Saturday, December 21, 2019

இன்று 22-12-2019-ஞாயிற்றுக்கிழமை சபலா ஏகாதசி



இந்த சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.

பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, ஆறுகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது.

ஓ, மன்னர்களில் சிறந்தோனே. யாரொருவர் ஏகாதசியை அனுஷ்டிக்கிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொள்வதால் அடையும் புண்ணிய பலனை ஒருவர் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலாயே எளிதில் அடைவார்.

முன்பு ஒரு காலத்தில் மஹிஸ்மதா என்ற ஒரு புகழ் பெற்ற மன்னர் சம்பவதி என்ற நகரில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனான லும்பகா, பெரும்பாவியாக இருந்தான். அவன் அந்தணர்களையும், வைணவர்களையும், தேவர்களையும் நிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் சூதாட்டத்திலும் விபச்சாரத்திலும் அதிக அளவில் ஈடுபட்டிருந்தான். அதனால் தன் தந்தையான மஹிஸ்மதா மன்னர் அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார். வெளியேற்றப்பட்ட லும்பகா காட்டில் வாழ்ந்தான். இரவு நேரங்களில் தன் தந்தையின் நாட்டு பிரஜைகளிடம் செல்வத்தை அபகரிக்கத் துவங்கினான். அவன் திருடுவதில் ஈடுபட்டிருப்பினும் தங்கள் மன்னனின் மகன் என்பதால் அந்நாட்டு மக்கள் அவனை தண்டிக்கவில்லை. லும்பகா பச்சையான இறைச்சி மற்றும் பழங்களை உண்டு தன் வாழ்க்கையை கழித்தான்.

அக்காட்டில் தேவர்களுக்கு ஈடாக வணங்கத்தக்க ஒரு ஆலமரம் இருந்தது. லும்பகா சில நாட்கள் அம்மரத்தடியில் வாழ்ந்தான். லும்பகா இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கையில் தற்செயலாக இந்த சபலா ஏகாதசி நிகழ்ந்தது. லும்பகா மெலிந்து மிகவும் சோர்வடைந்தான். ஏகாதசியின் முன்தினத்தன்று உணர்விழந்தான். ஏகாதசியன்று நடுப்பகலில் மீண்டும் உணர்வு பெற்றான். மிகுந்த பசியால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்ததால், அன்றைய தினம் லும்பகாவால் எந்த ஒரு விலங்கையும் கொல்லமுடியவில்லை. அதனால் சில பழங்களை சேகரித்து அவற்றை பகவான் விஷ்ணுவிற்கு சமர்ப்பித்தான். அந்நேரம் சூரியனும் மறைந்தது லும்பகா அன்று இரவு முழுவதும் விழித்திருந்தான்.

உண்ணாவிரதம் இருந்து, இரவு விழித்திருந்ததால் லும்பகா தன்னையறியாமலே சபலா ஏகாதசியை அனுஷ்டித்தான். லும்பகாவின் இந்த ஏகாதசி விரதத்தை பகவான் மதுசூதனர் ஏற்றுக்கொண்டார். இந்த ஏகாதசியை அனுஷ்டித்ததன் விளைவாக லும்பகா ஒரு செல்வம் மிக்க நாட்டைப் பெற்றார். மறுநாள் காலையில் ஒரு தெய்வீகக் குதிரையும் லும்பகாவின் முன்தோன்றியது. அவ்வேளையில் வானத்திலிருந்து ஒரு ஓசை வந்தது. ஓ! இளவரசனே, பகவான் மதுசூதனரின் கருணையாலும், சபலா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனாகவும் நீ ஒரு இராஜ்ஜியத்தைப் பெறுவாய். நீ எந்தவொரு சிரமுமின்றி அதனை ஆள்வாய். உன் தந்தையிடம் திரும்பிச் சென்று இராஜ்ஜியத்தை அனுபவிப்பாயாக, இந்த அறிவுரைக் கேற்ப லும்பகா தன் தந்தையிடம் திரும்பிச் சென்று நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அதன் பிறகு லும்பகா அழகிய மனைவியையும் நல்ல மகன்களையும் பெற்றார். இவ்வாறாக லும்பகா மகிழ்ச்சியுடன் நாட்டை ஆண்டு வந்தார். சபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் ஒருவர் இப்பிறவியில் புகழ் அடைந்து, அடுத்த பிறவியில் முக்தி அடைவார். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார்

விரதம் அனுசரிக்கும் முறை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அனைத்து பக்தர்களும் பின்வரும் உணவுப் பொருள்களை ஏகாதசியன்று அறவே தவிர்க்க வேண்டும்: எல்லா விதமான தானியங்கள், பருப்பு, பயிறு வகைகள், பீன்ஸ் போன்ற காய்கள், கடுகு, இவற்றிலிருந்து தயாரித்தவை (கோதுமை மாவு, கடுகு எண்ணெய், இத்யாதி), மற்றும் இவை அடங்கிய உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். பொடி செய்யப்பட்ட நறுமணச் சரக்குப் பொருள்களைப் பார்த்து வாங்கவும். அவற்றில் மாவு கலந்திருந்தால் ஏகாதசியன்று பயன்படுத்தக் கூடாது.

ஏகாதசியன்று சவரம் செய்து கொள்வதும் நகம் வெட்டுவதையும் தவிர்த்தல் அவசியம்.

ஏகாதசி விரதத்தின் உண்மையான குறிக்கோள், வெறுமனே உண்ணாமலிருப்பது அல்ல; கோவிந்தனைப் பற்றிக் கேட்கவும் சொல்லவும் மிகுந்த நேரம் ஒதுக்குவதே. ஏகாதசியன்று போதுமான நேரமுடைய பக்தர்கள் குறைந்தது(108)-முறையும்
அல்லது அதற்கு மேற்பட்ட 25- சுற்று ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே