Saturday, August 10, 2019

எந்த நேரமும் இடையறாது துதிப்போம்!


கடவுளை வழிபடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் உண்டா? எனச் சிலர் கேட்பர். மூச்சுக் காற்றை எப்படி நாம் விடுகிறோமோ அது போல இடைவிடாமல் கடவுளை நினைக்க வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு ஏதாவது தேவை என்றால் அல்லது துன்பம் நேர்ந்தால் கோயிலுக்கு ஓடுகிறோம். 'கடவுளே! உனக்கு கண் இல்லையா? காது இல்லையா?' என பழிக்கிறோம்.

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பைக்கில் லிப்ட் ஒருவர் கொடுத்தால் “தேங்க்ஸ்” சொல்கிறோம்.
தள்ளி உட்கார்ந்து இடம் கொடுத்தால், தாகம் தீர தண்ணீர் கொடுத்தால் மற்றவருக்கு நன்றி சொல்கிறோம்.
குறையில்லாத உடல், நிம்மதியான மனம், அமைதியான வாழிடம் (இந்தியா), வசதி வாய்ப்புகள், நல்ல பெற்றோர், வாழ்க்கைத் துணைநலம், குழந்தைகள், உறவுகள் அளித்துள்ள கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்ல வேண்டாமா?
அதனால் தான் வழிபாட்டை 'காலைக்கடன், மாலைக்கடன்' என்று பெரியவர்கள் கூறினர். திருநாவுக்கரசர் தேவாரத்தில், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்கிறார். கடவுளுக்கு நன்றி சொல்லியே ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும்.

உலகைப் படைத்து, காத்து, அழித்து திருவிளையாடல் நடத்துபவர் கடவுள். நம் சனாதன தர்மத்தைப் பொறுத்தவரையில் கடவுள் ஒளிப் பிழம்பாக இருக்கிறார்.
'அநாதியாய் நின்ற ஜோதிப் பிழம்பு ஒரு மேனியாகி' என முருகனின் அவதாரம் பற்றி சொல்கிறது கந்தபுராணம்.
''கட்டிடம் கட்டுவதற்கு சாரம் எவ்வாறு அவசியமோ அது போல நம் மனம் பக்குவம் பெற உருவ வழிபாடு உதவுகிறது.

கட்டிடம் கட்டி முடிந்ததும் சாரத்தை அவிழ்ப்பது போல பக்குவம் பெற்றவர்களுக்கு உருவ வழிபாடு தேவையற்றதாகி விடும். பக்குவம் அடைந்த ஞானிகள் தங்களின் மனதிற்குள்ளேயே ஒளிவடிவாக கடவுளை வழிபடுவர்'' என்கிறார் ராமகிருஷ்ணர்.

'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரித்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள்' என அம்பிகையை போற்றுகிறார் அபிராமிப்பட்டர்.

உலகையும், உயிர்களையும் படைக்கும் போது அவள் கலைமகளாகவும், காக்கும் போது அலைமகளாகவும், அழிக்கும் போது மலைமகளாகவும் இருக்கிறாள். நதி, ஆறு, ஓடை எல்லாம் நீரோடும் பாதைகள்; அது போல பேர் மாறி, ஊர் மாறி, உரு மாறினாலும் ஒன்றே பராசக்தி என்கிறார் கண்ணதாசன்.
''கடவுளே! என்னை இருளில் இருந்து ஒளிக்கு எடுத்துச் செல்வாயாக'' என்கிறது உபநிடதம்.

ஒளி என்பது அறிவு, வெற்றி, துணிவு போன்ற நேர்மறைச் சிந்தனைகள். இருள் என்பது அறியாமை, தோல்வி, பயம் போன்ற எதிர்மறை சிந்தனைகள்.
அந்த மூலப்பொருளாக விளங்கும் ஒளிக்குன்றை, நேர்த்தியுடன் திகழும் அந்த சக்தியை எந்த நேரமும் இடையறாது துதிப்போம். அந்த ஒளியின் பெயரே சக்தி என்கிறார் மகாகவி பாரதியார். தேவைக்காக மட்டுமே வழிபடாமல், ஆர்வமுடன் எந்த நேரமும் சக்தியை வழிபடுவோம்
மூர்த்திகள் மூன்று பொருளொன்று -
அந்தமூலப்பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை
எந்த நேரமும் போற்று சக்தியென்று.