Tuesday, August 6, 2019

ஞான சரியை பாடல் 1

🙏☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

*ஞான சரியை பாடல் 1*
********
*மரணமிலாப் பெருவாழ்வு
பெற்றிடலாம் வாரீர் !*
🙏☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁🙏

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவோடு தெரிவித்து மகிழ்கின்றேன்.👏

இதற்கு முந்தைய பதிவுகளில் திருவருட்பா முழுப் பாடல்கள் பொருள் காணும் வரிசையில் *அருட்பெருஞ்சோதி அட்டகம் , திருக்கதவு திறத்தல் , சுத்த சன்மார்க்க வேண்டுகோள்* முதலிய தலைப்புகளிலிருந்து முழு பாடல்களின் பொருளை ஒருவாறு எனது அற்பஅறிவினால் திருவருளிடம் விசாரிக்க தொடங்கவும், திருவருளும் கடையேன் பொருட்டு கருணை கொண்டு எனது அற்ப அறிவினில் உணர்த்திய வண்ணம் கண்டுகொண்டு , அவற்றை நமது சன்மார்க்க சகோதர சகோதரிகள் ஆகிய தங்களுடன் பகிர்ந்து கொண்டேன் .

அந்த வரிசையில் தற்போது *ஞான சரியை* 28 பாடல்களின் பொருள்களைக் காண்பதற்கு திருவருள் சம்மதத்துடனும் ,
நமது சன்மார்க்க அன்பர்கள் ஒரு சிலரின் வேண்டுதலின் படியும் எனது சிற்றறிவிற்கு உணர்த்திய வண்ணம் பெருமான் துணைகொண்டு, இங்கு தங்களுடன் பகிர்ந்து கொள்ள தயவுடன் முற்படுகின்றேன்.
அந்த வகையில் ஞான சரியை முதல் பாடலின் பொருளை தற்போது காண தயவுடன் முற்படுகின்றேன் 🔥🙏

நமது அருட்பெரும் தந்தை திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் நமது ஊனக் கண்களுக்குத் தெரியாத வண்ணம் அருட்பெருஞ்ஜோதியாய் நம் ஒவ்வொருவரின் அகத்தில் மருவி வந்தமர்வதற்கு முன்னர்,

நம் அனைவரையும் உய்விக்கும் பொருட்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் உள்ள பேருபதேசத்தின்வழி ,

தற்போது ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால், இம்மாளிகையில் உள்ள தீபத்தை ஆராதித்து "ஞான சரியை" பதிகத்தில் குறிப்பிட்டுள்ள வண்ணம் தாங்கள் அனைவரும் ஆண்டவரை வழிபட்டுவாருங்கள் என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளதை திருவருட்பா உரைநடை புத்தகத்தின் வாயிலாக காணமுடிகின்றது.🔥🙏

ஞானசரியை என்பது ,
நமது முன்னைய சித்தர்கள் கடவுளது அருளைப் பெறுவதற்கு உரிய இறை ஒழுக்கங்களாக வகுத்துக் கொடுத்த சரியை கிரியை யோகம் ஞானம் என்ற 16படிகளில் வருகின்ற 13 வது படியாகிய ஞானத்தில் சரியை என்றும் கொள்ளலாம்,
அல்லது ,
எல்லாம் வல்ல கடவுளது "மெய்யறிவை" அடைவதற்குரிய பக்குவத்தைப் பெரும் பொருட்டு நமது அறிவை "ஒழுங்குபடுத்துவதற்கான "அல்லது "நெறிப்படுத்துவதற்கான" வழிப்பாட்டுமுறைகள் என்றும் கொள்ளலாம்.🔥🙏

அப்படி நம்பொருட்டு நமது பெருமான்
தயவுடன் கொடுத்தருளிய ஞானசரியைப் பதிகத்தின் முதல் பாடலின் பொருளை ஒருவாறு எனது சிற்றறிவில் உதித்துவித்த வண்ணமும், மற்றும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் இப்பாடலுக்கு கொடுத்துள்ள விளக்கத்திலிருந்தும் இங்கே தங்கள் அணைவரிடமும் கலந்து பகிர்ந்துகொள்கின்றேன்.🔥🙏

இப்பாடலின் பொருளை காண்பதற்கு முன்பு ஒரு சில திருவருட்பா வரிகளை இங்கு காண்போம்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே
பகராத வன்மொழி பகருகின்றீரே
நண்ணாத தீயின நண்ணுகின்றீரே
நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே *கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர்விட்டு கருதறியீரே*
எண்ணாத தெண்ணவும் நேரும் ஒரு காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.
..... ஆறாம் திருமுறை உலகற்கு உய்வகை கூறல் பாடல் 10

விரைந்து விரைந்து படி கடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்.

*கரைந்து கரைந்து மனமுருகக் கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே*

வரைந்து ஞான மனம் பொங்க மணிமன்றரசைக் கண்டு கொண்டேன்

திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

...... ஆறாம் திருமுறை உற்றது உரைத்தல் பாடல் 6

விரைந்து விரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே, மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்

திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய

வரைந்து வரைந்து எல்லாம்செய் வல்லசித்தன் தானே வருகின்ற தருணம் இது வரம்பெறலாம் நீவீர்

*கரைந்து கரைந்துளம் உருகிக் கண்களில் நீர் பெருகிக் கருணை நட கடவுளைக் உட்கருதுமினோ களித்தே* .
......ஆறாம் திருமுறை ஞான சரியை பாடல் 8

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் *கண்ணில் நீர் பெருகி கால் வழிந்து ஓடிட*

....அருட்பெரும் ஜோதி அகவல் 1459.

*கடவுளைக காண வேண்டுமானால் அழுத கண்ணீர் மாறுமா ஆகாரத்தில் இச்சை செல்லுமா*

..... திருவருட்பா உரைநடை பகுதி.

மேற்கண்ட திருவருட்பா பாடல்களை கவனித்தோமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருளை மனம் உருகி கண்ணில் நீர் பெருகி அழுது தொழுதோமானால் பெற்றுக் கொள்ளலாம்.
என்பதை தெளிவாக நமது பெருமானார் உரைக்கின்றார்கள்.

மாணிக்கவாசக சுவாமிகள் கூட திருவாசகத்தில் *அழுதால் பெறலாமே* என்று கூறுகின்றார்கள்.

ஆகலில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மேலான அருளைப் பெறுவதற்கு மனம் உருகி அன்பு பெருகி கண்ணில் நீர் வழிந்தோட அழுது தொழுதோமானால் பெற்றுக் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.🔥🙏

நல்லது தற்போது மேற்கண்ட ஞான சரியை முதல் பாடலின் பொருளைக் காண்போம்.

இப்பாடலில் இரண்டு முறை வருகின்ற வார்த்தைகள் எல்லாம் ஒரே பொருளை உணர்த்தக்கூடிய அடுக்குத்தொடர் வார்த்தைகள் என்று நினைத்தல் கூடாது , அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட இரண்டு பொருளை உணர்த்தக் கூடியவைகளாகும்
என்பதை உணர்வோம்.

*பாடல்;🌹*
*_நினைந்து நினைந்து_*
************************ ஆன்மாக்களாகிய நாம் ஆண்டவரை வழிபடும்போதுமட்டுமல்ல மற்ற எல்லா சமயங்களிலும் ,
முதலில்நாம் நமது சிறுமைகுணத்தை வெளிப்படுத்தி பிறகு இறைவனின் பெருமைகளைப் புகழ்ந்து போற்றுதல் வேண்டும்,

*அருட் சபை நடம்புரி அருட்பெரும்ஜோதி தெருட்பெருஞ் சீர் சொலத் திகழ்வ சித்தியே.*
...... ஆறாம் திருமுறை 1738.

*இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு*

....... திருக்குறள் கடவுள் வாழ்த்து குறள் 5.

மேற்கண்ட திருவருட்பா மூலமும் திருக்குறள் மூலமும் நமக்கு பெருமானாரும் வள்ளுவப் பெருந்தகையும் கூறுவது என்னவென்றால் எல்லாம் வல்ல இறைவனுடைய புகழை போற்றித் துதிப்பதனால் நம்முடைய முன்வினைகள் தீரவும். புதிய வினைகள் நம்மை அடையாதிருக்கவும் செயல் கூடும் என்பதாகும்.☘

நமது வள்ளல் பெருமான் அவர்களின் திருவருட்பா பாடல் ஒவ்வொன்றையும் கவனித்தோமானால்,

எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்காட்டாத வண்ணம் ,
நான் எனது என்ற "தற்போத" அகங்காரத்தை எழும்பவிடாத வண்ணம் ,
நாயினும் கடையேன்,
ஈயினும் இழிந்தேன்,
புன்னிநிகர் இல்லேன்,
மலத்தில் புழுத்த புழுவினும் சிறியேன்,
இன்னும் எவ்வளவோ சிறுமையான வார்த்தைகளால் முதலில் தன்னைத்தானே இழிவாகச் சொல்லி பிறகு இறைவனை போற்றிப் புகழ்வார்கள்.

அதுபோன்றே நாமும் நமது சிறுமைகளாகிய குற்றங்களை முதலில் நினைத்து வருந்தியும், பிறகு ஆண்டவரின் பெருமையை நினைத்து போற்றி வழிபடுதலும் வேண்டும் என்பதாம்.

ஆகலில் இப்பாடலில் முதலில் வந்த நினைந்து என்பது ஆன்மாக்கள் தங்களது சிறுமையை நினைத்தல் என்பதும் ,
இரண்டாவது வந்த நினைந்து என்பது இறைவனுடைய பெருமையை நினைப்பதும் என்பதுமாகும்.🔥🙏

*பாடல் :🌹*
*_உணர்ந்து உணர்ந்து_ ;*
***********************
ஆண்டவரை கலைகளால் உணர்வது ஒன்று அனுபவத்தால் உணர்வது ஒன்று,
அதாவது படித்த சாத்திர
தோத்திரத்தாலும்,
பிறர் சொல்லக்கேட்ட
கேள்வி ஞானத்தாலும், இறைவனை ஆராய்ந்து அறிந்துணர்தல் என்பது ஆண்டவனை *"சாத்திரத்தால் உணர்வது"* என்பதும்
*"சாத்திர ஞானம்"* என்பதுமாகும்.

மற்றொன்று, ஆண்டவரை படித்த சாத்திரத்தாலும் ,
பிறர் சொல்லக்கேட்ட ஞானத்தாலும் அறிந்து
அகவிசார அறிவினாலும் *"அனுபவித்து உணர்வது"* என்பதாகும் .
இது *"அனுபவ ஞானம்"* என்பதாகும்.

இங்கு ,
*அறிந்து உணர்தல் என்பது ஆராய்ச்சி ஞானம்,*
*அனுபவித்து உணர்தல் என்பது அனுபவ ஞானம்;*

இறைவன் ஓதி உணரக் கூடிய பொருள் அல்ல, ஓதாது உணரக்கூடிய அனுபவ மெய்ப்பொருளாகும்.

*_பொதுவுணர்வு உணரும் போது அலால் பிரித்தே அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி_*

*_உளவினில் அறிந்தால் ஒழியமற்ற அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி_*
..... அருட்பெருஞ்ஜோதி அகவல் 121 122 123 124

ஆகலில்,
இறைவன் உளவினால் அறிந்து அனுபவிக்கக்கூடிய அனுபவ மெய்ப்பொருளாய் இருப்பதனால் அனுபவஞானமே என்றும் சிறந்தது என்பதாகும்.

ஆகலில்,
இங்கு முதலில் வந்துள்ள உணர்ந்து என்பது ஆண்டவரை சாத்திரத்தினால் உணர்வது என்பதும், இரண்டாவது வந்துள்ள உணர்ந்து என்பது ஆண்டவரை அனுபவத்தினால் உணர்வதும் என்பதாகும்🔥🙏

*பாடல்:🌹*
*_நெகிழ்ந்து நெகிழ்ந்து_ ;*
*************************
ஆண்டவரை வழிபடும் போது முதலில் நமது உள்ளம் நெகிழ்வதும் பிறகு உயிராகிய ஆன்மா நெகிழ்வதுமாகும்.

ஆன்மா நெகிழ்ந்தால் அதனுள் இருக்கின்ற உயிருக்குள் உயிராம் இறைவன் அன்பிற்கும் அழுகைக்கும் உவந்து அருள்பாலிப்பார்கள்.

நமது வள்ளல் பெருமான் பிள்ளைப்பெறுவிண்ணப்பத்தில் ஒருபாடலில் ,

*_நிருத்தனே நின்னை துதித்தபோதெல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் பருத்த எனது உடம்பை பார்த்திடற்கு அஞ்சி ஐயோ படுத்தனன் எந்தாய்_* " என்பார்கள்;

ஆகலில் மனம் நெகிழ இறைவனை வழிபடுவதைக்காட்டிலும்,
ஆன்மா நெகிழ இறைவனை வழிபடுதலே சிறந்ததாகும்.

இங்கு முதலில் வந்துள்ள நிகழ்ந்து என்பது மனத்தின் நெகிழ்வையும், இரண்டாவது வந்துள்ள நிகழ்ந்து என்பது ஆன்ம நெகிழ்வையும் குறிப்பதாகும்.🔥🙏

*பாடல்:🌹*
*_அன்பே நிறைந்து நிறைந்து;_*
*******************************
ஜீவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற அன்பு என்பது
*1:காமிய அன்பு,*
*2: நிஷ்காமிய அன்பு*
என இரண்டு வகையாக உள்ளது.

*காமிய அன்பு என்பது* ஏதோ ஒரு பொருளின் பொருட்டோ அல்லது ஏதோஒரு பயனை எதிர்பார்த்தோ ஒருவர் மற்றொருவரிடம்
அன்புகொள்ளுவது என்பது காமிய அன்பு என்பதாகும்.
காமியம் என்பது செயல் அல்லது வினை என்ற பொருள்படும்.

*நிஷ்காமிய அன்பு என்பது* எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல்,
எந்தச் சூழ்நிலையிலும் எதனாலும் மாறுபடாத ஆன்மநேயத்தோடு மற்றவர்கள் மீது அன்புகொள்வது என்பதாகும்.

இதேபோன்று இறைவனை வழிபடும்போதும் முதலில் ஏதோஒன்று எதிர்பார்த்து காமியமாக அன்பு கொள்வதும் பிறகு எதையும் எதிர்பார்க்காமல் மாறாத உண்மை அன்பை செலுத்துவதும் என்பதுமாகும்.

காமிய அன்பு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும்,
எதிர்பார்த்து கிடைத்த பலனுக்கு ஏற்றவாறும் மாறக்கூடியதாகும்.

நிஷ்காமிய அன்பு எக்காலத்தும்,
எதன் பொருட்டும்,
எந்த நிலையிலும் என்றும் மாறாததாகும்.

வள்ளல் பெருமான் ஜீவர்களிடத்தில் தயவும் நமது ஆண்டவரிடத்தில் மாறா உண்மை அன்பும்கொள்வீர் என்பார்கள்;

ஆகலில் ,
நிஷ்காமிய அன்பே என்றும் சிறந்தது என்பதாகும்.

எனவே இங்கு முதலில் வந்துள்ள அன்பு என்பது பலன் கருதி காட்டுகின்ற அன்பு என்பதும்
இரண்டாவது வந்துள்ள அன்பு என்பது எவ்வித பலனையும் எதிர்பார்க்காத மாறாத உண்மை அன்பு என்பதும் அறிதல் வேண்டும்.🔥🙏

*பாடல்:🌹*
*_ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து,_*
******************************
மேற்கூறிய வண்ணம் ஒரு ஆன்மா, தனது சிறுமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் வருந்துகின்றபோது ,
கண்ணீர் பெருக்கெடுத்து வெளிவருகின்றது.
அவ்வாறு தமது சிறுமையை நினைத்து வருந்துகின்ற போது முதலில் வருகின்ற கண்ணீர் அழுகை கண்ணீராக வருகின்றது.

பிறகு இறைவனின் பெருமையை நினைத்தும் ,உணர்ந்தும், நெகிழ்ந்தும் இறைவனையே பற்றி அவர் அருளைப் பெறுவதற்காக ஊன் உறக்கமின்றி வருந்துகின்றபோது, ஆண்டவரின் தயவு கண்டு ஆணந்தகண்ணீர் வருகின்றது,
இந்த இரண்டு கண்ணீரும் பெருக்கெடுத்து உடம்பு நனைக்கப்படுகின்றது;

இந்த அனுபவத்தை வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் 1460வது வரிகளில்,
" *_உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணீல் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட_* "
என்று தெரிவித்து
நமக்கு உணர்த்துவார்கள்.

ஆகலில் இங்கு முதலில் வந்துள்ள நனைந்து என்பது ஜீவர்கள் தமது சிறுமையை நினைத்து வருந்தும்போது வருகின்ற அழகை கண்ணீரால் உடம்பு நனைவதும் இரண்டாவது வந்துள்ள நனைந்து என்பது இறைவன் அருளை வேண்டி ,
மாறாத உண்மை அன்புடன் இறைவனது பெருமையை புகழ்ந்து போற்றித் துதித்து வருந்துகின்ற போது ஆண்டவரின் கருணை கிடைக்கப்பெற்று வருகின்ற ஆனந்தக்கண்ணீர் என்பதும் அறிதல் வேண்டும்.🔥🙏

*பாடல்:🌹*
*அருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும்நாம் வம்மின் உலகியலீர்* .
**************************
மேற்கூறிய வண்ணம் அழுது தொழுது கண்ணீர் பெருகி உடம்பெல்லாம் நனைந்து நின்று,

அழியா வாழ்வை அளிக்கக்கூடிய அருளமுதமே,

இருநிதி எழுநிதி இயல் நவநிதி முதல் திருநிதி எல்லாம் தரும் ஒரு செல்வமா *நன்னிதியே* ,

இவ்வுலக உயிர்கள் எல்லாம் தழைத்து இன்பம்பெறவே அருட்திரு நடம்புரிகின்ற *ஞான நடத்தரசே,*

எழுபிறப்பிலும் எனது உயிருக்கு உற்றதுணையாக வருகின்ற எனக்கு *உரிமையுடைய என் உயிர் நாயகனே* ,

என்று எண்ணத்தாலும் சொல்லாலும் அலங்கரித்து, அலங்கரித்து ,துதித்து வணங்கிடுவோம் வாருங்கள் உலகவரே என்று இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் நமது வள்ளற்பெருமான்.🔥🙏

*பாடல்:🌹*
*_மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்,_*
*************************மேற்கூறியபடி ஆண்டவரை ,
நினைந்து நினைந்து,
உணர்ந்து உணர்ந்து,
நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பினால் நிறைந்து நிறைந்து அதனால் ஊற்றெழும் கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வருந்தி வருந்தி துதித்து வணங்கினால் நரை திரை மூப்பற்று மரணம் எனும் இயற்கை சட்டத்தை உடைத்து மரணமிலா பெருவாழ்வு என்னும் பேரின்ப பெருவாழ்வைப் பெற்று இவ்வுலகில் என்றும் நிலையாக அழிவற்று அருட்பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீரோ என்கின்றார்கள்.🔥🙏

*பாடல்:🌹* *_புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே._*
*************************************
உலகவர்களே நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பிள்ளை என்பதற்காகவும் ,
அவர் எனது தந்தை என்பதற்காகவும், தந்தை மகன் என்ற உறவின் அடிப்படையில் ஒருதலையாக நின்று ஆண்டவரைப்பற்றிய வார்த்தைகளால் இங்கு சிறப்பித்தும், அழகுபடுத்தியும், பெருமைப்பட சொல்லவேண்டும் என்பதற்காக நான் இங்கு பொய் சொல்லவில்லை ,

சத்தியமாகவே சொல்லுகின்றேன் நம்மவரே,

இந்ததருணம்தான் பொற்சபை சிற்சபை என்று சொல்லக்கூடிய பரமாகாசத்திலும் சிதாகாசத்திலும் புகுந்துகொள்ளக்கூடிய தருணமாக இருக்கின்றது ஆகலில் விரைந்து வாரீர் என்று உலகவரை அன்போடும் ஆவலோடும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்🔥🙏

சுத்தசன்மார்க்கம் ஒன்றே சிறந்தது;
சுத்தசன்மார்க்கம் ஒன்றே நிலைப்பது
என்றுணர்ந்து அணைவரும் வாரீர் ! வாரீர் ! ;
....நன்றி,🔥🙏
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி🙏