Tuesday, July 16, 2019

ஜோதிடத்தில் ஒருவரின் ஆயுளை அளவிடுவது எவ்வாறு?




பிறப்பும் ,இறப்பும் சாட்சாத் அந்த மூலப்பரம்பொருளின் கையில் உள்ளது.

இருந்தாலும் ஜோதிட விதிப்படி ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

பொதுவாக ஜோதிடத்தில் சரம் ,ஸ்திரம் ,உபயம் என மூன்று லக்னம் உள்ளன.

சனி ஆயுள் காரகன் என்ற அமைப்பை பெறுவார் .

அது போல் ஒரு ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்றும் அதன் அதிபதி ஆயுள் ஸ்தானாதிபதி என்றும் அழைக்கப்படுவார்.

நூறு வருடம் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என அனைவரும் வாழ்த்தினாலும் இன்று இருக்கும் காலகட்டங்களில் 60 வயதே ஆட்டம் காண வைக்கிறது.

பாலாரிஷ்டம் ,அற்பாயுள் ,மத்திம ஆயுள் ,தீர்காயுள் என ஆயுளை வகைப்படுத்தலாம்.

பிறந்த உடனே அல்லது பிறந்த சில ஆண்டுகளில்
(12 வருடங்களில்)இறப்பது பாலாரிஷ்ட தோஷம் எனப்படும்.

30 வயதுவரை அற்பாயுள் என்றும் ,60 வயது வரை மத்திம ஆயுள் என்றும், 80,
80 ஐ தாண்டியது இதை தீர்க்காயுள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக சர லக்னத்திற்கு இரண்டாம் இடமும் ஏழாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளாக வருவர்.

ஸ்திர லக்னத்திற்கு மூன்றாம் இடமும் எட்டாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளை வருவர்.

உபய லக்னத்திற்கு 7இடமும் பதினொன்றாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதி மாரகாதிபதியாவார்கள்.

மாரக ஸ்தானத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் அந்த வீட்டு அதிபதியின் பலனை எடுத்து செய்வதால் அவர்கள் சுப நிலையில் இல்லாத போது மரணத்தை தருவார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஆயுளின் வலுவைத் தீர்மானிப்பதற்கு லக்னாதிபதி ,எட்டாம் அதிபதி ,சனி, லக்னாதிபதியுடன் ராகு கேதுக்கள் மிக நெருங்கிய நிலையில் சுபத்தன்மை அற்று இருப்பது,பாதகாதிபதி ஆகியவை நிச்சயமாக ஆராயப்பட வேண்டும்.

மேலும் மாரக திசைகள் ஒருவருக்கு நடக்கும் போது ஏழரை சனி, அட்டமச் சனி குறிக்கிட்டால் கண்டிப்பாக மாரகம் மற்றும் அதற்கு சமமான கண்டம் உண்டு.

அது போல் ஒரு ஜாதகத்தில் சனி அம்சத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைவது நல்லதல்ல.

கிரகண அமைப்பில் இருக்கும் போது லக்னாதிபதி ராகுவுடன் நெருக்கமாக இருப்பதும் நல்லதல்ல.

ஆயுள் ஸ்தானாதிபதி நீ்சம் ஆவதும் நல்ல நிலை அல்ல.

அற்ப ஆயுளை உடைய மார்க்கண்டேயனுக்கு அபயமளித்து என்றும் 16 என இறைவன் அருளினான்.

ஆஸ்பத்திரியில் அனைவரும் கைவிட்ட உடன் இறைவனை மட்டும் நம்புங்கள் என மருத்துவரும் கூறி செல்கிறார்.

ஆயுள் தேவரகசியம். இங்கு கூறப்பட்டுள்ளது அவற்றில் ஒரு துளியே.

பிறப்பையும் இறப்பையும் அறிந்தால் மனிதன் இறைவன் ஆகிவிடுவான்.

இறக்கும் நாளை தெரிந்து கொண்டால் வாழ்வே நரகமாகிவிடும்.

ஓம் நமசிவாய