
தும்பை சர்வ சாதாரணமாக எல்லா இடத்திலும் காணப்படும் ஒரு மூலிகையாகும். இதன் மலர்கள் வெண்ணிறமாக இருக்கும். இம்மலர்களை விநாயக் பெருமானுக்கு சாற்றி வழிபடுவர். இம்மூலிகையின் அனைத்து பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு, நமைச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும். கப நோய்கள், விஷக்கடிகள் போன்றவற்றை குணப்படுத்தும். இனி தும்பையின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.
* மஞ்சள் காமாலை:
தும்பை, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய மூன்று மூலிகைகளின் இலைகளைச் சம அளவு எடுத்து விழுதாக அரைத்து பெரியவர்கள் புன்னைக்காயளவும், சிறியவர்கள் நெல்லிக்காய் அளவும், குழந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவும் பசும்பாலுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு காலை மாலை தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் காலத்தில் உணவில் காரம் மற்றும் புளி சேர்க்கக்கூடாது. அரை உப்பு தான் போட வேண்டும். பால் சாதம் அல்லது மோர் சாதம் சாப்பிடவும்.
* தலைவலி:
நீர்க்கோவை, சீதளம் போன்றவற்றால் சிலருக்குத் தலைவலி ஏற்படும். இதற்கு தும்பை இலைகளைப் பறித்து வந்து கசக்கிப் பிழிய வேண்டும். அவ்வாறு பிழியும் போது வரும் சாற்றில் இரண்டு அல்லது மூன்று துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச வேண்டும். இதனால் சளி, தலைவலி போன்றவை குணமாகும்.
* தேள் கொட்டினால்:
தேள் கொட்டினால் கடுப்பும் வலியும் மிகுதியாக இருக்கும். நச்சுத்தன்மை வேறு அதிகமாக இருக்கும். இதற்கு தும்பை இலைச்சாற்றில் 5 துளிகளுடன் சிறிது தேன் சேர்த்து தேள் கொட்டிற்கு ஆளானவருக்குக் கொடுக்க வேண்டும். தேள் கொட்டிய இடத்திலும் தும்பைச் சாற்றை ஊற்றித் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் நீங்கிவிடும். கடுகடுப்பும் குடைச்சலும் நீங்கி விடும். மற்ற விஷக்கடிகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.
* பாம்புக்கடி:
பாம்பு கடித்து விட்டால், கால் கோப்பை தும்பை இலைச் சாற்றை உடனே குடிக்கக் கொடுக்க வேண்டும். குடித்த சிறிது நேரத்தில் பேதியாகும். அதைத் தொடர்ந்து கபத்துடன் வாந்தியும் எடுப்பார். நச்சு முறியும். சில்லிட்ட உடல் சூடுபெறும்.
பொதுவாக பாம்பு கடித்து விட்டால் உடல் குளிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். உடல் மீண்டும் சூடு பெறத் தொடங்கினால் தான், நச்சு முறிந்துவிட்டது என்று பொருளாகும். அத்துடன் வேலை முடிந்து விட்டது என நினைத்து விடக்கூடாது.
அதன்பின்னும் பாம்புக்கடிக்கு ஆளானவரை சுமார் ஆறு மணி நேரம் தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் மூன்று நாட்கள் வரை புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு மற்றும் மிளகு ஆகியவற்றைப் போட்டு பொங்கல் செய்து அதை மட்டுமே உணவாக உண்ண வேண்டும்.
ஒருவேளை பாம்பு கடித்தவர் மயக்கமடைந்து விட்டால் தும்பை இலைச்சாற்றில் சில துளிகளை பாம்புக்கடி பட்டவரின் மூக்கில் விட்டு ஊதிவிட மயக்கம் தெளிந்து எழுந்துவிடுவர். உடனே தும்பை இலைச்சாற்றை கால் கோப்பை குடிக்கக் கொடுக்க வேண்டும். கடிபட்ட இடத்திலும் சாற்றை தாராளமாக ஊற்றித் தேய்த்து விட வேண்டும் அல்லது இலைகளை அரைத்து பற்றுப் போடலாம்.
* தலை மற்றும் கண் நோய்கள்:
தும்பைப் பூக்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி எடுத்து அத்தைலத்தை பத்திரப்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இத்தைலத்தைத் தலையில் தேய்த்து ஊறவைத்து தலைமுழுகி வர, தலையில் நீர்க்கோர்த்தல், மண்டைக்குத்து, தாங்க முடியாத தலைவலி, கண்நோய்கள் விலகும்.
* குழந்தைகளின் வயிற்றுக் கோளாறு:
தும்பை மலர்ச்சாறு 4 துளி, உத்தாமணி இலைச்சாறு 8 துளி, மிளகுத்தூள் சிறிது ஆகிய மூன்றையும் சேர்த்து தேனில் குழைத்து வயிற்றுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மிக விரைவில் அவை குணமாகும். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்.