
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு.
நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.
இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும்.உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.
அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.
உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.
தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.
வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம்.
குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.
அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள்.
இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.