந்த சிறுமி, கண்களைத் திறந்து... 'வாருங்கள்...!' என்று அழைக்க, குருவும் அவளைப் பின்தொடர்ந்தார்.

அதிசியத்திலும் அதிசியமாக... தானும் நீரில் நடப்பதை உணர்ந்து... சற்றே பதைபதைத்து... தனது வேஷ்டியை நீரில் படாதவாறு... சற்றே தூக்கி விட.. உடனே கால்கள் நதியில் முழ்கி.. தரையைத் தொட்டது. தனது அவநம்பிக்கையை நினைத்துக் குமைந்து போனார் குரு'.

ஸாய்ராம்.