Wednesday, July 24, 2019

தேய்பிறை அஷ்டமி .பைரவருக்கு உகந்த நாள். பைரவர் பரிகாரம் வழிபாட்டு முறை…


பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி. பொதுவாக நாம் அஷ்டமியன்று எந்த நல்ல காரியங்களையும் செய்வதில்லை. இறைவனின் ஆணைப்படி உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் அனைத்து ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியைச் செய்பவர்கள் அஷ்ட லட்சுமிகள்.
எந்த ஒரு செயலிலும் மனிதர்களாகிய நாம் அதில் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க தான் முடியுமே தவிர, அச்செயலின் பலன் இறைவன் நினைத்த படி தான் நடக்கும் என்பது அனுபவசாலிகளின் வாக்கு. இன்று பலருக்கும் குழந்தைப்பேறின்மை, சொத்துக்களை இழப்பது, திருமண தடை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிவபெருமானின் அகோர ரூபத்தில் இருந்து தோன்றியவர் “பைரவர்”. மேற்கண்ட பிரச்சனைகளுக்குகாக சில குறிப்பிட்ட முறைகளில் பைரவருக்கு பரிகாரம் செய்து வழிபடுவதால் அப்பிரச்னைகள் நீங்கும்.
பைரவர் பரிகாரம்
திருமணம் நடக்காமல் தடையேற்படுவது அல்லது திருமணம் கால தாமதம் ஆவது போன்ற விடயங்களால் கவலைப்படுபவர்கள், ஒரு ஒன்பது ஞாயிற்று கிழமைகளில் சிவன் கோவில்களில் இருக்கும் பைரவமூர்த்தியை, ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், திருமண தடை தாமதம், சரியான வரன்கள் அமையாமை போன்றவை நீங்கும்.
ஆறு சனிக்கிழமை தினங்களில், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஆறு நெய்தீபங்களை பைரவருக்கு ஏற்றி, வழிபடுவதால் சனியால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்றவையின் தாக்கங்கள் குறையும்.
திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை பேறில்லாமல் தவிக்கும் தம்பதியினர், ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்களில், பைரவ மூர்த்திக்கு செவ்வரளி பூக்களை மாலையாக சாற்றி, செவ்வாழைப்பழங்களை நிவேதனமாக வைத்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டு பின்பு ஏழை குழந்தைகளுக்கு அன்னதானமளித்தால் பைரவ மூர்த்தி நன்மக்கள் பேற்றை அளிப்பார். இந்த பரிகார வழிபாடு நமது உடல் நோய்கள் மற்றும் குடும்பத்தில் இருக்கும் வறிய நிலையையும் போக்கும் தன்மை கொண்டதாகும்.
சொத்துக்களை இழந்தவர்கள் மற்றும் தங்களுக்கு மிக அவசியமான பொருட்கள், உடமைகளை இழந்தவர்கள் 27 மிளகுகளை எடுத்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து, மண்ணாலான அகல்விளக்கில் அம்முடிப்பை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரிபோட்டு பைரவரின் சந்நிதியின் முன்பு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி 27 தினங்கள் தொடர்ந்து செய்து வர இழந்த சொத்துகளும், பொருட்களும் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். தினந்தோறும் உங்கள் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு பிஸ்கேட், புரை அல்லது வேறு ஏதேனும் உணவை கொடுத்துவருவது பைரவ சாபத்தை நீக்கும். இதனால் உங்கள் வீட்டில் துஷ்ட சக்திகள் நுழைவது, திருடர்கள் பயம் போன்றவை நீங்கும்.
சொர்ண பைரவரிடம், சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு இவர்கள் விநியோகம் செய்து வருகிறார்கள்.அப்படி அவர்கள் பெற்ற சக்திகள் குறைய குறைய, ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்களது சக்தியை அஷ்ட லட்சுமிகளும் பெருக்கி கொள்ளுகின்றார்கள். அஷ்டமி தினத்தன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவர் வழிபாட்டில் ஈடுபட்டு விடுவதால், அவர்களால் அஷ்டமியன்று நடைபெறும் நல்ல காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே, அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடிற்கு சிறப்பானது. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவரை வணங்குவதற்கு மிகவும் சிறந்த நாள்.
பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், மாதுளை பழ முத்துக்களுடன் தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம் முதலியவை வைத்து வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சாதாரணமாக, நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். மிக அரிதாக, சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு, இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனிதோஷம் நீங்க பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.
தேய்பிறை அஷ்டமி தினத்தில் பொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் இந்த 12 திருப்பெயர்களை கூறி பைரவ வழிபாட்டை செய்யவும்:
1. ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
2. ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
3. ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
4. ஓம் பக்தப்ரிய நமஹ
5. ஓம் பக்த வச்ய நமஹ
6. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
7. ஓம் ஸித்தித நமஹ
8. ஓம் கருணாமூர்த்தி நமஹ
9. ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
10. ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
11. ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
12. ஓம் ரசஸித்தித நமஹ
சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் இந்த 12 திருப்பெயர்களை மிக முக்கியமானதாக சொல்கிறார்கள்.
இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் அனைத்து பொற்குவியலையும் வழங்குவார் என பைரவ கல்பம் எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து சொல்லி வந்தால், மந்திரமாகவும், அப்படியே பெயர்களை மட்டுமே சொல்லி வந்தால் ஜெபமாகவும் கொள்ளப்படும்.