Saturday, November 16, 2019

பழநியில் போகர்!



சித்தர் போகரின்
கனவில் வந்தாள் அவரது இஷ்டதெய்வமான புவனேஸ்வரி. ‘போகா! பழநிமலைக்குப்போய்த் தவம் செய். அங்கே உனக்கு மகத்தான கடமை காத்திருக்கிறது’ என்று சொன்னாள்.

பழநிக்குச் சென்றார் போகர். சண்முகா நதியில் குளித்தார். பழநிமலையில் ஏறினார். அங்கு தியானத்தில் அமர்ந்தார். முருகனை மனத்தில் இருத்தித் தவம் செய்தார்.

அகத்தியருக்குத் தமிழ்கற்றுக் கொடுத்தவர் முருகப் பெருமாள் என்று போகர் அறிந்திருந்தார். தன் குருவின் குருவுக்கு மகத்தான மரியாதை செய்ய வேண்டும் என்பது போகரின் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. பழநியில் பல மாதங்கள் தவம் இருந்தார். கடுமையாக தியானம் செய்தார். அவர் இதழ்கள் ‘ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா!’ என்று முணுமுணுத்தபடி இருந்தன. இவருக்குப் பழநியிலும் சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்களில் புலிப்பாணி என்ற சித்தர் போகரின் சீடரானார். அவரும் போகரை குருவாக ஏற்று பல பாடங்கள் கற்றார் போகரிடமிருந்து.


போகரின் தவம் இரவு பகல் என்று தொடர்ந்தது. அலுப்புத் தட்டினால் மலையில் இருந்து இறங்கி சண்முகா நதியில் குளிப்பார். விபூதி பூசுவார். பஞ்சாமிர்தத்தை உணவாகக் கொள்வார்.

ஒரு நாள் புலிப்பாணி ‘குருவே! இங்குள்ள காடுகளில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறது. மனிதர்களுக்கும் பசுக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து நேரும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் புலிகளை என்ன செய்யலாம்?’ என்று கேட்டார் புலிப்பாணி.

புன்னகையுடன் சீடரைப் பார்த்தார் போகர்.

‘புலிப்பாணி! உயிர்களைக் காப்பது நம் கடமை. அதை ஒழிப்பது அல்ல. புலிக்கும் இந்த விதி பொருந்தும்’ என்றார்.

அன்று முழுநிலவு நாள். போகர் தவத்தில் இருந்தார். ‘ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா!’ என்று அவர் இதழ்கள் முணுமுணுத்தன. நடுஇரவில் அவர் முன் பேரொளி தோன்றியது. கண்கள் திறந்தார் போகர். ஒளி வெள்ளம் ஜெகஜ்ஜோதியாக
இருந்தது. அதன் நடுவில் முருகன் தண்டம் ஏந்தி, ஆண்டிக்கோலத்தில் காட்சியளித்தார். போகர் பரவசமானார். கண் இமைக்கவும் மறந்து முருகனைப் பார்த்துக்கொண்டே இருந்தார். போற்றித் துதித்தார். விழுந்து வணங்கினார்.

முருகப் பெருமான் போகரைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். ‘போகரே! உம்மைப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உமக்கொரு முக்கிய காரியம் உள்ளது. இதோ இப்போது நான் தண்டத்துடன் ஆண்டியாகக் கோவணம் அணிந்த திருக்கோலத்தில் நிற்கும் கோலத்தை விக்கிரகமாக உருவாக்கு. நீ உருவாக்கப் போகும் மேனியில் மருத்துவ மகிமை இருக்க வேண்டும். என் தோற்றத்தை நன்றாக உற்றுப் பார். இதே போல் உருவம் அமைத்து இங்கு பிரதிஷ்டை செய். அந்த விக்கிரகத்தைக் கோடிக் கணக்கான மக்கள் தரிசிக்கும் பாக்கியம் அமையப் போகிறது. உன் பணி தடையில்லாமல் நடக்க என் அருள் ஆசி எப்போதும் உண்டு’ என்றார் முருகன்.

கடவுளை நேரில் கண்ட பிரமிப்பு, பெருமை, மகிழ்ச்சி, தெய்வத்தொண்டு செய்ய வாய்ப்பு…! இதையெல்லாம் எண்ணி போகர் சிலிர்த்தார். மகிழ்ந்தார். வியந்தார்.

‘சுவாமி! அடியேனுக்கு மகத்தான வாய்ப்பு அளித்து என்னைப் பெருமைப்படுத்திவிட்டீர்கள். உங்கள் திருமேனியைச் சிறப்பாகத் தத்ரூபமாகச் செய்து இங்கு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்கிறேன். நான் கருவி. தாங்கள்தான் காரணகர்த்தா’ என்று விழுந்து வணங்கினார் போகர்.

தனது தவம் இப்படிச் சிறப்பாகப் பலன் தரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தன் இஷ்ட தெய்வமான புவனேஸ்வரி தேவியை வணங்கினார்.

‘அம்மா! தாயே! தாங்கள் சொன்னபடி முருகன் எனக்குக் காட்சி தந்துவிட்டார். அவரது திருவுருவை அமைத்துக் கோயில் கட்டுகிறேன் தாயே. எனக்கு இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க அருளும் ஆசியும் கொடு தாயே!’ என்று வணங்கினார்.

பழநிமலை மீது முறைப்படி கோயில் கட்ட முனைந்தார். முருகனின் ஆணையை நிறைவேற்றத் தடைவருமா? பல செல்வந்தர்களும் மன்னனும் முருகனின் பக்தர்களாக இருந்தார்கள். அனைவரும் முருகனுக்குக் கோயில் கட்ட முழுமனத்துடன் உதவினார்கள்.

போகர் மருத்துவகுணம் கொண்டதாக
நவபாஷாண மூலிகைகளைக் கொண்டு முருகன் விக்கிரகம் செய்ய முனைந்தார். நவபாஷாணம் கிடைக்க அவர் சிரமப்படவில்லை. அவரது முயற்சி சடசட என்று பலன் கொடுத்தது. நவபாஷாண மூலிகைகளைக் கொண்டு பக்குவப்படுத்தி முருகன் திருமேனியைச் செய்தார். அவர் மிகவும் சுத்தமாக விரதம் காத்துத்தான் விக்கிரகம் செய்தார்.

விக்கிரகம் முழுமை பெற்ற பின் பார்த்தார். தான் நேரில் பார்த்த அதே தோற்றத்தில் விக்கிரகம் இருந்ததை எண்ணி வியந்தார். மகிழ்ந்தார். சிலிர்த்தார்.

கோயில் கட்டப்பட்டது. கருவறையில் முருகன் விக்கிரகத்தை தண்டாயுதபாணி தெய்வத்தின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார் போகர். மக்கள் வெள்ளம் மலையில் குவிந்தது. போகரே தயாரித்த விபூதி அபிஷேகம் செய்யப்பட்டது. பஞ்சாமிர்தம் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்தார்.

முருகனின் அபிஷேக விபூதியும் அபிஷேக பஞ்சாமிர்தமும் பிரசாதமாக பக்தர்களுக்குத் தரப்பட்டன. சண்முகா நதியில் இருந்துதான் நீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் நடக்கும். தனது குடிலில் போகர் தியானமும் தவமும் செய்வதைத் தொடர்ந்தார்.முருகனுக்கு அவரே பூஜையும் செய்தார்.

ஒருநாள் முருகனுக்கு சண்முகா நதியில் இருந்து நீர் கொண்டுவரும்போது மலையில் செடிகளுக்கு நடுவில் ஒரு புலி படுத்திருந்தது. அதனிடமிருந்து தீனமாகக் குரல் கேட்டது. இதைக் கவனித்தபடி சென்ற போகர் மலை மீது உள்ள கோயிலில் அபிஷேகம் செய்து பூஜை செய்தார்.

இதையெல்லாம் செய்துவிட்டு அவர் புலி இருந்த இடத்துக்கு வந்தார். புலிக்குக் கடுமையான காயம் பட்டு ரத்தம் சிந்தியிருந்தது. வெட்டுக்காயம் போல் தெரிந்தது. போகரைப் பார்த்துப் புலி உறுமவில்லை. தாக்க முனையவில்லை. அமைதியாகப் பார்த்தது. போகர் பச்சிலைச்சாறை புலியின் காயத்தில் போட்டார். சற்று உறுத்தல் ஏற்பட்டது போலும் புலிக்கு. புரண்டு படுத்தது. இன்னொரு மூலிகைச்சாறை முகத்தில் ஊற்றினார். அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது. அதைத் தூரத்தில் இருந்து பார்த்தார் புலிப்பாணி.

‘பயப்படாதே புலிப்பாணி! புலி நமது நண்பன். இந்தப் புலி நமக்கு உதவியாக இருக்கும். ஐயப்பன் புலியில் ஏறி சவாரி செய்தது போல் நாமும் இதில் சவாரி செய்யலாம். ஆமாம் புலிப்பாணி!’ என்று
சிரித்தார் போகர்.

‘குருநாதா! தாங்கள் என்னைக் கேலிசெய்கிறீர்கள். புலியின் மீது சவாரி செய்ய முடியுமா?’

சிரித்தார் போகர்.

‘அதை நீயே செய்து காட்டுவாய் புலிப்பாணி! எல்லாம் முருகன் திருவிளையாடல். நாம் கருவிகள்!’

தினசரி சண்முகா நதியிலிருந்து குடங்களில் நீரைக் கொண்டுவந்து முருகனுக்கும் போகருக்கும் கொடுக்கும் பணியைப் புலிப்பாணி ஏற்றுக்கொண்டார்.

ஒரு நாள் புலிப்பாணி சண்முகா நதியில் குளித்துவிட்டு நீரைக் குடத்தில் கொண்டுவர முனைந்தபோது புலி அங்கே வந்தது. புலிப்பாணிக்கு முதலில் வியர்த்தது. புலி பற்றிய பயம்தான். புலி சாதுவாக அருகே வந்து தன் முன்காலால் புலிப்பாணியைச் சைகையால் தன் மீது ஏறி அமரச்சொன்னது.

தண்ணிர்க்குடத்துடன் புலிப்பாணி கொஞ்சம் பயத்துடன் புலியின் மீது அமர்ந்தார். புலி நிதானமாக நடந்துவந்து பழநிமலை மீது ஏறி கோயில் வாசலில் நின்றது. புலிப்பாணி இறங்கிக்கொண்டார். புலியின் பண்பைக் கண்டு சிலிர்த்தார் புலிப்பாணி. புலியின் நண்பனானார் அவர்
.அதன்பிறகு தினமும் சண்முகா நதி நீரைக் குடத்தில் எடுத்துக்கொண்டு புலியின் மீது சவாரி செய்து கோயிலை அடைவார் புலிப்பாணி.

புலிப்பாணி, முருகனுக்கும் போகருக்கும் சிறப்பாக பூஜையும் பணிவிடையும் செய்தார். போகர் முருகனை வணங்கினார். உலக மக்கள் மகிழ்ச்சியாக இருக்க பழநிமலையில் அமர்ந்து தவம் செய்தார். தியானம் செய்தார். பழநியிலேயே போகர் முக்தியடைந்தார்! அவரது அருளாசி பழநிமலை செல்பவர்களுக்கெல்லாம் இன்றும் கிடைத்து வருகிறது!