Tuesday, August 13, 2019

ஆலயம் அறிவோம்: கனக துர்காதேவி கோவில்,விஜயவாடா



பெண் தெய்வ வழிபாடு என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் பாரம்பரியம் ஆகும்.பாரதம் முழுவதும் பல்வேறு அம்பாள் சந்நிதிகள் இருப்பது நாம் பெற்ற பாக்கியம். துர்க்கை அம்மனை வழிபடும் அனைவரும் அம்பாளின் கருணையை பெறுவது என்பது இயல்பான நிகழ்வு.அவர் சுயம்புவாகி வீற்றிருக்கும் ஒரு ஆலயம் பற்றி எழுதுவதில் மிகுந்த உவகை அடைகிறேன்.

கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள நகரமான விஜயவாடாவில் ஒரு காலத்தில் பாறைகள் நதியின் வருகையை தடுத்து மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்தன.மக்கள் சிவ பெருமானிடம் முறையிட மலைகளில் துளையிட்டு நதிநீர் உள்ளே செல்ல வழிவகை செய்ததால் பெஜ்ஜவடா (பெஜ்ஜம் என்றால் சுரங்கம்) என்று பெயர் பெற்று பின்பு மருவி விஜயவாடா என்று அழைக்க படுகிறது .

மகிஷாசுரன் என்னும் அரக்கன் மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான்.அவனை அழிக்க இந்திரகில என்னும் முனிவர் அம்பாளை நோக்கி தவம் புரிந்தார்.அம்பாளிடம் மகிஷாசுரனை வதம் செய்யும் படி வேண்டுகிறார்.முனிவரின் வேண்டுகோளை ஏற்ற அம்பாள் அசுரனை எதிர்த்து போரிட்டு தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார்.

மகிழ்ச்சி அடைந்த முனிவர் அம்பாளை தனக்கு மகளாக பிறக்கும் படி வேண்டுகிறார்.அம்பாள் அவருக்கு மகளாக பிறக்க வேண்டும் என்றால் அவர் குன்றாக அங்கே வீற்றுஇருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த குன்றின் மீதே சுயம்புவாக அருள் பாலிக்கிறார்.அந்த குன்று தான் இன்று இந்திரகீலாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தின் காவல் தெய்வமாக அறியப்படும் துர்க்கை அம்மன் தங்கத்தை மழையாக பொழிய வைத்து அந்த பகுதியை வளமாக்கியதால் கனக துர்க்கை என பெயர் பெற்றார்.

சிவ பெருமான் மல்லேஸ்வரராக வீற்று இருக்கிறார்.அவரை அர்ஜுனன் தவமிருந்து வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றதாக வரலாறு உள்ளது.

அம்பாளை ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்திருப்பது இன்னும் விசேஷம்.

ஆனி மாதம் சுக்ல பட்ச திரியோதசி திதி தொடங்கி பௌர்ணமி திதி வரை ஷகம்பரி என்னும் பண்டிகை கொண்டாட படுகிறது. அதேபோல் இங்கே கொண்டாடப்படும் தசரா பண்டிகையும் பிரசித்தி பெற்றது. பத்து நாட்களும் பத்து வகையான அவதாரத்தில் அம்பாள் அருள் பாலிப்பார்.

எண்கை கொண்ட எம் எண்ணம் நிறைந்த ,அசுரன் அழிக்க சூலம் எடுத்த எந்தாய் இந்திரகீலாத்ரி கனக துர்க்கை அவளை வணங்கி வேண்டிய வரம்தனை பெற்று வாழ்வில் நல்வழி பெறுவோமாக.
கனக துர்கா தேவி சரணம்.
நன்றி....