Tuesday, June 18, 2019

தியானம் எல்லாம் வயசானவங்க செய்வது, இல்லை என்றால் வேலை வெட்டி இல்லாதவங்க செய்வது, நமக்கு அதுக்கு எல்லாம் எங்கே நேரம் என்று எண்ணியது உண்டா?


உங்கள் நெருங்கிய உறவுகள் கூட உங்களை புரிந்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் கொண்டுள்ளவரா நீங்கள், நாம் என்ன செய்தாலும் அது நல்லதற்கு பதிலாக வேறு எதிலாவது கொண்டு விட்டு விடுகிறது என்று கவலைப்படுபவரா நீங்கள், உங்கள் மனைவி, குழந்தைகளுடன் இன்னும் சிறப்பான புரிந்து கொள்ளுதலுடன் வாழ விரும்புவாரா நீங்கள், குழந்தைக்கு நல்ல வழியை காண்பிக்க விரும்புபவரா நீங்கள்? இதை எல்லாம் விடுங்க, மகிழ்ச்சியாக வாழ விரும்புபவரா நீங்கள்?

தியானம் என்பது எங்கோ ஒரு மரம் அல்லது மலையை தேடிச்சென்று அங்கே அமர்ந்து கொண்டு செய்வது அல்ல. நாம் இருக்கும் இடத்தில், இருக்கும் சூழலில் இருந்து கொண்டே மகிழ்ச்சியாய் வாழ்ந்து, முடியுமென்றால் பிறரும் அந்த மகிழ்ச்சியை அடைய வழிகாட்டியாய் வாழ்வது என்றும் சொல்லலாம். பிரச்சினைகளும், ஆரவாரமும் மிகுந்த இந்த உலக சூழலில் நமக்கு எங்கே அமைதி இருக்கிறது.

ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது அமைதியில் இருந்தால் ஒழிய குடும்பத்தையோ அல்லது தொழிலையோ எளிமையாக கையாள்வது கடினம்.

மிக பெரிய விஞ்ஞானிகள் கூட தாங்கள் அமைதியாக இருந்த ஒரு சில விநாடிகளிலேயே பல அறிய விசயங்களை நமக்கு விட்டு சென்று உள்ளனர். அமைதியாய் இருக்க தினமும் ஒரு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். உங்களுடைய அன்றாட சூழலை எளிமையாக கையாள உங்களுக்கு அமைதி வேண்டும். நீங்கள் சிறிய அளவிலாவது செய்யும் தியானத்தின் மூலமே அமைதி கிடைக்கிறது. அதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று மேம்போக்காக இருந்து விடாதீர்கள். இன்றைய கால கட்டத்தில் தியானம் நம் ஒவ்வொருவருக் கும் மிக அவசியமான ஒன்று.

எந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இறைவனுக்காக நீங்கள் வேறு எதுவும் செய்ய இயலாது. செய்யும் கடமைகளை மன நிறைவுடன், ஈடுபாட்டுடன், இதை இறைவனுக்காக செய்கிறேன் என்று எண்ணியே செய்யுங்கள்.அதுவே வேலை நேரத்தில் தியானம் செய்வதற்கு சமம். இவ்வுலக கடமைகளில் இருந்து விலகி, நான் வெறும் தியானம் மட்டுமே செய்வேன் என்று சொல்வது சரியல்ல. இவ்வுலகில் வாழும் வரை கடமைகளை செய்தே தீர வேண்டும். இதுவே இறை விருப்பம். உணவு, உறக்கம் இவைகளுக்கு எப்படி தினமும் நேரம் ஒதுக்குகிறோமோ, அதை போல் தியானம் செய்யவும் காலை மற்றும் மாலை நேரம் ஒதுக்க வேண்டும். இதை கட்டாயம் பின்பற்றுவீர்களானால் உங்கள் இலக்கை அடைவது உறுதி. உங்கள் உடல் தளர்வாக உள்ளபோதும் சிறிது நேரமாவது தியானத்தில் அமருங்கள். அதன் மூலம் நீங்கள் பெறும் சக்தி, நாள் முழுவதும் உங்களை சிறப்பாக இயங்க வைக்கும்.

ஜெய் மகரிஷி!....♥ நன்றி.