Saturday, June 15, 2019

சனி



நவகிரகங்களில் அதிகம் பேசப்படும் கிரகம் சனி...ஆம் ஆயுள் காரகன்,தொழில் காரகன்,துன்பங்கள் தடைகள் ஏற்படுத்துவதில் நிபுணர் என்றால் பேச்சு இல்லாமலா இருந்து விடும்...

மிக முக்கியமான கிரகம் சனி..ஒருவனுக்கு இன்பத்தின் அருமை தெரிய வேண்டும் என்றால் துன்பப்பட வேண்டும்.. கலியுகத்தில் அப்பாவித்தனம் என்னும் அறியாமையில் இருந்தால் நயவஞ்சகர்களிடம் ஏமாந்து அறிவை வளர்க்க வேண்டும்.. ஆணவம் என்னும் செருக்கில் திரிந்தால் அடி வாங்கி அவமானம் அடைந்து பணிவு என்னும் குணத்தை பெற வேண்டும்...பணம் பெரிதல்ல குணம் பெரிது என்பதை உணர வேண்டும்.. நிறம் முக்கியமல்ல நல்ல மனமே முக்கியம்..ஆடம்பரத்தை விட அத்தியாவசியமே முக்கியம்...

மாளிகையில் வாழ்வது மட்டுமே வாழ்க்கை அல்ல மரத்தடியிலும் வாழ்க்கை உண்டு என ஒரு மனிதனுக்கு பல்வேறு படிப்பினைகளை அவர் கற்று தருவார்...

இப்படி சனி பகவான் பாவப்பட்ட மனிதர்களுக்கு நடத்தும் பாடம் ஏராளம்..

கருப்பு நிறத்தில் இருக்கும் அனைத்திற்கும் அவரே அதிபதி...தொழிலாளர்,மாற்று திறனாளிகள்,முதியவர்கள் ,யாசகம் பெற்று வாழ்பவர்கள் என அனைவரும் அவருக்கு கீழ் வருவார்கள்...எண்ணெய் வளம்,இரும்பு,தொழில் நுணுக்கம்,பொறுமை என அனைத்தும் அவரையே குறிக்கும்..

ஜோதிடத்தில் சனி தசை என்பது 19 வருடம்..சனி பகவான் நல்லது கெட்டது எதையும் பொறுமையாக நிறுத்தி நிதானமாக தருவார்..உங்கள் கர்மாவை உங்களுக்கு உணர்த்துவார்...

அவர் ஸ்தான பலம் பெறும் 3,6,11ல் நல்ல பலன் தருவார்..ஆனாலும் ஒரு சுப கிரகம் பார்ப்பது நல்லது..
எளிமை,பொறுமை ஆகிய குணங்களை மிகவும் விரும்புவார்...

லக்கின வாரியாக எடுத்து கொண்டால் சுக்கிரனின் ரிஷப துலாம் லக்கினங்களுக்கு முதல் தர நன்மைகள் செய்வார்..தன் சொந்த மகர ,கும்பத்திற்கு நன்மைகள் மற்றும் சிறிய பாடங்களையும் சேர்த்து செய்வார்..

புதனின் மிதுன கன்னிக்கு பாதி நன்மை மற்றும் பாதி தீமை செய்வார்..ஒரு துர்ஸ்தானத்தையும் அவர் வகிப்பதால் அவ்வாறு உள்ளது...

செவ்வாயின் மேஷ விருச்சிக லக்கினங்களுக்கு இருக்கும் இடத்தை பொறுத்து செய்வார்..இருந்தாலும் தீய பலன்கள் ஏற்பட கொஞ்ச வாய்ப்பு உள்ளது..

குருவின் தனுசு மீனத்திற்கு கொஞ்சம் நன்றாக பலன் தருவார்..புதன் செவ்வாய் லக்கினங்களுக்கு செய்வதை விட இங்கே பலன்கள் நன்றாகவே இருக்கும்..

கடைசியாக சூரியன் சந்திரனுக்கு உட்பட்ட கடக சிம்ம லக்கினங்களுக்கு...சனி தசை வராமல் இருப்பது நல்லது... வரவில்லை என்றால் அல்லது குழந்தை பருவத்தில் வந்து சென்றுவிட்டால் நிம்மதி பெருமூச்சு விடலாம்..

சனி ராகு, சனி சந்திரன்,சனி சூரியன் சேர்க்கைகள் இல்லாமல் இருப்பது நல்லது(இருந்தால் பயம் வேண்டாம்.. விதி விலக்குகள் ஏராளம் உள்ளன)..

பார்வை பொறுத்த வரையில் சனிக்கு 7ம் பார்வை தவிர்த்து 3 மற்றும் 10ம் விசேச பார்வைகள் உண்டு...

பரிகாரம் என்று பார்த்தால் இயலாதவருக்கு உதவுவது, பறவைகள் மீது அன்பு செலுத்தி உணவு குடிநீர் வழங்குவது,தொழிலாளிகளை துன்புறுதாமல் இருப்பது, மனிதர்களிடம் நிறம் மற்றும் சாதி ரீதியாகவோ அல்லது வேறு காரணிகளை கொண்டோ ஏற்ற தாழ்வு பாராமல் இருப்பது, இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு,திருநங்கைகளுக்கு உதவுவது,அடியார்களுக்கு உணவு அளிப்பது, ஏழைகள் வாழ்விற்கு நல்வழி காட்டுவது நல்ல பரிகாரம் ஆகும்..

கால பைரவர் வழிபாடு(சனி மற்றும் அட்டமி திதிகளில்),சிவன் விஷ்ணு பகவான் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமை செய்து வர நன்மைகள் கிடைக்கும்...

சனியை என்றுமே தீயவராக கருத கூடாது.நமக்கு வாழ்வை கற்று தந்து மோட்சத்திற்கு வழி காட்டும் ஆசனாகவே கருத வேண்டும்... ஆண்டவன் சொன்னதை அவர் செய்கிறார்..அவ்வளவு தான்..