Sunday, July 14, 2019

ஸ்ரீசங்கரரின்_கோவிந்தாஷ்டகம்: #தமிழில், விளக்கவுரையுடன் #தினம் இரண்டு வீதம்🌹🙏🌹



இடையறாத தியானத்தால்
வசப்பட்ட மனத்தினால்,
குணங்களும் செய்கைகளுமற்ற
பரஞ்சோதி ஒன்று உள்ளதாமே,
அதனை யோகிகள் காண்பார்களாகில்,
காணட்டும்.
ஆனால் நமக்கோ
காளிந்தியின் மணல்திட்டுகளில் ஓடுகிறானே
நீலச்சிறுவன்
அவனே என்றென்றும்
விழிகளுக்கு அதிசயமாய்
விளங்கட்டும்.
(1)

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்
இடைவெளியற்றது (அனாகாசம்)
இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)
எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில்
ஓடிவிளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்
மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்
உருவமின்றியும்
உலகே உருவாகவும்
திகழ்வோன்.
ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்
தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை
வணங்குவீர்.

(2)

இங்கு மண்ணைத் தின்கிறாயே என
யசோதை அடிக்க வருகையில்
குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில்
லோகாலோக பர்வதங்களுடன் கூடிய
பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன்.
உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும்
பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை
வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய, அஸ்தமன பர்வதங்கள் உண்டு. அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால், அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன. பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல், அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது – உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி தன்னொளியால் தானே பிரகாசிப்பவன் (லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:). உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே அதனிடம் கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன. கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை
நிலவு நட்சத்திரங்கள் இல்லை
இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம்
அவன் ஒளிர்கையில்
அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே
இவையனைத்தும் ஒளிர்கின்றன.