Wednesday, June 12, 2019

சுக்கிரன்


நவ கிரகங்களில் மனிதர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஒரு கிரகத்தால் தர முடியும் என்றால் அது சுக்கிரனாக மட்டுமே இருக்க முடியும்..

காதல்,திருமணம், தாம்பத்தியம்,அழகு, கலைகள், நளினம் ,மென்மை, மகிழ்ச்சி, வசதி,வாகனம், வீடு, சொகுசு என ஒரு சராசரி மனிதனின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என்றால் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்..

கொட்டி கொடுப்பவர்களில் முதன்மையானவர்... சுக்கிரன் லக்கின சுபராக இருந்து ஜாதகத்திலும் வலுவான அமைப்பில் இருந்து சரியான வயதில் தசா புக்தியும் வந்தால் ஒருவனை எந்த அளவுக்கு உயர்த்துவார் என்பதை பார்த்தவர்களுக்கு தான் தெரியும்..அதுவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு தான் அதிக ஆண்டுகள் தசை நடத்தும் உரிமை கொடுக்க பட்டுள்ளது... கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடத்துவார்..

சுக்கிரனுக்கு 3,8ம் பாவம் மட்டுமே மறைவு ஸ்தானம்..கால புருஷனின் 6ம் வீட்டில் நீசம் பெறுவதாலும்12ல் உச்சம் பெறுவதாலும் அதை மறைவு ஸ்தானமாக குறிப்பிடவில்லை..

மகர,கன்னி லக்கினங்களுக்கு முதன்மையான யோகம் தருவார்...
மிதுனம்,கும்பம்,ரிஷபம்,துலாம் லக்கினங்களுக்கும் சிறப்பாக வாழ்க்கையை தன் தசா புக்தியில் கொடுத்து அருளுவார்...

கடக,சிம்மம்,மேஷம் ,விருச்சிகத்திற்கு கலவையாக பலன் தருவார்..இருப்பினும் சிம்ம லக்கினத்திற்கு தொழில் ரீதியாக பலன் தருவார்...

தனுசுவிற்கு பத்து வருடம் கடுமையான பலன்கள் குடுத்து அடுத்த பத்து ஆண்டுகள் நன்மைகளை செய்வார்..

சுக்கிர தசை வராத மீன லக்கின காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

சுக்கிரன் கெட்ட அமைப்பில் இருக்கும் போது, அல்லது ஆதிபத்திய விசேஷம் இல்லாத போது அல்லது பள்ளி கல்லூரி பருவத்தில் வரும் போது உணர்ச்சிகளை தூண்டி தவறு செய்ய வைத்து மனம் நோக செய்வார்...அதே போல் உடலின் மர்ம உறுப்புகளிலும் தொற்று உருவாக்க முயல்வார்....அதனால் தான் குட்டி சுக்கிரன் குடும்பம் கெடுப்பான் என்று கூட சிலர் கூறுவார்கள்..

இருப்பினும் கலைகளுக்கும் சுக்கிரனே காரகர் என்பதால் இசை,நடிப்பு,நடனம்,ஓவியம், பாடல்,கவிதை,எழுத்து மேலும் பல கலைகளில் நிபுணத்துவமும் அளிப்பார்...

கஞ்சனூர் சிவன் கோவில்,திருவரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகியவை பரிகார ஸ்தலங்கள்..

பொது பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் கன்னி பெண்களுக்கு உதவி செய்தல்,வெள்ளை மொச்சை யை உணவில் சேர்த்து வருவது, ஆற்று நீரில் மல்லிகை மலர்களை தூவுவது,வாசனை திரவியங்கள் அதிகம் பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யலாம்..