Sunday, November 17, 2019

புதுமனை குடிபுகும் போது புதுமனை குடிபுகும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள்...!!!



நமது வாழ்வில் புதிய வீடு கட்டுவதற்கும் அந்த வீட்டை மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் சூழ்ந்திருக்க மட்டில்லா மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும், இறைவன் கருணை வேண்டும். அதற்கேற்றாற்போல் நாமும் சில நெறிகளை கடைபிடிக்க வேண்டும். கஷ்டப்பட்டு, கடன்பட்டு, கட்டிய வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திட என்ன நடைமுறைகளைப் பின்பற்றினால் உத்தமமாக இருக்கும் என்பதை வாசகர்கள் விரிவாக தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

அவர் (கணவர்) உடனே வந்து புதிய வீட்டில் குடியேறி முடிந்தவுடன் அடுத்த பிளைட்டை பிடித்து வேலைக்குச் சென்றுவிட வேண்டியுள்ளது. எனவே அவருக்கு விடுமுறை கிடைத்த நாளில் கிரகப் பிரவேசம் செய்கின்றோம் என்று வீட்டுப் பெண்மணிகள் கூறுவார்கள். வீடு குடியேறும்போது கடைபிடிக்க வேண்டிய நாள், நட்சத்திரத்தை மட்டும் மறந்து விடுவார்கள்.

நாள், நட்சத்திரம், லக்னத்தைத் தேர்வு செய்யாமலும், கிரகப் பிரவேசம் செய்து விடுவார்கள். அதனால் வரப்போகும் சிரமங்களை அறிந்திருக்க மாட்டார்கள். லட்சக்கணக்கில் பணம் போட்டு வீடு கட்டும் நாம் வீடு முடியேறும்போது நாள், நட்சத்திரம், லக்னத்தை மறந்து விடுகிறோம். கட்டிய வீட்டில் லட்சுமி காடாட்சம் வரவேண்டும் என்பதையும் நாம் அறிய வேண்டும். அதற்கேற்றவாறு குடியேறும் நாட்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

1. கிரகப் பிரவேசத்துக்கு கூடாத நிலைகள்:

மேற்கூரை கட்டாமலும், கதவு போடாமலும், சுவர், தரை பூசாமலும் வீட்டில் பிரவேசித்தால் அந்த வீட்டில் துஷ்ட ஆவிகள் புகுந்து விடும். பிராண ஹாணியும் ஏற்பட்டு விடும். எனவே மேற்கண்டவற்றை முடித்த பிறகே கிரகப் பிரவேசம் செய்ய வேண்டும்.



2. கிரகப் பிரவேசம் செய்யும் கிழமைகளில் ஏற்படும் நன்மை, தீமைகள்:

ஞாயிற்றுக்கிழமை - வாழ்க்கை சிறக்கும்.

திங்கட்கிழமை - லட்சுமி கடாட்சம் வரும்.

செவ்வாய்க்கிழமை - குடும்ப ஒற்றுமை குறையும்.

புதன்கிழமை- நல்ல வாழ்க்கையுடன் குடும்பம் உயரும்.

வியாழக்கிழமை - பெருமையான வாழ்வு உண்டு.

வெள்ளிக்கிழமை - மனைவிக்கு ஆகாது. அவர் செயல்களில் தடுமாற்றம் வரும்.

சனிக்கிழமை - சுகமான வாழ்க்கை உண்டு.



வீடு குடியேறும்போது உள்ள லக்னத்தால் வரும் பலன்கள்

கிழக்கு வாசல்

கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டியவர்கள் கடகம், சிம்ம லக்னம் உள்ளபோது கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது. அப்படி குடியேறினால் வீடு கட்டியவருக்கு ராகு தசை, கேது தசை வரும்போது விஷஜந்துக்களால் சிரமம் வரும். மனைவியால் விருத்தி ஏற்படாது. எனவே கிழக்கு வாசல் வீடு கட்டியவர்கள் கடகம், சிம்ம லக்னங்களில் குடியேறக் கூடாது.

பரிகாரம்

அப்படி குடியேறி இருப்பவர்கள் அருகில் உள்ள நவகிரகத்தில் உள்ள ராகு, கேதுவுக்கு ஒன்பது சனிக்கிழமைக்கு காலை 9.00 முதல் 10.30-க்குள் நெய் விளக்கு ஏற்றி வரவேண்டும். தாக்கம் குறையும்.

தெற்கு வாசல்

தெற்கு வாசல் வீடு கட்டியவர்கள் வீட்டில் துலாம், விருச்சிக லக்னத்தில் குடிபோகக் கூடாது. இந்த இரு லக்னங்களில் குடிபுகுந்தால் குடிபுகுந்த 60 நாட்களுக்குள் கெடுதலான பலன்கள் வந்துவிடும்.

பரிகாரம்

மேற்கண்ட லக்னங்களில் தெற்கு வாசல் வீடு கட்டியவர்கள் குடியேறி இருந்தால் அருகில் உள்ள அய்யனார் ஆலயத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்து வந்தால் தாக்கம் குறையும்.

மேற்கு வாசல்

மேற்கு வாசல் வீடு கட்டியவர்கள் மகரம், கும்ப லக்னங்களில் புது வீட்டில் குடியேறக் கூடாது. அப்படி குடியேறினால் குடும்பத் தலைவனுக்கு ஆகாது.

மேற்கண்ட லக்னங்களில் மேற்கு வாசல் வீட்டில் குடியேறியிருந்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்த வந்தால் தாக்கம் குறையும்.

எந்த ராசி, எந்த திசை வீட்டிற்கு ஆகாது என்ற விவரம்:

கிழக்கு வாசல் வீடு கட்டியவர்கள் மீன ராசி உள்ள நாட்களில் குடியேறக் கூடாது. மேற்கு வாசல் வீடு கட்டியவர்கள் தனுசு ராசி வரும் நாட்களில் புதுவீட்டில் குடியேறக் கூடாது. தெற்கு வாசல் வீடு கட்டியவர்கள் மேஷ ராசி வரும் நாட்களில் குடியேறக் கூடாது. வடக்கு வாசல் வீடு கட்டியவர்கள் ரிஷப ராசி வரும் நாட்களில் குடியேறக் கூடாது. (இந்த ராசிகளில் குடியேறினால் குடும்பத் தலைவருக்கு ஆகாது. (அனுபவத்தில் கண்ட உண்மை.)



பரிகாரம்

மேற்குறித்த ஆகாத ராசியில் குடியேறி இருந்தால் 27 சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், வெற்றிலை, பாக்கு தேங்காய், பழத்துடன் தானம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் குடும்பத் தலைவரைப் பாதிக்காது.

ஆவலோடு எதிர்பார்ப்போடு கட்டிய வீட்டில் வாழையடி வாழையாக குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்க வாசகர்களும், அவர்களுக்கு தெரிந்தவர்களும் அனைவரும், மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றி புதுவீட்டில் குடியேறி வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்!

குறிப்பு: வாடகைக்கு குடியிருக்க செல்வோர் அந்த வீட்டில் கதவு ஒடிந்தோ, கீறல் விழுந்தோ, நட்டுகள் கழண்டு இருந்தால் யோசித்து செல்ல வேண்டும். ஏனெனில் அந்த வீட்டில் குடியிருப்பவர் முன்னேற முடியாது. சிரமம் துரத்தி வருகின்றது என்று அர்த்தம்.



வாழ்க வளமுடன்