Wednesday, August 7, 2019

பரிகாரம்:



மனமறிந்து செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவதை போல மனித பிறவிகளாகிய நாம் முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு கர்மா என்கிற பெயரில் இப்பிறவியில் துன்பங்களை பெறாமல் இருக்க பரிகாரம் செய்து கொள்கிறோம்.

அப்படிப்பட்ட பரிகாரம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் ஏற்பட்டது இந்த பதிவு.

பரிகாரம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபட்டு இருக்கும்.சிலர் பரிகாரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் கர்மாவை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறுவர்.சிலரோ விதியை மாற்றும் ஆற்றல் பரம்பொருளுக்கு உண்டு என்பதை உறுதியாக நம்புவார்கள்.இரு தரப்புக்கும் நாம் சொல்வது யாதெனில் முற்பிறவியில் செய்த பாவத்தின் கர்மா இப்பிறவியில் மழை போல் நம்மை சூழும் போது பரிகாரம் என்னும் குடையை பயன்படுத்தி தப்பிக்க முடியும். இருப்பினும் மழையை நிறுத்த நம்மால் முடியாது என்பதும் உண்மை தான்.

கோவில்களுக்கு சென்று அர்ச்சகர் அல்லது புரோகிதர் ஆகியோரிடம் பணம் கொடுத்து பூஜை மந்திரங்கள் செய்து இறைவனை வழிபட்டு பரிகாரம் செய்ததாக கூறுவோர் உண்டு.

அதே கோவில்களுக்கு சென்று ஏழை எளிய மக்களுக்கு தான தர்மம் செய்து அவர்களது மனம் குளிர செய்து வரும் போது அதுவும் பரிகாரம் தான் என்று கூறுவோரும் உண்டு.

இன்னும் சிலரோ இறைவனை வணங்கி படையல் வைத்து வழிபடுவதும் உண்டு.

இங்கே எது பரிகாரம்? இதற்கான பதில் எல்லாமும் பரிகாரம் தான்.கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு அவருடைய துதியை படிக்கும் போது கேட்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத அமைதியும் நம்பிக்கையும் பிறந்து புத்துணர்வையும் உத்வேகத்தையும் கொடுத்து செய்கின்ற செயல்களில் நம்பிக்கையை அதிகரித்து வெற்றிக்கு இட்டு செல்கிறது அல்லவா...

மற்றொரு பக்கம் ஏழைகளின் மனம் குளிரும் போது வாயார வாழ்த்தி நம்மை நெகிழ செய்து மனதை மகிழ்ச்சி கொள்ள செய்கிறார்கள் அல்லவா...

மேற்கூறிய இரண்டுமே பரிகாரம் தான்.அதில் உங்கள் மனம் எதை விரும்புகிறது என்பது உங்களின் கைகளில்.

இருப்பினும் பரிகாரம் என்பது உங்களுக்கும் இறைவனுக்கும் மட்டுமே இடையில் உள்ள ஒரு விஷயம் என்பதையும் உங்களுக்காக இன்னொருவர் பரிகாரம் செய்ய முடியாது என்பதையும் உங்களை வழிநடத்தும் வாய்ப்பை மட்டுமே ஆண்டவன் தருவார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பணம் அதிகம் செலவழித்து செய்யும் பரிகாரங்களை விட மனம் அதிகம் நம்பிக்கை பெறும் பரிகாரம் செய்வதே சிறந்ததாகும்.யாரையும் நம்பி ஏமாந்து நொந்து கொள்வதை விட நாமே பரிகாரம் தேடுவது சிறந்தது ஆகும்.

அதேபோல் ஜோதிட ரீதியாக சில கிரகங்கள் வலுப்பெற பரிகாரம் செய்யும்போது கோவில்களின் மூலவருக்கே முதல் மரியாதை செலுத்த வேண்டும். வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்திய நாதருக்கே முதல் மரியாதை பிறகு தான் செவ்வாய்க்கு. திருநாகேஸ்வரத்தில் நாக நாதருக்கே முதன்மையான மரியாதை செலுத்த வேண்டும். பிறகு தான் ராகு பகவானுக்கு.ஆனால் இன்று பலரும் கோவில் பிரகாரத்தில் உள்ள மூலவர்களை மறந்து நவ கோள்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.அந்த நிலை மாற வேண்டும்.

மொத்தத்தில் மனிதர்களாகிய நாம் அனைவரும் பரிகாரம் செய்வதின் நோக்கம் கர்மாவை குறைப்பது என்பதாக மட்டுமில்லாமல் மனிதம் வளர்ப்பதும் அன்பை கொடுப்பதும் ஆன்மீகம் செழிக்க உதவுவதும் எனப்பல உயரிய நோக்கங்களை உள்ளடக்கியது ஆகும்.அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அன்றாட வாழ்வில் பிறருக்கு செய்யும் சிறு உதவிகள் கூட பரிகாரம் தான். யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாறுவதை விட ஏழைகளுக்கு கொடுத்து மகிழலாம்.நாமே ஏழையாக பிறந்து இருந்தால் பிறர் கண்ணீர் துடைத்து புன்முறுவல் பூக்க செய்யலாம். அதை தான் இறைவன் விரும்புவார்.மந்திரங்களும் துதிகளும் இறைவனுக்காக அர்ப்பணித்து பாடும் போது கேட்கும் போது படிக்கும் போது ஏற்படும் உன்னத உணர்வு நேர்மறை எண்ணங்களை உருவாக்கி உங்களுள் இருக்கும் சிறந்த மனிதனை வெளிக்கொணரும்.

இறுதியில் நாம் அனைவரும் இறைவனுக்கு கடமைப்பட்டவர்களே என்பதால் சிறு மானுட பிறவியை பயனுள்ளதாக மாற்றி நிம்மதியாக இருப்போம் பிறரின் நிம்மதிக்கும் துணை இருப்போம்.

நன்றி...