Wednesday, July 10, 2019

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..



தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான், கரும்பூலா.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா மூலிகை எண்ணைய்:

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றையும், இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும். இந்த எண்ணையை, வெயிலில் வைக்காமல், காய்ச்சியும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, எண்ணைகளை காய்ச்சி பயன்படுத்துவதைப் போல, சூரியப்புடம் எனும் முறையில் பயன்படுத்துவது, வேறொரு முறையாகும்.