Tuesday, August 13, 2019

எதிரிகளைஅழிப்பாள் #பிரத்தியங்கிரா தேவி



வறுமையும் நோயும் வந்துவிட்டால், வாழ்க்கையே அவ்வளவுதான் என்று நினைத்துவிடாதே. அதில் இருந்து கிடைக்கும் அனுபவமே உன்னையும் உன் வாழ்வையும் உயர்த்தும் என்றொரு வாசகம்... ஆட்டோவில் எழுதப்பட்டிருந்தது.

உண்மைதான். வாழ்க்கையில், திடீரென்று ஏற்படும் உடல்நலக்குறைகள், பணக்கடன்கள் எல்லாமே புதிய, புடம் போட்ட வாழ்க்கையை நமக்குத் தருகின்றன என்பது நிஜம்தான். இங்கே, கர்மவினை என்பதையும், இதனுடன் இணைத்துதான் சொல்கிறார்கள். எந்த ஜென்மத்து விஷயமோ, கண்ணாடி மாதிரி இப்போது இந்த நாளில், தடாலென்று முகம் காட்டும் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

அப்படி தடாலென்று நமக்கு எதிரே வந்து முகம் காட்டுகிற சில வினைகளை, கர்மவினைகளை நாம் தைரியமாக எதிர்கொள்வதற்கு, அந்த பலஹீனத்தைக் கொஞ்சமேனும் குறைத்து பலம் ஏற்படுத்திக் கொள்வதற்கு தெய்வ தரிசனங்களும் வழிபாடுகளும் துணைநிற்கின்றன.

#சோழிங்கநல்லூர்_மஹாபிரத்தியங்கரா அப்படிப்பட்டவள்தான். நம் பலஹீனங்களின் தாக்கத்தை சற்றே குறைத்து, நம்மை பலம் பொருந்தியவராக மாற்றி அருளும் வித்தை அவளுக்கு கைவந்த கலை.

#பிரத்தியங்கிராதேவி,. நெடிதுயர்ந்த அவளுக்கு முன்னே சிறுதுரும்பென நின்று, அவளை அண்ணாந்து பார்த்து உங்கள் கஷ்டங்களையெல்லாம் முறையிடுங்கள். பிறகு அவள் பார்த்துக் கொள்வாள்.

#பிரத்தியங்கிராதேவி, தீய சக்திகளையெல்லாம் துவம்சம் செய்பவள். உங்களுக்கு யாரெல்லாம் எதிரிகள் என்று இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் வீரியம் இழக்கச் செய்யும் வீரியம் கொண்டவள் அவள். உங்களைச் சுற்றியுள்ள எதிர்ப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிடுவாள் #பிரத்தியங்கிராதேவி.

இந்த நாள்தான் என்றில்லை... எந்த நாளாக இருந்தாலும் சரி. இந்த நேரம்தான் என்றில்லை... எந்த நேரமாக இருந்தாலும் சரி...
#பிரத்தியங்கிராதேவிக்கு செவ்வரளி மாலை சார்த்தி, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அங்கே பூஜித்து வைக்கப்பட்டுள்ள சிகப்புநிற சரடை அதாவது செந்நிறக் கயிறை வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள்... உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கிற துஷ்ட தேவதைகளையெல்லாம் விரட்டியடிப்பாள் தேவி. உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை யாவும் தகர்ந்து தூள்தூளாவதை உணர்ந்து பூரிப்பீர்கள்.

செவ்வாய் , வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காளிகாம்பாள் கோயிலில் கூட்டம் அலைமோதும். ஆண்களை விட பெண்கள் பெருமளவு வந்திருப்பார்கள். தங்கள் கணவரின் நோய் நீங்குவதற்காகவும் உத்தியோகத்தில் இருக்கிற தடைகளைத் தகர்ப்பதற்காகவும் கடன் தொல்லையில் இருந்து மீளவேண்டும் என்பதற்காகவும் மகனுக்கோ மகளுக்கோ தடைப்பட்டுக் கொண்டிருக்கும் திருமணம் விரைவில் நடக்கவேண்டும் என்பதற்காகவும் வேண்டிக் கொள்கிறார்கள். எல்லோரது கோரிக்கைகளையும் செவிமடுத்துக் கேட்கும் கருணை கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. உங்கள் குறைகளையும் கேட்டு, உங்கள் துக்கங்களையெல்லாம் போக்கி, உங்கள் கடனையெல்லாம் தீர்ப்பதற்கு அருள்வாள் அன்னை.

கடனில்லாத வாழ்க்கைதான் எல்லோரின் ஆசையும் விருப்பமும். ‘நம்ம நாடே கடன்லதானே இருக்கு. இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா’ என்று விட்டேத்தியாக விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கடனில்லாத வாழ்க்கை சுகம். கெளரவம். ஆகச்சிறந்த நிம்மதி. மிகப்பெரிய விடுதலை. இந்த சுகத்தை, கெளரவத்தை, நிம்மதியை, விடுதலையை நமக்குத் தந்தருளும் #பிரத்தியங்கிராதேவியை, மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா சத்விஷயங்களையும் வாரி வழங்கும் வள்ளல் அவள்.
ஜெய் பிரத்தியங்கிரா
ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா

-